Published : 12 May 2016 10:31 AM
Last Updated : 12 May 2016 10:31 AM

எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...

M.G.R. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது TMX 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்

முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x