Published : 31 Oct 2016 10:27 AM
Last Updated : 31 Oct 2016 10:27 AM

கார்ல் தியடோர் வில்ஹெம் வியர்ஸ்ட்ரஸ் 10

ஜெர்மானிய கணிதமேதை

‘நவீன கணிதப் பகுப்பாய்வின் தந்தை’ எனப் போற்றப்பட்ட ஜெர்மானிய கணிதமேதை கார்ல் தியடோர் வில்ஹெம் வியர்ஸ்ட்ரஸ் (Karl Theodor Wilhelm Weierstrass) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் வெஸ்ட்பாலியா மாகாணம் ஆஸ்டன்ஃலெப்டு நகரில் (1815) பிறந்தவர். தந்தை, அரசு அதிகாரி. கார்ல் சிறுவயதிலேயே கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது கணிதத் திறன் ஆசிரியர்களையும் வியக்க வைத்தது.

* தன் பிள்ளை, அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்க வேண்டும் என்று விரும்பிய தந்தை, பான் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொருளாதாரம், நிதி தொடர்பான கல்வி கற்க வைத்தார். இவரது ஆர்வம் கணிதத்தில் மட்டுமே இருந்ததால், எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. அதனால், பட்டம் பெறாமலேயே வெளியேற நேரிட்டது.

* மகனின் கணித ஆர்வத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட தந்தை, மூன்ஸ்டர் கணிதப் பயிற்சி அகாடமியில் இவர் பயில ஏற்பாடு செய்தார். 1841-ல் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். வேலை போக மீதி நேரங்களில் கணித ஆராய்ச்சியில் மூழ்கினார்.

* கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், தாவரவியல், வரலாறு, ஜெர்மன் மொழி மற்றும் ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். நுண்கணிதம் குறித்து ஆராய்ந்தார். நுண்கணித மாறுபாடுகள் தேற்றத்தைச் சீரமைத்தார்.

* நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனால், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல பகுப்பாய்வு தேற்றங்களைக் கண்டறிந்தார். பல தேற்றங்களை ஆராய்ந்து நிரூபித்தார். பல்வேறு கணிதத் தீர்வுகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன.

* தான் கண்டறிந்த பல்வேறு கணிதத் தீர்வுகளைக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். இவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. இவரது நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது கணித ஆராய்ச்சிகள் மற்றும் அதிசயிக்கத்தக்க திறன்களால் உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.

* ஜெர்மனியின் செல்வாக்குமிக்க கணித மேதையாகத் திகழ்ந்தார். ‘தலைசிறந்த ஆசிரியர்’ என்று மாணவர்களால் போற்றப்பட்டார். ‘அல்பேலியன்’ சார்பு கோட்பாட்டுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கினார். இது இவரது சாதனைகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

* வகையிடத்தக்க சார்பு, தொடர்ச்சி, கன்வர்ஜன்ஸ் ஆகிய பிரிவுகளில் முதன்முதலாக அடிப்படைக் கருத்துருக்கள் பற்றி விரிவான விளக்கம் அளித்தார். உயர் நீள்வட்ட தொகையீடுகளின் நேர்மாற்றங்களுக்கான தீர்வுகளை 1854-ல் வழங்கினார். அது இவரது கணித ஆய்வுகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

* பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தலைமைப் பொறுப்பை 1856-ல் ஏற்றார். அப்போது, தன் சகாக்களுடன் சேர்ந்து அந்தப் பல்கலைக்கழகத்தை கணிதம் பயில்வதற்கான தலைசிறந்த கல்வி நிறுவனமாக உயர்த்தினார். 1864-ல் ஃபிரெட்ரிக் வில்ஹெம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். ராயல் சொசைட்டியின் உறுப்பினராக செயல்பட்டார்.

* கோனிஸ்பர்க் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கமும் பெற்றார். நவீன சார்பு தேற்றத்தை உருவாக்கியதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய கணித மேதை கார்ல் தியடோர் வில்ஹெம் வியர்ஸ்ட்ரஸ் 82-வது வயதில் (1897) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x