Published : 29 Jun 2014 12:26 PM
Last Updated : 29 Jun 2014 12:26 PM

மத்த கஜமும் மதன் மித்ராவும்!

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்பது கவிஞன் வாக்கு. விளம்பரங்கள் சொல்வதெல்லாமே உண்மை இல்லை என்று அனுபவம் சொன்னாலும், மனம் என்னவோ விளம்பரங்களைக் கேட்டு நட என்று கட்டளை யிட்டு விடுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால், வர்த்தகப் பொருள்களுக்கான விளம்பரங்கள் செய்தித்தாள்களிலும் வார, மாத, பருவ இதழ்களிலும்தான் வரும். திரைப்படங்களுக்குச் செல்லும்போது அங்கே பெரிய நிறுவனங்களின் நுகர்பண்டங்களுக்கான விளம்பரங்களைப் பார்த்து வியந்தது உண்டு.

ஜம்மியின் லிவர்கியூர் என்று ஒரு விளம்பரம். ஒரு குழந்தை சூனா வயிற்றோடு மொட்டைத் தலை பெரிதாக, பரிதாபமாக இருக்கும். கோபாலாச் சார்யலுவின் தயாரிப்பு அந்த லிவர்கியூர். அடர்ந்த கருங்கூந்தலுக்கு கேசவர்த்தினி என்று கருப்பு-வெள்ளை விளம்பரத்தில் கோட்டுச் சித்திரமாக ஒரு பெண் நீளக் கூந்தலுடன் தலைவாரிக் கொண்டிருப்பார். கூந்தல் உதிர்வதும் வெளுப்பதும் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

படை, சொறி, சிரங்கு, தேமலுக்கு சுல்தானியா படை மருந்து, சைபால், டாக்டர் கண்ணப்பரின் மூலிகைக் களிம்பு, ஆன்டிசெப்டிக் போரோலின் எல்லாம் விளக்குக் கம்பத்தில் தூக்கில் தொங்கிய தகர அட்டை விளம்பரங்களால்தான் அறிமுகம். ‘சொப்பன ஸ்கலிதமா? கவலையே வேண்டாம்' என்று இடைக்காலத்திலும், ‘மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஒசாகா அல்லது மதன் மித்ரா’ என்று சங்க காலத்திலும் அறிமுகமான விளம்பரங்கள் தனிரகம். மதன் மித்ரா விளம்பரத்தில் மத்த கஜம் போல ஒரு ஆண் அழகாக இருப்பார் (அந்தக் கால சிக்ஸ் பேக்). உடல் வலுவுக்குத்தான் மதன் மித்ரா என்று சிறுவயதில் நினைத்திருந்தேன்.

பெருங்காய டப்பா

லால்ஜி கோது நிறுவனத்தின் எல்.ஜி. பெருங்காய டப்பாவின் மேல்புறத்தில் ரயில் இன்ஜின் படம் வரையப்பட்டிருக்கும். ரயில் இன்ஜினுக்கும் பெருங் காயத்துக்கும் என்ன தொடர்பு? மந்தார இலையில் சுற்றியிருக்கும் அந்தப் பெருங்காயத்தை, ரயில் இன்ஜின் சக்கரத்தில் கொடுத்து உடைத்துத்தான் பெட்டியில் வைத்திருப்பார்கள் என்று நானாகவே நினைப்பேன்.

காலை வேளைகள், கோபால் பல்பொடி அல்லது 1431 பயரியா பல்பொடி முகத்தில்தான் விடியும். இளஞ்சிவப்பு நிறத்தில் இனிப்பும் இல்லாமல் சுவையும் இல்லாமல் ஒரு பல்பொடி. பல்லெல்லாம் கூசுவதுபோலப் பிரமை. பயரியாவோ ஒரே காரம். பல், ஈறு எல்லாம் எரியும். கோல்கேட், வெள்ளை நிறத்தில் நைஸ் பல்பொடி வர ஆரம்பித்த பிறகே ஒழுங்காகப் பல் தேய்க்கும் பழக்கம் வந்தது. குடும்பத்திலேயே வறுமை நீங்கி ஐஸ்வர்யம் சேர்ந்து அந்தஸ்து வந்துவிட்டதைப் போல ஒரு எண்ணம். பேச்சுவாக்கில் நாங்க கோல்கேட்தான் தேய்க்கிறோம் என்று என் தாயார் உறவுக்காரப் பெண்ணிடம் ஒருமுறை பெருமைப்பட்டுக்கொண்டாள்.

குளியலுக்குப் பெரும்பாலும் லைஃப்பாய்தான். ஆரோக்கிய வாழ்வையே காக்கும் அந்த சோப்பின் கவரைப் பிரித்ததும் மகாபாரதத்தில் ஜராசந்தனைக் கிழிப்பதைப்போல அதை நூல்கொண்டு இரண்டாக வெட்டிவிடுவார்கள். முகப்பரு போகவும் முகம் பொலிவாக இருக்கவும் ராஜா ஸ்னோ. அதில் காஷ்மீர் தோட்டம்போல ஏதோ மரங்கள் படம் போட்டிருக்கும். அந்த ஸ்னோ என்பது வெண்மை யாக, குளிர்ச்சியாக வாசலின்போல இருக்கும். ரெமி என்றொரு பவுடர். வட்ட வடிவ டப்பியில் பஃப் போட்டு வைத்திருப்பார்கள். பஃப்பில் தொட்டு முகத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் அதைப் போட்ட பிறகு மாவில் விழுந்த சுண்டெலியாகத்தான் தெரிவார்கள், அல்லது அப்படிப்பட்டவர்கள்தான் பவுடர் போடுவார்கள்.

மேரே பேட்டா

செருப்பு என்றால் அந்தக் காலத்தில் பேட்டா மட்டும்தான். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெரிய நிறுவன ஊழியர்கள் மட்டும்தான் நல்ல செருப்பு, ஷூ அணிவார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் வெறுங்காலுடன் அல்லது நடந்தாலே சரக் சரக்கென்றோ டக் டக்கென்றோ ஓசை வரும் கனமான தோல் செருப்புகளைத்தான் அணிவார்கள். அணிபவருடன் ஆத்மார்த்தமான பழக்கம் ஏற்படும் நாள் வரை, புதுச் செருப்புகள் எல்லார் காலையும் கடித்துவைக்கும். சிறிது காலம் கழித்து கரோனா வந்தது. நடுவில் சேண்டக் என்று - தோலுமில்லாமல் பிளாஸ்டிக்குமில்லாமல் ஒரு செருப்பு வந்தது.

அப்போதெல்லாம், பேனா என்றால் பெரும்பாலும் அதில் போடுவது பிரில் இங்க்தான். இரண்டு ரூபாய் அல்லது மூன்று ரூபாய்க்குள். வாட்டர்மேன், பார்க்கர் என்றெல்லாம் பெரிய நிறுவனங்களின் பெயர்களைச் சொல்வார்களே தவிர, வாங்கியெல்லாம் தர மாட்டார்கள். பச்சை நிற ஜியோமெட்ரி பாக்ஸின் மேல் கோஹினூர் என்று பொன்னெழுத்தில் குதிரை படம் போட்டிருக்கும். காம்பஸ், அரைவட்டமானி எல்லாம் இரும்பு. பக்கத்து மாணவன் தொடையில் குத்த காம்பஸைப் போல நல்ல சாதனம் இல்லை. பி.யு.சி. படிக்கும்போதுதான் கேம்லின் நிறுவனத்தின் பிளாஸ்டிக் ஜியோமெட்ரி பாக்ஸ் ‘பார்க்கப்பட்டது'.

ரங்காராவ் சிகரெட்

பிஸ்கட் என்றால் பிரிட்டானியா, சாக்லேட் என்றால் நியூட்ரின். நடிகர்கள் ரங்கா ராவ், ரவிச்சந்திரன் எல்லாம் நைட்-கவுனோடு பெர்க்லி சிகரெட் பிடிக்கும் விளம்பரங்களை சுவரிலேயே ஒட்டியிருப்பார்கள். வீட்டில் சிகரெட் பிடிக்கிறவர்கள் இல்லாவிட்டாலும் வீதியில் பச்சா விளையாடுவதற்காகச் சேகரித்தவற்றில் பாசிங் ஷோ, பனாமா, கூல், சார்மினார், பெர்க்லி, சிசர்ஸ், சிவப்புக் கலர் அட்டையில் பியர்ஸ் என்று பலதும் பரிச்சயம். சிறிய பலசரக்குக் கடைகளில் முன்வரிசையில் நிற்கும்போது கறீம் பீடி, கணேஷ் பீடி, வெட்டுப்புலி தீப்பெட்டி என்று பெரியவர்களுக்கு நம் கையாலேயே வாங்கிக் கொடுத்து உபகாரம் செய்ததுண்டு.

என்ன சம்பந்தம்?

சினிமா தியேட்டர்களில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் சில விளம்பரங்கள் வரும். அதெல்லாம் முக்கியமான சமாச்சாரம் இல்லை என்பதால் பெண்கள் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இப்போதுபோல விளம்பரங்களைப் பார்த்ததும் புரிகிற வயது அல்ல அப்போதைய குழந்தைகளுக்கு. பின்னி நிறுவனத்தின் விளம்பரம் வரும். ரயில் நிலையத்தில் ஒரு ரயில் புறப்படத் தயாராகும். கார்டு கொடியைக் காட்டுவார். ஒரு குடும்பம் ரயிலில் போய் உட்காரும். “இதுக்கும்… துணிக்கும் என்ன சம்பந்தம்?” என்று நாங்கள் ‘முழிப்போம்'. ஒவ்வொரு விளம்பரம் முடிந்ததும் கை தட்டுவோம். (சனியன் ஒழிந்தது என்று!)

ஜலதோஷம், மூக்கடைப்பு, தாங்க முடியாத தலைவலியுடன் ஒருவர் துடிப்பார். அதைப் பார்த்து திரையரங்கில் உள்ளவர்கள் சிரிப்பார்கள். அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் அப்படியெல்லாம் எளிதில் சீக்காளியாகிவிட மாட்டார்கள். 4 விரலை நீட்டிக் காட்டி, 4 வழிகளில் அது எல்லாவற்றையும் போக்கிவிடும் என்பார். ஸாரிடான் விளம்பரம் அது. அமிர்தாஞ்சன், விக்ஸ் வேபரப்பும் விளம்பரத்தில் உண்டு. ஒரு சிறுவனைக் கட்டிலில் படுக்கவைத்து மார்பு, முதுகு என்று தடவுவார்கள். பம்பாய் சரக்கான விக்ஸ் விளம்பரமும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

அப்படியே சாப்பிடலாம்

ஐந்து தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஹார்லிக்ஸை மறக்க முடியுமா? ஒரு பாட்டில் ஆறு ரூபாய் (!), அதுவும் மெட்றாஸில் உறவி னரிடம் சொல்லி வாங்கிவந்து சாப்பிடுவார்கள். (அன்றைய ஹார்லிக்ஸைக் கலக்க வேண்டாம், உண்மையிலேயே அப்படியே சாப்பிடலாம்). போர்ன் விடாவும் அப்படியே. காற்று உள்ளே போனால் கட்டியாகிவிடும் என்று அவற்றையெல்லாம் திறப் பதைவிட மூடுவதில் வேகம் காட்டுவார்கள். கல்கி விளம்பரத்தில் வெங்கட்ராகவன் பிலிப்ஸ் சைக்கிள் ஓட்டுவார். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டபோது பெரியவர்களாகிவிட்டதாக உணர்வோம். பிலிப்ஸ், ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ. என்று ஏதாவது ஒன்றை வாங்கிவிட ஆசை. வேலைக்குப் போனால்தான் சைக்கிள் என்பார்கள் பெரியவர்கள். ராலே, ஹம்பர் தான் சைக்கிள்களில் உசத்தி என்று பெரியவர்கள் சிலாகிப்பார்கள். சில ஆண்டுகள் கழித்து அட்லஸ் வந்தது. ஹீரோவெல்லாம் சமீபத்திய வரவுகள்.

மெட்றாஸில் பஸ்ஸில் போகும்போது, ‘தமிழா அசாமைப் பார்’, ‘காஷ்மீரைப் பார்’, ‘ஆந்திராவைப் பார்’ என்று கரிக்கோடாக, சைதாப்பேட்டை தாடண்டர் நகர சுவர்களில் எழுதியதைப் பார்த்து, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் எளிமையான விளம்பரம் போல என்று நினைத்தது உண்டு. பிறகுதான் புரிந்தது அது பிரிவினைவாதிகளின் பிரச்சாரம் என்று!

தொடர்புக்கு: ranippettairangan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x