Published : 09 May 2016 10:27 AM
Last Updated : 09 May 2016 10:27 AM

அன்னமாச்சார்யா 10

இசை மேதை, ஏழுமலையான் பக்தர்

தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்த வரும், 32,000 கீர்த்தனைகளை இயற்றியவருமான அன்னமாச்சார்யா (Annamacharya) பிறந்த தினம் இன்று (மே 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத் தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தார். இவரது குடும்பம் திருமலை வேங்கடமுடையான் கோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆழ்ந்த பக்தியுடன் ஏழுமலையான் மீது இவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

l தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்தார். பஜனை மரபைத் தொகுத்து வழங் கிய சிறப்பு பெற்றவர். பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது என கருதப்படுகிறது.

l 32,000-க்கும் அதிகமான கீர்த்தனைகளை எழுதியுள்ளார். அதில் 14,000 மட்டுமே கிடைத்துள்ளன. இவர் ஓலைச் சுவடியில் எழுதிய பெரும்பாலான பாடல்கள் செப்புத் தகட்டில் எழுதப்பட்டு, திருப்பதி கோயில் உண்டியலுக்கு எதிரே சிறு அறையில் பல நூற்றாண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், 1922-ல் அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

l ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். ஒருமுறை திருமலை கோயிலில் இவர் பாடும்போது, கர்னாடக இசையின் தந்தை என போற்றப்படும் புரந்தரதாஸரை சந்தித்தார்.

l சாதி ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தார். ‘இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு’ என்று தனது ‘பிரம்மம் ஒக்கடே’ பாடலில் சொல்கிறார்.

l தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் ஏராளமான பாடல்களை இயற்றினார். சிலமுறை கேட்டாலே புரியும் வகையில் எளிமையாக, தெளிவாக இருப்பது அவற்றின் சிறப்பம்சம். இவரது ராம பக்திப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை. ‘பதங்கள் அடங்கிய கவிதையின் பிதாமகர்’ எனப் புகழப்பட்டார். தனது காலத்துக்கு முன்பு இருந்த பாடல்களை ஆராய்ந்து பாட உரை வரிசை எழுதியுள்ளார்.

l சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) படைத்துள்ளார். இதில் ‘வெங்கடேஸ்வர சதகம்’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் படைத்த ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ ஆகியவை தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன.

l தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி. இவர்களது மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும்கூட, தென்னிந்திய சங்கீத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள்.

l இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

l தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகப் போற்றப்படுபவரும், கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னமய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான அன்னமாச்சார்யா 95-வது வயதில் (1503) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x