Last Updated : 04 May, 2016 12:22 PM

 

Published : 04 May 2016 12:22 PM
Last Updated : 04 May 2016 12:22 PM

ஆவலை வீசுவோம் 21 - கலக்கல் கணித தேடியந்திரங்கள்

கணிதம், அறிவியல், ரசாயனம் உள்ளிட்ட துறைகளுக்கான தனி தேடியந்திரங்கள்.

கணிதம் மீது விருப்பம் கொண்டவர்கள் சிம்பாலேப் ( >https://www.symbolab.com) தேடியந்திரத்தை பார்த்தால் உற்சாகம் கொள்வார்கள். அதன் முகப்பு பக்கம் கணிதவியல் குறியீடுகள் கொண்ட விசைப்பலகை மற்றும் சூத்திரங்களுடன் வரவேற்பதே இதற்கு காரணம்.

சிம்பாலேப்பும் ஒரு தேடியந்திரம் தான்; ஆனால், சாதாரண தேடியந்திரம் அல்ல. கணிதத்திற்கான சிறப்பு தேடியந்திரம்.

கணித சமன்பாடுகளை தேடுவதற்கான கணித சமன்பாடுகள் தொடர்பான சந்தேகம் இருந்தாலோ அல்லது தெளிவு தேவைப்பட்டாலோ இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். கணித சமன்பாடுகளை இதில் சமர்பித்தால் அதற்கான விடைகளை ஒவ்வொரு கட்டமாக அழகாக முன்வைக்கிறது. இந்த தேடியந்திரத்தை சோதித்து பார்க்கவே ஒரு திறன் வேண்டும். கணிதத்தில் திறமையும் ஆர்வமும் கொண்டவர்களே இந்த தேடியந்திரத்தை சீர்தூக்கி பார்த்து தீர்ப்பு வழங்க முடியும்.

கணிதத்திற்கு என்று தனியே தேடியந்திரமா என வியப்பு ஏற்படலாம். ஆனால், சிம்பாலேப் மட்டும் அல்ல; வேறு சில கணித தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன.

சர்ச் ஆன் மேத் டாட் காம் ( >http://www.searchonmath.com): மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கணித சமன்பாட்டை சமர்பித்து கணிதம் தொடர்பான இணைய பக்கங்களை தேடி கண்டுபிடிக்க உதவுகிறது. கணித சமன்பாடுகளை சமர்பிக்க வசதியாக இதன் முகப்பு பக்கத்தில் கணித குறியீடுகளை கொண்ட விசைப்பலைகை இருக்கிறது.

2008-ம் ஆண்டு பிரேசிலின் ரியோடிஜென்ரோவை சேர்ந்த கணித ஆய்வு மாணவர் பிளாவியோ பார்ப்பெய்ரி கோன்சாகாவால் (Flavio Barbieri Gonzaga) துவக்கப்பட்ட இந்த தேடியந்திரம் தொடர்ந்து ஆய்வு மாணவர்களின் பங்களிப்பால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

யூனிகேவஷன்.காம் ( >http://uniquation.com/en/): இணையத்தில் கணித தகவல்களை தேடித் தருவதற்கான தேடியந்திரம் என அறிமுகம் செய்து கொள்ளும் இந்த சேவையை பயன்படுத்த தகவல்களை குறிப்பிட்ட முறையில் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான விளக்கமான வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது. இணையத்தில் கணிதம் தொடர்பான பக்கங்களை தேட வழிகாட்டுகிறது.

ஈக்வேஷன்சர்ச் ( >http://www.equationsearch.com/): கணித சமன்பாடுகளுக்கான எளிமையான தேடியந்திரம். மாணவர்கள் வீட்டுப்பாடத்திற்காக பயன்படுத்தலாம். அல்ஜீப்ரா, ஜியாமெண்ட்ரி, கால்குலஸ் என தனித்தனி தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று தேடியந்திரங்களில் இருந்தும் சிம்பாலேப் வேறுபட்டிருக்கிறது. இது கணிதம் கற்பதற்கும் பயிற்சி பெறுவதற்குமான மேம்பட்ட வழியாக இருக்கிறது. அல்ஜீப்ரா, டிரிக்னாமெண்ட்ரி, கால்குலஸ் உள்ளிட்ட தலைப்புகளில் சமன்பாடுகளுக்கான விடையை தானாக போட்டு காண்பிக்கிறது.

மற்ற தேடியந்திரம் போல குறிச்சொற்களை கொண்டு தேடாமல், சமர்பிக்கப்படும் குறியீடுகளின் பொருளை உணர்ந்து அவற்றுக்கு பொருத்தமான முடிவுகளை முன்வைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சமன்பாட்டில் சி எனும் ஆங்கில எழுத்து நிலையான தன்மை கொண்டதாக இருக்கும். அதே எழுத்து வேறு ஒரு சமன்பாட்டில் மாறும் தன்மை கொண்டதாக இருக்கும். இது போன்ற நுணுக்கமான வேறுபாடுகளை எல்லாம் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் பிரத்யேகமான தேடல் முறை கொண்டு இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராபுக்கான கால்குலேட்டர், கணக்குகளை குறித்து வைப்பதற்கான குறிப்பேடு மற்றும் பயிற்சி செய்வதற்கான பக்கம் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.

இஸ்ரேலைச்சேர்ந்த எஸ்குவஸ்ட் (Eqsquest) எனும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. மைக்கேல் ஆன்வி (Michal Avny), ஆடம் ஆர்னான் (Adam Arnon ) மற்றும் லேவ் அலைஷே (Lev alyshayev) ஆகிய கணித புலிகள் இணைந்து இந்த தேடியந்தர நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தேடியந்திர செயல்பாடுகளுக்கு பின்னே கணிதம் இருக்கிறது என்றாலும் கூட, கணித தேடியந்திரங்கள் வழக்கமான தேடியந்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. கணிதவியல் சமன்பாடு மற்றும் குறியீடுகளை கையாள தனி முறை தேவை; லேட்டக்ஸ் சர்ச் ( >http://latexsearch.com/home.do) தேடியந்திரத்தில் இதுபற்றி தெரிந்துகொள்ளலாம்.

கணிதத்துக்கு மட்டும்தான் சிறப்பு தேடியந்திரங்கள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம். ரசாயனம் மற்றும் உயிரியலுக்கான தனி தேடியந்திரங்களும் இருக்கின்றன.

ரசாயனத்துறையை பொருத்தவரை கெமிக்கலைஸ் ( >http://www.chemicalize.org/) , கெம் எக்ஸ்பர் (https://www.chemexper.com/), இமாலிகியூல்ஸ் ( >https://www.emolecules.com/), கெம் ஸ்பைடர் ( >http://www.chemspider.com/ ) உள்ளிட்ட தேடியந்திரங்கள் மூலக்கூறு வடிவங்கள் மற்றும் அவற்றின் சூத்திரங்களை தேட உதவுகிறது. மூலக்கூறு வடிவங்களை வரைந்து காட்டும் வசதியையும் இவை அளிக்கின்றன. ரசாயன பெயர்கள் கொண்டு தேடும் வசதியும் இருக்கிறது.

இதேபோல வால்டோ ( >http://vadlo.com/) உயிரியலுக்கான தேடியந்திரமாக விளங்குகிறது. உயிரியல் சார்ந்த ஆய்வு தரவுகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளில் இருந்து தேடி தகவல்களை அளிக்கிறது. பயோ எக்ஸ்பிளோரர் ( >http://www.bioexplorer.net/search_engines/) தளமும் உயிரியல் கட்டுரை மற்றும் தகவல் தேடலில் கைகொடுக்கலாம்.

அறிவியல் சார்ந்த கட்டுரைகளை தேட சயன்ஸ் அட்வைசர் தேடியந்திரத்தை (http://science-advisor.net/) நாடலாம். அறிவியல் கட்டுரகள் மற்றும் அறிவியல் சார்ந்த விவாத குழுக்களில் இருந்து இது தகவலை தேடித்தருகிறது. பிசிக்ஸ்லேப் ( >http://www.physicslab.org/search.aspx) தேடியந்திர வழிகாட்டியும் இதற்கு உதவுகிறது.

சயிண்டில்லியான் ( >https://www.scientillion.com/) தேடியந்திரமும் அறிவியல் சார்ந்த அருமையான தேடியந்திரமாக இருக்கிறது. கட்டுரைகள், சூத்திரங்கள் என பலவற்றை தேடலாம். அறிவியல் கட்டுரைகள் தேடும்போது இது முன்வைக்கும் அறிவியல் முடிவுகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதை உணரலாம்.

- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 20 - பயனுள்ள பிடிஎப் தேடியந்திரங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x