Published : 23 May 2016 11:17 AM
Last Updated : 23 May 2016 11:17 AM
ஸ்வீடன் உயிரியலாளர், மருத்துவர்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உயிரியலாளரும், மருத்துவருமான கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) பிறந்த தினம் இன்று (மே 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் (1707) பிறந்தார். தந்தை பாதிரியார், தாவரவியலாளர். மகனுக்கு சிறந்த கல்வி புகட்டுவதையே தன் நோக்கமாகக் கொண்டிருந்தார். லத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றை தந்தையிடமே கற்றார்.
# தாவரங்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு தாவரங்களை வளர்த்தார். பல புதிய தாவரங்களை தேடிக் கண்டறிந்தார். இவரது ஆர்வத்தை அறிந்த தந்தை, வீட்டிலேயே ஒரு ஆசிரியரை அமர்த்தி பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.
# பள்ளியில் 10 வயதில் சேர்ந்தார். தாவர ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். இவரது திறமையை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், மருத்துவம் படிக்குமாறு ஆலோசனை கூறினார். அதை ஏற்று தனிப்பட்ட முறையில் உடலியல், தாவரவியல் பயில தந்தை ஏற்பாடு செய்தார். லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பயின்றார்.
# படிப்பை முடித்து உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். இவரது விரிவுரைகள் மிகவும் பிரபலமடைந்தன. தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்தை மேம்படுத்துவது குறித்து கட்டுரைகள் எழுதினார். இதையடுத்து, தாவர ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்கு நிதி கிடைத்தது.
# நீண்ட பயணம் மேற்கொண்டவர், தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். இந்தப் பயணத்தின்போது 100 புது வகை தாவரங்களைக் கண்டறிந்தார்.
# ‘ஃப்ளோரோ லேப்போனிகா’ என்ற நூலை எழுதினார். விலங்குகள், தாவரங்களுக்கு இரு-பகுதி பெயரிடும் முறையைத் தொடங்கி வைத்தார். நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.
# இவரது ‘சிஸ்டம் ஆஃப் நேச்சர்’ நூல் 1737-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தாவரங்கள் பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்த உத்திகளை மேம்படுத்திய வண்ணம் இருந்தார். இங்கிலாந்து, பிரான்ஸ் சென்று, நிறைய மாதிரிகளை சேகரித்ததோடு அங்குள்ள அறிவியலாளர்களை சந்தித்தார்.
# ஸ்வீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராக பணிபுரிந்தார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி உருவாக உதவி செய்து, முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741-ல் பொறுப்பேற்றார். 1750-ல் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
# இயற்கை அறிவியல் களத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட, 1,200 பக்கங்கள் கொண்ட ‘பிளான்ட் ஸ்பீசிஸ்’ நூலை 2 தொகுதிகளாக 1753-ல் வெளியிட்டார். அப்போது கண்டறியப்பட்டிருந்த அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். தாவரங்கள் மட்டுமல்லாது விலங்கு, பறவை, மீன், உள்ளிட்ட ஏறக்குறைய 13 ஆயிரம் உயிரினங்களுக்குப் பெயரிட்டார்.
# ஸ்வீடன் மன்னர் இவருக்கு 1761-ல் சர் பட்டம் வழங்கினார். தற்கால சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், நவீன அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் 71-வது வயதில் (1778) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT