Published : 27 May 2016 11:22 AM
Last Updated : 27 May 2016 11:22 AM
முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான ரவி சாஸ்திரி (Ravi Shastri) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பம்பாயில் பிறந்தவர் (1962). தந்தை ஒரு மருத்துவர். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிகளுக்கு இடையே நடந்த பல போட்டிகளில் வென்றுள்ளார்.
# ஆர். ஏ. போடார் கல்லூரியில் வணிகம் பயின்றார். கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
# முதலில் பந்து வீச்சாளராக ஆடத் தொடங்கி, படிப்படியாக பேட்ஸ்மேனாகவும் திறன் வாய்ந்த பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகப் பரிணமித்தார். நியுசிலாந்துக்கு எதிராக முதன் முதலாக ஆடிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
# வலது கை ஆட்டக்காரரான இவர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். ஒரு பேட்ஸ்மேனாக ‘சப்பாத்தி அடி’ (பிளிக் ஆஃப் தி பேட்ஸ்) இவரது தனி அடையாளமாகத் திகழ்ந்தது.
# 1981-ல் இரானி கோப்பையில் 9-101 என்ற கணக்கில் அவர் விக்கெட்டுகளை சாய்ந்தது சுமார் 20 ஆண்டுகாலம் முறியடிக்கப்படாத சாதனையாக நீடித்தது. கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் சதமடித்தார்.
# இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் புகழ்பெற் றார். 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டி களிலும் அபாரமாக ஆடினார். அதே ஆண்டு 25 வயதினருக்கு கீழ் உள்ள இந்திய அணிக்குத் தலைமை ஏற்றார். இவரது தலைமை யில் இங்கிலாந்தை இந்தியா, இன்னிங்க்ஸ் வெற்றி கண்டது.
# கட்டாக்கில் கவாஸ்கருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்து உலக சாதனை புரிந்தார். அப்போதிலிருந்து இந்த இணை, வெற்றி இணையாக பல போட்டிகளில் நீடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கிர்மானியுடன் இணைந்து எடுத்த 235 பார்ட்னர்ஷிப் ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இது இன்றளவும் ஏழாவது விக்கெட்டுக்கான தேசிய சாதனையாக நீடிக்கிறது.
# மேலும் முகம்மது அசாருதீனுடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்பாக 214 ரன்களும் கூட மற்றொரு சாதனையாகவே நீடிக்கிறது. 123 பந்துகளில் 113 நிமிடங்களில் அவுட்டாகாமல் இரட்டை சதமடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமான இரட்டை சதமாகப் பெயர்பெற்றது, ஒரே ஓவர்களில் ஆறு சிக்சர்கள் அடித்தது, ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம் பெற் றது என இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
# இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அடிக்கடி அவதிப்பட்ட இவர் 1994-ல் ஓய்வு பெற்றார். 1995-ல் தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகமானார். ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஆகியவற்றின் தற்காலிக அலுவல் பணிகளிலும், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுராகவும் பணியாற்றியுள்ளார்.
# கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப இயக்குநர் என்ற பொறுப்பும் வகித்துள்ளார். இன்று 55-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ரவி சாஸ்திரி, தற்போது வெற்றிகரமான தொலைக்காட்சி வர்ண னையாளராக இயங்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT