Published : 18 May 2016 11:12 AM
Last Updated : 18 May 2016 11:12 AM

எம்ஜிஆர் 100 | 67: மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்!

M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.

1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!

இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

- தொடரும்...

படங்கள் உதவி: எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்



மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x