Published : 29 May 2016 12:48 PM
Last Updated : 29 May 2016 12:48 PM
நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானி
‘கடவுள் துகள்’ எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியுமான பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs) பிறந்த நாள் இன்று (மே 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் நியூகேஸில் டைன் பகுதியில் (1929) பிறந்தார். தந்தை பிபிசி நிறுவனத்தில் ஒலிப்பதிவு பொறியாளர். அவரது பணி இடமாற்றம் மற்றும் சிறுவனான இவரது உடல்நிலை காரணமாக தொடக்கக் கல்வி முறையாக கிடைக்கவில்லை.
# வீட்டிலேயே பெற்றோரிடம் கல்வி கற்றார். பிரிஸ்டலில் இருந்த கோதம் கிராமர் பள்ளியில் 12 வயதில் சேர்ந்தார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் குவான்டம் மெக்கானிக்ஸ் துறையில் சாதனை படைத்திருந்ததால், அத்துறை மீது இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது.
# சிட்டி ஆஃப் லண்டன் பள்ளியில் கணிதத்தை சிறப்பு பாடமாக எடுத்து பயின்றார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து, இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப் பட்டமும், ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற்றார்.
# மூலக்கூறு அதிர்வுகள் தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து, 1954-ல் முனைவர் பட்டம் பெற்றார். சீனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக சேர்ந்து கணிதம் கற்பித்தார்.
# மீண்டும் எடின்பர்க் பல்கலைக்கழகம் திரும்பியவர், அங்கு கணித இயற்பியலில் விரிவுரையாளராக சேர்ந்து, ரீடராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக பதவியேற்று, 1996-ல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.
# எடின்பர்க் ராயல் சொசைட்டியில் ஃபெல்லோவாக 1983-ல் நியமிக்கப்பட்டார். அணுத்துகள் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார்.
# போசான் துகள்கள் குறித்து 1960-களில் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஆய்வு முடிவுகளை ஐரோப்பிய இயற்பியல் இதழில் ‘ஃபிசிக்ஸ் லெட்டர்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். தனியாகவும், பல்வேறு ஆய்வுக் குழுக்களில் இணைந்தும் பணியாற்றினார்.
# பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி எங்லெட்ர்டுடன் இணைந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் போசான் துகள்கள் குறித்து ஆராய்ந்தார். இது தற்போது இவரது பெயரால் ‘ஹிக்ஸ் போசான்’ துகள் எனக் குறிப்பிடப்படுகிறது.
# ஹிக்ஸ் போசான் துகள் மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக எங்லெர்ட்டுடன் இணைந்து 2013-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதுதவிர, ஹியூஸ் பதக்கம், ரூதர்ஃபோர்டு பதக்கம், டிராக் பதக்கம், வுல்ஃப் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் பதக்கம், எடின்பர்க் ராயல் சொசைட்டி பதக்கம், காப்ளே பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
# ‘கடவுள் துகள்’ என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்த பீட்டர் ஹிக்ஸ் இன்று 87-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் வசிக்கும் இவர், தற்போதும் பல குழுக்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT