Published : 28 May 2016 12:14 PM
Last Updated : 28 May 2016 12:14 PM
மே மாதம் 11-ம் தேதி, வைதீக சடங்குகளுடன் அவருக்கு கனகாபிஷேகம் நடத்தினார்கள் குடும்பத்தினர். நெருங்கிய உறவுகளும், நட்பும் ஒன்றுகூடிய நிகழ்வு அது.
மே மாதம் 26-ம் தேதி, சென்னை சபாக்களின் கூட்டமைப்பும், தமிழ் மேடை நாடக தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. நாரத கான சபாவில் நாடக உலகமே சங்கமித்தது.
இரண்டு விழாக்களின் நாயகனாகத் திகழ்ந்தவர், அகவை 100 கண்டவர். நாடக மேடையின் பீஷ்ம பிதா மகனாக வணங்கப்படுபவர் ‘கலா நிலையம்’ கே.எஸ்.நாகராஜன். தமிழ் நாடக உலகில் சதம் காணும் கலைஞர். இன்று வரையில் நாடகங்களை இயக்கியும், நடித்தும் வரும் இளைஞர்!
நாகராஜனுக்கு அப்போது ஆறு வயது. அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் அவரை நாடகம் ஒன்றில் நடிக்க வைக்கிறார். ஆர்வம் பெருகியது. நாடகமே அவரது சுவாசமானது. 1946-ல் திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் பிறக்க காரணமாகிறது. அதுவே, 1968-ல் ‘கலா நிலையம்’ என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இதுவரை 70 நாடகங்கள் இயக்கியிருக்கிறார். 33 நாடகங்களில் நடிகராகவும் மேடையில் தோன்றியிருக்கிறார்.
ஏ.கே.பட்டுசாமி எழுதிய ‘கடவுள் எங்கே?’ கே.எஸ்.நாகராஜன் இயக்கிய முதல் நாடகம். தொடர்ந்து, நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’. பின்னர் சாவி, மெரீனா, சுஜாதா போன்றவர்களின் படைப்புகள் இவரது இயக்கத்தில் சரித்திரம் படைத்தன.
பாராட்டு விழாவுக்கு முன்பாக ‘கலா நிலையம்’ குழுவுக்காக 2012-ல் கே.எஸ்.என்.சுந்தர் (வாரிசு) எழுதி, இயக்கிய ‘யார் பையன்?’ நாடகம் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகத்தில், வில்லனின் தந்தையாக கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி, பாசப் பிணைப்புடன் தன் மகனை அரவணைத்துக் கொண்டபோது, அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. இதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும், பண்பட்ட பழுத்த ஒரு கலைஞனுக்கு?
நல்லி செட்டியாரின் தலைமையில் நடந்த விழாவில், சபாக்களின் பிரதிநிதிகளாக அந்தந்த சபாக்களின் தலைவர்கள் பேசினார்கள். ஹம்சத்வனி ஆர்.சுந்தர் (வரவேற்பு), நிறைய சபாக்களின் தலைவராக நல்லி, நாரத கான சபா ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்று பலர். நாடக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஒய்.ஜி.மகேந்திரன்.
இவர்கள் அனைவரின் உரைகளை விடவும், ‘கலா நிலையம்’ குழுவின் சார்பில் மூத்த நடிகர் சந்துருவின் பேச்சுதான் டைரக்டர் கே.எஸ்.நாகராஜன் பற்றிய அதிகம் அறிந்திராத தகவல்களை வெளிப்படுத்தியது.
பல வருடங்களுக்கு முன் சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் நாகராஜனின் மனைவிக்கு மேஜர் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அன்றைய தினம் மாலை மருத்துவமனையில் மனைவிக்கு அருகில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், கிருஷ்ண கான சபாவில் நடந்த ‘தனிக்குடித்தனம்’ நாடகத்துக்கு முதல் மணி அடித்துக் கொண்டிருந்தாராம்.
விழாத் துளிகள்:
ஆறே கால் மணிக்கு ‘யார் பையன்’ நாடகம் தொடங்கப்பட்டபோது, அரங்கம் முக்கால்வாசிக்கு மேல் நிரம்பியிருந்தது. நாடகம் முடிந்து, விழா ஆரம்பித்த போது கால்வாசி மட்டுமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் அரங்கத்தை விட மேடையில் நிரம்ப ஜனம். பல்வேறு நாடகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நாகராஜனை சூழ்ந்துகொண்டுவிட்டார்கள்.
நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர், ‘‘உங்களு டைய பலத்த கரகோஷத்துடம் இன்னாரை வரவேற்போம்…’’ என்றும், வரவேற்று பேசியவர், ‘‘அனைவரும் எழுந்து நின்று விழா நாயகரை கைத் தட்டி பாராட்ட வேண்டும்’’ என்று ஆடியன்ஸுக்கு கட்டளை இடுவதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா விழாக்களிலும் இது சகஜமாகிவிட்டது. எழுந்து நின்று கைத் தட்டுவது என்பது பார்வையாளர்களிடம் தன்னிச்சையாக நிகழ வேண்டிய ஒன்று. அவர்களை வற்புறுத்தக் கூடாது.
அன்றைய விழாவை நடத்திய சபா நிர்வாகிகள், தனித் தனியாக எந்த விழாவையும் திறம்பட நடத்தக் கூடியவர்கள். கூட்டாக நடத்தியபோது ஏனோ தடுமாறிவிட்டார்கள்.
ம்..கூட்டணி சேர்ந்தால் ஜெயிப்பது சிரமம்தானே!
தமிழ் நாடக உலகில் 100 வயது வரை வாழ்ந்துகொண்டிருப்பவர் கே.எஸ்.நாகராஜன் மட்டுமே. அவரைப் பார்த்து இன்றைய நாடகக் கலைஞர்கள் பலருக்கும், ‘அட, நாமும் சதம் அடிக்கலாம் போலிருக்கிறதே!’ என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT