Published : 20 Oct 2016 10:04 AM
Last Updated : 20 Oct 2016 10:04 AM

வீரேந்தர் சேவாக் 10

இந்திய கிரிக்கெட்வீரர்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் (Virender Sehwag) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*தில்லியில், நஜஃப்கட் என்ற இடத்தில் பிறந்தவர் (1978). தந்தை, தானிய வியாபாரி. ஆரம்பக் கல்வி முடித்து, விகாஸ்பூர் மேல் நிலைப்பள்ளியிலும் பின்னர் ஜாமிய மில்லியா இஸ்லாமிய ஆண்கள் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

*படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதில் சச்சின் டெண்டுல்கராக வேண்டும் என்ற லட்சியம் கொண் டிருந்தார். பின்னாளில் ‘நிஜாஃபர்கட் டெண்டுல்கர்’, ‘தி லிட்டில் டெண்டுல்கர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

*1998-ல் ஒருநாள் போட்டிகளிலும், 2001-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார். இவரது டைமிங் அதிசயிக்கத்தக்கது, ஆட்டத்தில் பதற்றமான சூழலாக இருந்தாலும் சரி, வலிமைமிக்க எதிரணியோடு விளையாடும்போது சரி, பதற்றிமின்றி விளையாடுவார்.

*சிறந்த ஆஃப்-ஸ்பின் பவுலரும்கூட. சாதனை புரிய வேண்டும் என்பதற்காகத் தன் அதிரடி ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஒருமுறை 195 ரன்கள் இருக்கும்போது நிதானமாக ஆடி, இரட்டை சதம் அடிக்கலாம் என்று நினைக்காமல் அடுத்த பந்தில் சிக்சருக்கு முயல, அவுட் ஆனார். ஆனால் அதற்காகக் கவலைப்படவில்லை, இந்த அதிரடி மன்னர்.

*‘வீரு’ என்று சக வீரர்களாலும் ரசிகர்களாலும் நேசத்துடன் அழைக்கப்படும் இவர், இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராகப் பாராட்டப்பட்டவர். ஒரு இன்னிங்சில் அதிக ரன்களைப் பெற்ற சாதனையாளர். 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களையும், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ரன்களையும் எடுத்தார்.

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் 300 ரன்கள், இலங்கைக்கு எதிராக 2009-ல் 207 பந்துகளில் 250 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக ரன்கள் எடுத்தது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்தது, சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தது, சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 200 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனைகளோடு, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக மூன்று முறை முச்சதங்கள் அடித்த சாதனையையும் படைத்தவர்.

*ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், 20/20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த ஒரே வீரர். பத்ம விருது, அர்ஜுனா விருது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பலமுறை தொடர் நாயகன் விருது, ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றவர்.

*இரண்டு முறை ‘விஸ்டன் முன்னணி பேட்ஸ்மேன்’ என்ற கவுரவம் (இந்த கவுரவம் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர்) வழங்கப்பட்டது. துணிச்சல், வலிமை, திறன், தெளிவு இவை அனைத்தும் சேர்ந்த இவரது விளையாட்டை ‘சேவாக் பிராண்ட்’ என்று விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள்.

*‘ஒவ்வொருமுறை நான் ஆடும் போதும் இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்பார். சைவ உணவு பழக்கம் உடைய இவர், சைவ உணவகம் ஒன்றின் உரிமையாளர்.

*‘நவாப் ஆஃப் நஜஃப்கட்’, ‘ஜென் மாஸ்டர் ஆஃப் மாடர்ன் கிரிக்கெட்’ என்றெல்லாம் போற்றப்படும் வீரேந்திர சேவாக், இன்று 39வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது இவரது பங்களிப்பு கிரிக்கெட் வர்ணனையாகத் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x