Published : 13 Jul 2022 06:52 PM
Last Updated : 13 Jul 2022 06:52 PM
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மக்களால் வெகுவாக கொண்டாடப்படுகின்றன. நாவலில் கதாபாத்திரங்களுக்கு குறைவு இல்லை. அதிலும் பெண் கதாபாத்திரங்கள் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையறாவில் பொருந்துகின்றனர். 'பொன்னியின் செல்வன்' கதையில் சோழநாட்டை கட்டிக் காக்க குந்தவை தேவியும், அதை அடியோடு அழிக்க நந்தினியும் தத்தம் முழு சக்தியுடன் பாடுபடுகிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ டீசரில் வரும் த்ரிஷா - ஐஸ்வர்யா ராய் ஃபேஸ் ஆஃப் சீன் (face off scene) அனைவரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. வெறும் த்ரிஷா, ஐஸ்வர்ராய்க்காக கவரப்பட்டவர்களும் இருக்கலாம். கதை தெரிந்தவர்கள், அவர்களின் பின்புலம் அறிந்தும் கவரப்பட்டிருக்கலாம்.
கதையில் கல்கி இவ்விரண்டு பேரழகிகளின் face off-ஐ எப்படி வர்ணித்துள்ளார் என்பதைக் காண்போமா?
“சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரண சந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது. குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன.
குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பல மலரின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது.
குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன்பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணிமகுடத்தைப்போல் அமைந்திருந்தது..." - இப்படித்தான் நந்தினியையும், குந்தவையையும் கல்கி வர்ணித்துள்ளார்.
அழகில் பூரண நிலவையொத்த பேரழகிகளாய் இருந்தாலும், இருவரும் குணத்தாலும், தங்கள் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளாலும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். நஞ்சினும் கொடியவள் நந்தினி என்றும்கூட கூறலாம்.
கதையில் வந்தியத்தேவன் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அதேபோல முக்கியதுவமிக்கவர் திருமால் பக்தன் ஆழ்வார்க்கடியான் நம்பி. கதையில் வரும் பல யூகிக்க முடியாத திருப்பங்களுள் ஒன்றில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு. (இவர் பற்றி பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்.).
குழந்தையாக நந்தினியைக் கண்டெடுத்து தன் சொந்தத் தங்கையைப் போலவே மதுரையில் வைத்து வளர்க்கிறார் ஆழ்வார்க்கடியான் நம்பி. ஒரு பன்னிரெண்டு வயதுபோல் சோழ நாட்டிற்கு சென்று குந்தவையோடு தங்குகிறாள் நந்தினி. அப்போது கரிகாலனுக்கு நந்தினியின் மேல் காதல் ஏற்படுகிறது.
சோழர் - பாண்டியர் போரின் போது மீண்டும் மதுரை செல்கிறாள் நந்தினி.
கரிகாலனிடம் அவர் கொன்று தீர்க்க வந்தது தன் காதலன் என்று சொல்லி மன்றாடுகிறாள். ஆனாலும், பாண்டியன் கொல்லப்பட்டதால் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் அவளை தீயில் போட்டுக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களிடம் சோழ சாம்ராஜ்ஜியத்தை வேரோடு அழிப்பதாக சபதம் செய்கிறாள். சபதத்தின்படி பெரிய பழுவேட்டரையரை தன் வலைக்குள் விழ வைத்து, ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி தீட்டச் செய்கிறாள்.
கிழவர் மட்டுமின்றி கந்தமாறன், கரிகாலன், பார்திபேந்திரன் என்று பெரும்பாலான ஆண்களை தன் வலைக்குள் சிக்க வைத்தாள். தெளிவாக சதி திட்டம் தீட்டி கடம்பூர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலனை வரச்செய்கிராள். திட்டம்படி கரிகாலர் மரணிக்கிறார். தன் சபதத்தை நிறைவேற்றியதால் நந்தினி தப்பிச் செல்கிறாள். தலைமறைவாய் வாழும் நந்தினி பல வருடங்கள் கழித்து தன்னைத் தேடி வரும் அருள்மொழிவர்மனிடம் கரிகாலன் மரணம் குறித்த உண்மையையும், தன் பிறப்பு குறித்த உண்மையையும் சொல்கிறாள். நந்தினி என்னவானாள் என்பதை பின்னால் அறிவோம்.
வேறு எந்தவொரு எழுத்தாளராலும் இவ்வளவு சிக்கலான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ நூல் முழுவதும் கல்கி இந்தக் கதாபாத்திரத்தை கட்டமைத்த விதம் அழகு. ஒவ்வொரு பகுதியிலும், அத்தியாயத்திலும், உரையாடலிலும் நந்தினி பற்றிய ஒரு புதிய அம்சத்தையும் அவள் வாழ்க்கையைப் பற்றிய புதிய ரகசியத்தையும் அறியலாம்.
ஆழ்வார்க்கடியானின் கதையை கேட்ட பிறகு முதியவர் பழுவேட்டரையர் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட ஆதரவற்ற பெண்ணை (நந்தினி) சந்திக்கத் தயாராகிறோம். ஆனால், வந்தியத்தேவன் அவளை முதன்முதலாக சந்திக்கும்போது, அவளுக்கு பணிவிடைகள் செய்ய வேலைக்காரர்கள் குழுவுடன் மகாராணி போல் தோன்றுகிறாள் நந்தினி.
இதுதான் நந்தினிக்கான சிறு முன்னோட்டம்.
அடுத்தாக, குந்தவையை அறிவோம். அவள் அருள்மொழிவர்மனின் அன்புச் சகோதரி. சிறு வயதிலிருந்தே அவனுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருக்கிறாள். அவள் காலத்தில் வாழ்ந்த மற்ற பெண்களிடமிருந்து தனித்துவமானவள் என்றே கதை முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறாள். பிற ராஜ்ஜியங்கள் மற்றும் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியை உருவாக்குவதற்காகவே அரச பெண்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காலத்தில், குந்தவையின் தந்தை அவளது சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கிறார்.
குந்தவை எந்த வெளிநாட்டு அரசனையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் சோழ ராஜ்ஜியத்தில் இருக்க
விரும்புகிறாள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறாள். ராஜ்ஜியம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அவள், தன் சகோதரனை உடனடியாக வீட்டிற்கு வரவழைக்க ஏற்பாடுகள் செய்து, தன் தந்தையுடன் இருக்க தஞ்சாவூருக்குச் செல்கிறாள். பழுவேட்டரையர்களுக்கு எதிராக அவரை எச்சரிக்கிறாள். ஆனால், அவளது தந்தையின் கடந்த காலக் கதைகள் கேட்டதும் முக்கிய எதிரியான நந்தினியின் மீது பல சந்தேகங்கள் எழும்புகிறது.
குந்தவை ஒரு வல்லமையுள்ள இளவரசி என்பதற்காக அவளை நந்தினிவெறுத்தாள். நந்தினியை அவளது மயக்கும் அழகுக்காக குந்தவை வெறுத்தாள். ஆனால், நந்தினியின் பிறப்பு பற்றிய விவரங்கள் நம்பும் நிலை வந்தபோது, குந்தவை அவளது அவலநிலையைப் பார்த்து இரங்கி, அவளை வெறுத்ததற்காக வருந்துகிறாள். இது அவரது நேர்மறையான பண்புகளில் ஒன்றாகும். தாய் ஒருத்தி தன் அனைத்து பிள்ளைகளையும் எப்படி சமமாக காப்பாளோ, அதைப்போல தனக்குப் பிரியமான அனைவரையும் - தன் பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், தன் காதலன் மற்றும் தன் சகோதரியாக இருக்கக்கூடிய மோசமான எதிரியைக் கூட காக்க விரும்புகிறாள் குந்தவை!
| தொடரும்... |
முந்தைய அத்தியாயம் > PS for 2K கிட்ஸ் - 2 | பொன்னியின் செல்வன் - ஆதித்த கரிகாலனுக்கு மயக்கம் என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...