Last Updated : 06 May, 2016 06:33 PM

 

Published : 06 May 2016 06:33 PM
Last Updated : 06 May 2016 06:33 PM

ரஃப் நோட்டு - 2 : நம்பர்களே நண்பர்கள்!

என் பெயரே மறந்து போன

இந்த காங்கிரீட் காட்டில்

என் நம்பரைச் சொல்லி

அழைக்கும் நீ யார்?

‘இனிமேல் எண்கள்தான் உலகை ஆளும். ஆம், அதற்கான ஈசானி மூலை கருக்க ஆரம்பித்துவிட்டது. மேகங்கள் எல்லாம் சூல்கொள்ளத் தொடங்கிவிட்டன. ‘ச்சோ’ என மழை எண்களாகக் கொட்டப்போகிறது. மனிதர்கள் எல்லோரும் குஞ்சு குளுவான் உட்பட… எண்களால் ஆன மழையில் நனைந்து தொப்பரையாய் நிற்க, நடக்க, ஓடப் போகிறோம். கடைசியில் எண்களால் தலை துவட்டிக்கொள்ள எல்லோரும் பழக்கப்படப் போகிறோம்’ என்று 12 ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இணைப்பிதழில் நான் எழுதியிருந்தது பலிக்க ஆரம்பித்துவிட்டது.

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். யதார்த்த வயலில் விளைந்த வசனப் பயிர் அது.

‘‘இங்கே வர்ற பேஷன்ட் அத்தனை பேருக்கும் பேரு இருக்கு. ஆனா, நீங்க, நம்பர் சொல்லித்தானே அழைக்கிறீங்க. உங்களுக்கு எல்லாமே நம்பர்தான்.’’ பிடறியில் படீர் என்று அடித்தது அதில் இருந்த சுளீர் நிஜம்!

சென்னையில் ஒரு மத்தியானம்

இரண்டு மூன்று மாதங்கள் இருக்கலாம். ஒரு ஞாயிறு ஸ்லீப்பிங் மத்தியானம். வாசல் கேட்டில் கையூன்றி தெருவை வெறித்துக்கொண்டிருந்தேன். 70 வயது இருக்கும். வேட்டி – சட்டையில் இருந்தார் அந்த மனிதர்.

‘‘சார்… கோவிந்தராஜன்னு பேரு. நாகப்பட்டினம் வெளிப்பாளையத்துக்காரரு. இது ராஜராஜேஸ்வரி நகர் மூணாவது குறுக்குத் தெருதானே? அவர்கூட ஹார்பர்ல வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். வீடு எது தெரியுங்களா?’’ என்றார் என்னைப் பார்த்து.

‘‘உங்ககிட்டே அவர் போன் நம்பர் இல்லீங்களா?’’ என்றேன் நான்.

சட்டென்று ‘‘என்கிட்டே செல்போனே இல்லீங்களே சார்…’’ என்றார் பரிதாபமாக.

‘‘வீட்டு நம்பர் அவர் சொல்லலையா…?’’’

‘‘எழுதிக் குடுத்தாரு. தொலைச்சிட்டேன் சார்…’’

’’மூணாவது குறுக்குத் தெருன்னு சொன்னாரா? நாலாவது, அஞ்சாவது இருக்கலாம்ல?’’ என்றேன்.

விழி பிதுங்கி நின்றார் பெரியவர்.

என் மனைவியை கூப்பிட்டு ‘‘அக்கம் பக்கத்துல கோவிந்தராஜன்னு யாராவது இருக்காங்களா?’’ என்றேன்.

‘‘வீட்டு நம்பர் என்னவாம்..?’’ என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.

‘‘தண்ணி குடிக்கிறீங்களா பெரியவரே?’’ என்றேன்.

‘’வேண்டாம் சார்…’’’ என்று மனம் வெதும்பி ஏமாற்றம் விரித்துப் போட்ட தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தார் அவர்.

தெரு முனையை அவர் கடக்கும் வரையில் கோவிந்தராஜ் என்கிற மனிதரைத் தேடி வந்த இன்னோரு மனிதரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

கோவிந்தராஜ் என்கிற மனிதரின் தொலைபேசி எண், வீட்டு எண் எதுவென்று தெரியாததாலேயே, அவரைப் பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பிச் செல்கிற அந்த 70 வயது மனிதரைப் போலவே, இந்த பெருநகரத்தில் எத்தனை கோவிந்தராஜன்களைத் தேடிக்கொண்டு எத்தனை பேர் திரும்பிப் போகிறார்களோ?

’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று சொன்னவன் இன்று இருந்திருந்தால் ‘எண் மட்டுமே கண்ணெனத் தகும்' என்றுதான் எழுதியிருப்பான்.

''205 ஃபாலோவ் மீ...''

ஒரு காலத்தில் போலீஸ்காரர்கள் மட்டுமே எண்களால் அழைக்கப்பட்டார்கள்.

‘‘306 இந்த ஆளை லாக்கப்ல தள்ளு.’’

‘‘205 ஃபாலோவ் மீ’’ என்று எண்களால் அழைக்கப்பட்டு, பின் தொடரும் சிவப்புத் தொப்பி போலீஸ்காரர்களை சினிமாவில் பார்த்திருப்போம். பின்னாட்களில் கேடிகளை 420 என்று அழைப்பதும் நடைமுறைக்கு வந்தது.

இன்று இங்கு எல்லாமும் எண்கள்தான். ஒருவருடைய பெயரைக் கூட மறந்தாலும் பொறுத்தருள்வார்கள். ‘‘என்னது! என்னோட செல்நம்பர் உன்கிட்டே இல்லையா? கொடுத்தேனே உன் மொபைல்ல சேவ் பண்ணலையா?’’ என்று மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்வார்கள்.

சொந்தமோ, நட்போ அவருடைய செல் நம்பர் ஒருவருடைய மொபைலில் சேவ் செய்யப்படவில்லை எனில், அதை வைத்தே நாம் அவர் மனதில் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டுவிடுகிறார்கள்.

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

எண்களுக்கு மனிதர்களுக்கும் உள்ள உறவு அவரவர்களின் சிறுபிராயத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. மனிதர்களின் லார்வா நாட்களிலேயே சைகை மொழியில் எண்களை உபயோகிக்க நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். ஒரு விரலைக் காட்டினால் ‘ஒன் பாத்ரூம்’; இரண்டு விரலைக் காட்டினால் ‘டூ பாத்ரூம்’ என்று சொல்ல குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுகிறோம்.

அந்தக் காலத்து பாட்டிகளும், அம்மாக்களும் கரித்துண்டால் வீட்டு அடுப்படிச் சுவர்களில் பால் கணக்கு, தயிர் கணக்குகளை / / / / / / / / கோடுகளாக போட்டு வைத்திருப்பார்கள். கோடுகளைக் கூட்டினால் மொத்த கூட்டுத்தொகை வருவதை வைத்து தயிருக்கும், பாலுக்கும் பணம் பட்டுவாடா செய்தார்கள்.

ஏலக் கடைகளில் ஏலத் தொகை முடிவானதும் ஒரு தரம் 200 ரூபா… ரெண்டு தரம் 200 ரூபா… மூணு தரம் 200 ரூபா என்று சொல்லி மணி அடிப்பார்கள்.

கோயில்களுக்குப் போனால் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வர வேண்டும், நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும் என்கிற கணக்கு மனிதர்களை சுற்றியது.

‘வேண்டிக்கொண்டது நிறைவேறினால் 108 தேங்காய் உடைக்கிறேன்’, ‘1008 தடவை ஸ்ரீராமஜெயம் எழுதுகிறேன்’, தொடர்ந்து 48 நாட்கள் உன் சன்னிதானத்துக்கு வருகிறேன்’ என்றெல்லாம் எண்களோடு மனிதர்கள் குடித்தனம் நடத்தினார்கள்.

‘‘ஒரு மண்டலம், அதாவது 48 நாட்களுக்கு இந்தக் காயகல்பத்தை சாப்பிட்டால் உங்கள் பிணி நீங்கும்…’’ என்று கணக்கு வைத்து மருந்து கொடுத்தார்கள் வைத்தியர்கள்.

ஒரு விஷயம் – மனிதர்கள் எண்களை சுற்றுவது, எண்கள் மனிதர்களைச் சுற்றுவது என்பது இன்று அளவுக்கு அதிகமாகிவிட்டது உண்மைதான். ஆனால் இது, அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்த தெருவிளக்கு மாதிரிதான் முன்பு இருந்தது. ஆனால் இன்று ஒரே இடத்தில் ஆயிரம் வாட்ஸில் ஆயிரம் பல்புகள் எரிவது மாதிரி ஆகிவிட்டது. பல இடங்களில் எழுத்தை அப்புறப்படுத்திவிட்டு, எண்கள் ஜம்மென்று வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டன.

முன்பு வீட்டு விழாக்களில் விருந்தினர்களாகப் பார்க்கப்பட்ட மனிதர்கள் எல்லாம் இன்று ‘எத்தனை சாப்பாடு அல்லது எத்தனை தலை’ என்கிற கணக்குப் பட்டியில் அடைக்கப்படுகிறார்கள்.

விண்ணப்ப எண், அட்மிஷன் எண், பரீட்சை எண், வீட்டு எண், வண்டி எண், ஆதார் எண், பான் கார்டு எண், வங்கி கணக்கு எண், வாக்காளர் அட்டை எண், ஏடிஎம் பின் நம்பர்கள், ஆம்புலன்ஸுக்கு 108, போலீஸுக்கு 100, இது அதுக்கு என்று ஏகப்பட்ட ஹெல்ப் லைன்களுக்கு தனித் தனி எண்கள் என ஏகப்பட்ட நம்பர்கள் நம் ஒவ்வொருவரையும் சுற்ற ஆரம்பித்துவிட்டன.

ஏதோ ஒரு விஷயமாக ஏதோ ஒரு நிறுவனத்துக்கு நீங்கள் தொடர்புகொள்ள நினைத்தால், அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேருக்குத்தான் நீங்கள் அலைபேச வேண்டும். கூப்பிட்டவுடன் இதுக்கு என்றால் எண் 1-ஐ அழுத்தவும், அதுக்கு என்றால் எண் 4-ஐ அழுத்தவும் என்று ஏகப்பட்ட எண்கள் உங்களை அழுத்தும்.

நம்மை ஆளும், நம்மை தண்டிக்கும், நம்மை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எல்லாமே – தனித் தனி எண்களைக் கொண்டே நம்மை பாதுகாக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்கின்றன.

தமிழில் எண்கள்

சாலைகளில் செல்லும் சில வாகனங்களில் ஆர்வக்கோளாறு காரணமாக சிலர் நம்பர் பிளேட்டில் தமிழில் எண்களை எழுதி வைத்து பயமுறுத்துவார்கள். என் சொந்த ஊரான திருவாரூரில் த.சரவணத் தமிழன் என்கிற தமிழறிஞர், தமிழுக்காகவே வாழ்ந்தவர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற கொள்கை கொண்டவர். அவர் திருவாரூரில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில், எங்களூர் திரையரங்குக்கு வருகிற திரைப்படங்களின் பெயர்கள் வேற்றுமொழியில் இருந்தால் அதனை ஒரு தட்டியில் தூயத் தமிழில் எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு தடவை அவர் எழுதி வைத்தார் இப்படி:

‘அம்மையப்பா’ திரையரங்கில் ‘ம.கோ.ரா’ நடித்த ‘கமுக்க காவலர் க க ரூ’ என்று எழுதிவைத்தார். ‘அம்மையப்பா டாக்கீஸில் எம்.ஜி.ஆர் நடித்த ரகசிய போலீஸ் 115’ என்பதைத்தான் அவர் அப்படி எழுதி வைத்தார்.

தமிழ் எண்கள், தமிழில் எண்கள் என்பதெல்லாம் உல்லுலாயி!

நள்ளிரவில் ஒரு சண்டை

திருச்சியில் உறவினர் திருமணம். அந்த நள்ளிரவிலும் கல்யாணசத்திரம் கலகல. திடீரென்று ஓர் அறையில் இருந்து சண்டை சத்தம். ’’என்ன.... அங்கே சத்தம்?’’ என்று ஒரு சபாஷ் நாயுடு குரல் கொடுத்தார். ‘’சும்மா பேசிட்டிருக்கோம்... மாமா!’’ என்கிற எந்த சாத்வீக குரலும் அங்கிருந்து வரவில்லை.போய் பார்த்தால் அந்தத் தம்பதியின் வாய்கள் கிழிந்து அறை முழுக்க அசிங்க வார்த்தைகள் ஒழுகிக் கிடந்தன. விசாரித்தால்... கணவன் அலட்சியவாதி. சூட்கேஸைத் திறந்தால், பூட்ட மறந்துவிடுவார் என்பதனால், இ.திலகம் பிரபுவும், அமிதாப் பச்சனும் வேண்டிக்கொண்டதற்கிணங்க கல்யாண் ஜிவல்லரியில் வாங்கிய 12 பவுன் நெக்லஸை சூட்கேஸுக்குள் வைத்து மனைவி... பூட்டியிருக்கிறார். இதுவரையில் எல்லாம் சரிதான். ஆனால், நம்பர் லாக் உள்ள அந்த சூட்கேஸை அவர் எந்த எண்ணில் வைத்து லாக் செய்தோம் என்பதை மறந்துபோனதுதான்... உள்குத்து. அப்புறமென்ன கேப்டனின் சின்னம் முழங்கத் தொடங்கி... யுத்த சத்தம்தான்!

கடவுள் என்றால்... ஜீரோவை அழுத்தவும்

உண்மையிலேயே கடவுள் ’அறை எண் 305’-ல் வேண்டாம்... ஒரு 405-லோ அல்லது 1005-லோ இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்! கடவுளை பார்த்த மாத்திரத்தில் அந்த அறையை நல்லறையாக்கி... சில்லறை பார்த்துவிடலாம். சரி... தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும் கடவுளை அழைக்க உங்களிடம் அவரது வேறு எண் ஏதாவது இருக்கிறதா?

எனக்கு எட்டைப் பிடிக்கும்

அது என்னமோ தெரியலை எனக்கு சிலேட்டு பருவத்தில் இருந்து 8-ன் மீது ஒருதலைக் காதல் (எட்டுக்கு என்னைப் பிடிக்குதான்னு தெரியலீல்ல). எல்லோரும் எழுதுவது மாதிரி இப்போதும் எனக்கு 8-ஐ எழுதத் தெரியாது. மேலே ஒரு சைபர், கீழே ஒரு சைபர் ... 8. வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சுக்க சொன்னார் வைரமுத்து. நான் எட்டையே ரெண்டா பிரிச்சுட்டேன். ஃபோர்ட்டபிள் எய்ட்!

சென்ற வருடம் தான் டூவீலர் வாங்கினேன் (யமஹா ரே). நானும் என் மகனும் ஒரே நாளில் ஆலந்தூர் ஆர்.டி.ஓ அலுவலக மைதானத்தில் 8 போட்டு லைசென்ஸ் வாங்கப் போனோம். நான் ஃபெயிலாகி பையன் மட்டும் பாஸாகிடுவானோ என்று உள்ளுக்குள் உதறலுடன் நின்ற என்னிடம் என் மகன் சொன்னான்: ’’அப்பா பெரிய எட்டா போடுங்கப்பா... உங்களுக்கு ஈஸியா இருக்கும்... வளைக்க சிரமப்பட வேண்டாம்’’ என்றான். அகலமான 8 போட்டு... ’ஆள்’ பாஸ்!

நோட்டுல 8 போடுறதும் ரோட்டுல 8 போடுறது எனக்கு சிரமம்தான். ஆனாலும் எனக்கு 8-ஐ பிடிக்கும். வெறும் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு ஈ கூட ஓட்ட முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது.

ஒரு சந்தோஷ தருணத்தில் காதலனும் காதலியும் சேர்ந்தே சொன்னார்கள்: ‘‘இருவர் ஒருவரானோம்’’ என்று. அதே காதலர்கள் ஒரு சங்கடமான தருணத்தில் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள்: ‘’இருவர் ஒருவரானோம் சரி; யார் அந்த ஒருவர்… நீயா? நானா?’’ எண்கள் காதலர்களையும் விட்டு வைக்கவில்லை!

நண்பர்கள் இருவர் தோள்மேல் கை போட்டுத் திரிவார்கள். அவர்களுக்கு இடையே சந்தோஷம் கிடார் வாசிக்கும். மூன்றாவதாக ஒரு நண்பர் வந்து சேர்ந்தான். பழைய நண்பர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சூண்டு விரிசல் விழ ஆரம்பித்தது. இரண்டு பேர் கம்பெனி; மூன்று பேர் கிரவுடு’ என்கிற பொன்மொழிக்கு அவர்கள் இலக்கணமானார்கள்.

’எண்ணிக்கை தீர்ந்தாலும் ஸ்டேட்டஸ்கள் தீராது...

எண்ணிக்கை பார்த்தாலே ஸ்டேட்டஸ்கள் ஆகாது’

- என்பது தெரிந்தும்... இன்றைய தேதியில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு... அக்கடாவென்று சும்மா இருப்பவர்கள் எவருமே இல்லை. எத்தனை லைக்ஸ் என்று எண்ணிப் பார்ப்பதே அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. ஆம்! இனி நம்பர்களே நண்பர்கள்!

தொடர்புக்கு baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x