Published : 01 May 2016 01:05 PM
Last Updated : 01 May 2016 01:05 PM

ரமோன் கஸல் 10

ஸ்பெயின் விஞ்ஞானியும் நவீன நரம்பியல் துறையின் தந்தை என போற்றப்படுபவருமான சான்டியாகோ ரமோன் கஸல் (Santiago Ramon Cajal) பிறந்த தினம் இன்று (மே 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்பெயினின் பெடில்லா டி அரகான் நகரில் (1852) பிறந்தார். தந்தை அறுவை சிகிச்சை நிபுணர், உடற்கூறியல் பேராசிரியர். சிறுவன் ரமோனின் குறும்புகள் அதிகரித்ததால், பள்ளியில் இருந்து நிறுத்தினார் தந்தை. முடிதிருத்துபவரிடமும், செருப்பு தைப்பவரிடமும் மகனை உதவியாளராக சேர்த்துவிட்டார். அதன் பிறகும், பெரிதாக மாற்றம் இல்லாததால், மீண்டும் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர்.

* அற்புதமாக படம் வரையும் திறன்கொண்ட ரமோனுக்கு, ஓவியக் கலைஞராக வரவேண்டும் என்பது ஆசை. 16 வயது இருந்தபோது, கல்லறைத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்ற தந்தை, அங்கு கிடக்கும் எலும்புகளை படம் வரையுமாறு கூறினார். இதன்மூலம் மகனுக்கு உடற்கூறியலில் ஆர்வம் ஏற்படலாம் என்று நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

* தந்தை பணியாற்றும் ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் 1869-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் ரமோன். தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக பயின்றார். தலைசிறந்த மாணவருக்கான விருதை வென்றார். 1873-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

* கட்டாய ராணுவ சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கியூபா, ஸ்பெயினில் பணியாற்றினார். கடும் வயிற்று வலி, மலேரியாவால் அவதிப்பட்டதால், ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அம்மா, சகோதரிகளின் பராமரிப்பில் சிறிது காலம் இருந்து, உடல்நலம் தேறினார்.

* ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர், உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்குள்ள உடற்கூறியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

* வாலென்சியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவி னார். அழற்சி நோய்கள், காலரா, நுண்ணுயிரியல், எபிதீலியல் செல்கள், திசுக்களின் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். 1887-ல் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

* நரம்பியல் திசுக்களை ஆராய்வதற்கான கோல்கீஸ் முறையைக் கற்று, அதை மேம்படுத்தினார். மத்திய நரம்பு மண்டலத்தின் நரம்பியல் கட்டமைப்புகள், செல் வகைகள் அவற்றின் கட்டமைப்பு கள், அவற்றின் இணைப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார். துல்லியமான படங்களையும் வரைந்தார்.

* ‘நியூரான் டாக்ட்ரின்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட நரம்பு மண்டல கட்டமைப்பு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1906-ல் இத்தாலிய விஞ்ஞானி கமிலியோ கோல்கியுடன் இணைந்து இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* பல நூல்களை எழுதினார். பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழி களில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 1905-ல் டாக்டர் பாக்டீரியா என்ற பெயரில், ‘வெக்கேஷன் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் 5 அறிவியல் புனைகதைகளை எழுதி வெளியிட்டார். ஸ்பெயினில் கல்வி, அறிவியல் ஆராய்ச்சிகள் மேம்பாட்டுக்காக ஏராளமான முனைப்புகளை மேற்கொண்டார். உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் பல விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றார்.

* நோயியல் நிபுணர், தசைக்கூறு ஆராய்ச்சியாளர், சிறந்த நரம்பியல் விஞ்ஞானியுமான சான்டியாகோ ரமோன் கஸல் மரணப் படுக்கையிலும்கூட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 82-வது வயதில் (1934) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x