Published : 04 Apr 2016 05:26 PM
Last Updated : 04 Apr 2016 05:26 PM
தேர்தல் ஆணையம் 100% வாக்குப் பதிவுக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வாக்காளனாக என் ஓட்டு விற்பனைக்கல்ல என்ற தேர்தல் விழிப்புணர்வு வீடியோ மூலம் திரைப்பட துணை இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி பொருத்தமான பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்.
ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்ற நேர்மையும், போடுறது முக்கியம் தான், ஆனா அத விட முக்கியம் யோசிச்சுப் ஓட்டு போடுறது என்ற சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத் தன்மையும் உங்களிடம் இருந்து ஆரம்பிக்கட்டும் என்கிறார்.
அதற்காக பிரச்சார தொனியில் எதையும் சொல்லவில்லை. ஓட்டுரிமை எனது பிறப்புரிமை… ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமே என்று உறுதிமொழியை எடுப்பதாக காட்சிப்படுத்தவில்லை.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது அரசியலில் குணப்படுத்த முடியாத புற்றுநோய். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொள்ளையனை விரட்டுவோம் என்று சபதம் எடுக்கச் சொல்லவில்லை.
மாறாக, சுமார் 30 பேரிடம் ஜெயச்சந்திர ஹஸ்மி இயல்பாக கலந்துரையாடுகிறார். ஓட்டுக்கு பணம் வாங்குவீங்களா? என்று கேட்காமல், பணம் கொடுத்தா எவ்ளோ வாங்குவீங்க? என்று கேட்பதில் பணத்துக்கும், வாக்காளருக்குமான தொடர்பை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறார்.
பணம் வாங்குவோம் என்ற வாக்காளர்களின் பதில்களும் வெளிப்படையாக வந்து விழுகின்றன. இவர்களுக்கெல்லாம் அவர் முத்தாய்ப்பாய் என்ன சொல்லிவிடப் போகிறார் என்பது நமக்கும் தெரியும்தான்.
ஆனால், இந்த 3.26 நிமிட வீடியோவின் இறுதியில் வரும் பாட்டி என்ன சொல்கிறார்? அவரின் ரியாக்ஷன் எப்படி? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்களும் என் ஓட்டு விற்பனைக்கல்ல என்று கெத்தாக சொல்வீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT