Published : 14 May 2016 11:45 AM
Last Updated : 14 May 2016 11:45 AM

ஜேம்ஸ் ஹார்டி 10

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடியான அமெரிக்க மருத்துவர் ஜேம்ஸ் டி.ஹார்டி (James D.Hardy) பிறந்த தினம் இன்று (மே 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் அலபாமா மாநிலம் நெவாலா நகரில் (1918) பிறந்தவர். தந்தை சுண்ணாம்பு ஆலை அதிபர். ஹார்டி, பள்ளி மாணவனாக இருந்தபோது நாட்டில் கடுமை யான பொருளாதார மந்தநிலை நிலவியது.

# பணம் சம்பாதிப்பதற்காக தனது 2 சகோதரர்கள், நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு அமைத்தார். மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து குழுவில் இருந்தார். இந்த அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிக்கான உத்வேகத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

# அலபாமா பல்கலைக்கழகத்தில் வேதியியல், உயிரியல், ஜெர்மன் மொழி பயின்று பட்டப் படிப்பை முடித்தார். பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்.

# இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்க ராணுவத்துக்கு சேவை செய்ய அழைக்கப்பட்டார். ராணுவ சேவையில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார். தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகி, மனித குலத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தது அப்போதுதான்.

# ‘சர்ஜரி அண்ட் தி எண்டோக்ரைன் சிஸ்டம்’ என்ற தனது முதல் மருத்துவ நூலை 1950-ல் எழுதினார். தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் எழுதினார். மீண்டும் பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மனித உடலின் திரவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். உடலியல் வேதியியலில் 1951-ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

# டென்னஸி பல்கலையில் அறுவை சிகிச்சை துறை உதவிப் பேராசிரியராகவும் அறுவை சிகிச்சை ஆராய்ச்சிக்கான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளில் அறுவை சிகிச்சை துறை தலைவரானார். 1955-ல் தொடங்கப்பட்ட மிசிசிபி பல்கலை மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை துறை தலைவராகப் பதவியேற்று, 1987 வரை பணிபுரிந்தார்.

# அங்கு இவரது தலைமையில் உறுப்பு மாற்று ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்தன. இதையடுத்து, பல விலங்குகளிடம் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சைகளை செய்தனர். முதன்முதலாக 1963-ல் மனித நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, விலங்கிடம் இருந்து மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை, 1964-ல் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை வெற்றிகரமாக மேற் கொண்டார்.

# விலங்கிடம் இருந்து மனிதனுக்கு மேற்கொண்ட இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றாலும், சம்பந்தப்பட்ட நபர் 90 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். இது சர்ச்சைகளைக் கிளப்பினாலும் இவரது முனைப்பால், மனித இதய மாற்று அறுவை சிகிச்சை துறை வளர்ச்சியடைய வழிவகுத்தது.

# அறுவை சிகிச்சை குறித்து பல நூல்களை எழுதினார். அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை வெளியிடும் இதழின் ஆசிரியராகவும் பல்வேறு அறுவை சிகிச்சை அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டார். அமெரிக்காவில் உள்ள சுமார் 3 டஜன் மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிநாடுகளில் பல பல்கலைகள், கல்லூரிகளிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

# 20-ம் நூற்றாண்டின் முக்கிய மருத்துவக் கண்டுபிடிப்பாளரும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் முன்னோடியுமான ஜேம்ஸ் ஹார்டி 85-வது வயதில் (2003) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x