Published : 01 Jun 2014 12:01 PM
Last Updated : 01 Jun 2014 12:01 PM
குடும்ப அட்டை என்பது உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான அட்டையாக இருந்தாலும், முகவரிச் சான்று உள்பட பலவற்றுக்கும் அது தற்போது அத்தாட்சியாக விளங்குகிறது. எனவே, குடும்ப அட்டை ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானதாகும். குடும்ப அட்டையின் நடைமுறைகள் குறித்து அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ‘தி இந்து’விடம் விடை தருகிறார் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் ராம சரஸ்வதி.
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது?
நாட்டில் ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் பலியாயினர். அப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்குவதற்காக 1960-ம் ஆண்டு இத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது; அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்வது.
தமிழகத்தில் எந்தத் துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது?
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒருவர் எதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர முடியும்?
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். எனவே, ஒரு நபரின் ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பொது விநியோகத் திட்டம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
1) அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் பச்சை நிற அட்டை
2) காவல் துறையினருக்கான காக்கி நிற அட்டை
3) அரிசி தவிர்த்து மற்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வெள்ளை நிற அட்டை
தமிழகத்தில் தற்போது எத்தனை குடும்ப அட்டைகள் உள்ளன?
தமிழகத்தில் மொத்தம் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பெற குடும்ப அட்டையை எதற்காகக் கேட்கின்றனர்?
குடும்ப அட்டை என்பது மாநில அரசால் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு நபரின் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆதாரமாக இது கருதப்படுகிறது. அதனால்தான், பல இடங்களிலும் முகவரிச் சான்றுக்காக குடும்ப அட்டையைக் கேட்கின்றனர். ஆனால்,குடும்ப அட்டையைத்தான் அனைத்து இடங்களிலும் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேறு முகவரிச் சான்றிதழ் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT