Published : 11 May 2016 09:27 AM
Last Updated : 11 May 2016 09:27 AM
இப்போதெல்லாம் தேர்தல் பிரச் சாரங்களில் கண்ணியக்குறைவான விமர்சனங்களும் தனிமனித தாக்குதல் களும் அதிகரித்துவிட்டன. திமுக தலை வர் கருணாநிதி பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், முதல்வர் ஜெய லலிதா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரவலான கண்டனத்தைப் பெற்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அந்தக்கால தேர்தல் பிரச்சாரங்களை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.
1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அந்தத் தேர்தலில்தான் திமுக முதன் முறையாக போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். இந்தத் தேர்தலில் இன்னொரு சுவாரஸ் யமும் நடந்தது. காங்கிரஸை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். டாக்டர் சீனிவாசன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும் காங்கிரஸுக்காக அவரையும் பெரியார் ஆதரித்தார்.
அண்ணாவை ஆதரித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சைக் கேட்க காஞ்சிபுரமே திணறும் அளவுக்கு கூட்டம் கூடியிருந்தது. மைக்கை பிடித்த கலைவாணர், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை வானளாவப் புகழ்ந்தார். டாக்டர் தொழிலில் அவரது திறமை, கைராசி மற்றும் மக்களுக்கு அவர் செய்துவரும் சேவைகளை பாராட்டினார். இதைக் கேட்டதும் திமுகவினர் முகத்தில் ஈயாடவில்லை. ‘என்னடா இது? அண் ணாவுக்கு வாக்கு கேட்க வந்துவிட்டு, இப்படி காங்கிரஸ் வேட்பாளரை புகழ்ந்து பேசுகிறாரே?’ என்று அவர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.
சீனிவாசனை பாராட்டிக் கொண்டே சென்ற கலைவாணர் தனது பேச்சை இப்படி முடித்தார்...
‘‘அப்படிப்பட்ட திறமையும் கைராசியும் மிக்க, நல்லவரான டாக்டர் சீனிவாசனை சென்னைக்கு அனுப்பி அவரது வைத்திய திறமையை இழந்துவிடாதீர்கள். அவரை காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள் ளுங்கள். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் நோய் களை தீர்க்க பேரறிஞர் அண்ணாவை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்புங்கள்’’
திமுகவினரின் ஆரவாரம் அப்போதே வெற்றி கோஷமானது. தேர்தலில் அண்ணா வென்றார். என்னதான் தீவிர பிரச்சாரம் என்றாலும் அதிலும் ஒரு கண்ணியம் இருந்தது.
ஹூம்... என்னத்தைச் சொல்ல? ‘நல்ல தம்பி’ படத்தில் வரும் கலைவாணரின் பாடல் வரிகளிலேயே சொன்னால்... ‘அது அந்தக் காலம், அது அந்தக் காலம்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT