Published : 18 Apr 2022 07:42 PM
Last Updated : 18 Apr 2022 07:42 PM
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ‘தமிழ் மொழி விழா’வின் ஓர் அங்கமாக ஏப்ரல் 22-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ‘கடை ஏழு வள்ளல்கள்’ பற்றிய ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் தமிழ் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழை வாழ்வியல் சார்ந்த மொழியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் 2000-ஆம் ஆண்டில் தகவல்தொடர்பு மற்றும் கலை அமைச்சின் கீழ், ‘வளர் தமிழ் இயக்கம்’ எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், 2007-ஆம் ஆண்டு முதல் ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்' என்கிற முழக்க வரியுடன் ஏப்ரல் மாதம் முழுவதும் ‘தமிழ் மொழி விழா’ சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெற்றுவருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி விழாவுக்காக கலாமஞ்சரி தமிழிசை பரப்பு மன்றம் ‘கடை ஏழு வள்ளல்கள்’ பற்றிய ஆடல் - பாடல் நிகழ்ச்சியை ஏப்ரல் 22 அன்று கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்தில் மாலை 6.15 மணியிலிருந்து 7.45 மணி வரை நடத்த இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்துகொள்கிறார்.
“ஒரு மனிதன் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளும் தமிழ் இலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகிய கடையேழு வள்ளல்கள் தங்களின் கொடை வள்ளல் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்தனர். மக்களின் மனம் அறிந்து, அவர்கள் தேவையை உணர்ந்து வாரி வழங்கி நல்லாட்சி புரிந்தனர். அவர்கள் ஆற்றிய அரிய செயல்களை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்று கலாமஞ்சரியின் நிறுவனர் சௌந்தரநாயகி வயிரவன் தெரிவித்தார்.
சென்னையைச் சார்ந்த கலைமணி வி.சங்கர் இந்நிகழ்ச்சிக்குப் பாடல்கள் எழுதி இசையமைத்து இருக்கிறார். கலாமஞ்சரியின் நிறுவனர் சௌந்தரநாயகி வயிரவன் மற்றும் கலாமஞ்சரியின் ஆசிரியை உமா பிரகாஷ் இருவரும் பாடல்களைப் பாடவிருக்கின்றனர். எஸ்.தேவராஜன் மிருதங்கம் இசைக்க, வெ.சிவகுமார் வயலின் வாசிக்கிறார். மோகன பிரியா இந்நிகழ்ச்சியை வழிநடத்தவிருக்கிறார். ஸ்வர்ணா வர்ஷா குருமூர்த்தி தன் மாணவர்களுடன் நடன நிகழ்ச்சியை நடத்துகிறார். நட்சத்திரம் பிரேம்குமார் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்கிறார். இயல், இசை, நாட்டியம் வாயிலாக எளிய தமிழில், அரிய செயல்கள் செய்த மன்னர்களைப் பற்றி எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக இது அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT