Published : 03 Apr 2016 10:40 AM
Last Updated : 03 Apr 2016 10:40 AM

ஹரிஹரன் 10

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகரும் சிறந்த கஜல் பாடகருமான ஹரிஹரன் (Hariharan) பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழ் குடும்பத்தில் (1955) பிறந்தவர். தந்தை திருவாங்கூர் இசைக் கல்லூரியின் முதல் பட்டதாரிகளில் ஒருவர். அங்கிருந்து மும்பை சென்று, தென்னிந்திய இசைப் பள்ளி நடத்தி வந்தார். இவரது தாயும் அசாத்திய இசை ஞானம் பெற்றவர். அவர்தான் ஹரிஹரனின் முதல் இசை குரு.

* பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எஸ்ஐஇஎஸ் கல்லூரியில் அறிவியல், சட்டத்தில் பட்டம் பெற்றார். சிறு சிறு கச்சேரிகள் நடத்தினார். தொலைக்காட்சியில் பாடினார். சிறு வயதில் இருந்தே இவருக்கு கர்னாடக இசையைவிட இந்துஸ்தானியில்தான் அதிக ஈடுபாடு இருந்தது.

* மெஹ்தி ஹஸன், ஜெக்ஜித் சிங் ஆகியோரது கஜல்களை விரும்பிக் கேட்டார். பிரபல பாடகரும் இசை ஆசானுமான உஸ்தாத் குலாம் முஸ்தபா கானிடம் மாணவராக சேர்ந்தார். தினமும் 13 மணிநேரம் இசைப் பயிற்சி செய்தார்.

* சிறந்த கஜல் பாடகராக வேண்டும் என்பதற்காக உருது கற்றார். மொழியின் நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* அனைத்திந்திய ‘சுர் சிங்கர்’ இசைப் போட்டியில் 1977-ல் வெற்றி பெற்றார். அங்கு நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் 1978-ல் ‘கமன்’ இந்திப் படத்தில் ‘அஜீப் ஸா நேஹா முஜ் பர்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பளித்தார். இதற்காக இவருக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

* அவரே இசையமைத்து, ஏராளமான கஜல் ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே பிரபலமான பல கஜல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வேறு ராகங்களில் பாடி வெற்றிகரமாக ஃப்யூஷன் இசையை வடிவமைத்தார். இது அவருக்கு இந்தியா, பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

* ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1992-ல் வெளிவந்த ‘தமிழா தமிழா’ பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பாடியுள்ளார்.

* தமிழில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், இந்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், பிற மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லெஸ்லி லூயிஸுடன் இணைந்து நடத்தும் ‘கலோனியல் கஸின்ஸ்’ இசைக்குழு சார்பில் பல ஆல்பங்களை வெளியிட்டார். ‘மோதி விளையாடு’, ‘சிக்குபுக்கு’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் இந்தக் குழு பின்னணி இசை அமைத்துள்ளது.

* இவருக்கு 1998, 2009-ல் தேசிய விருது கிடைத்தது. பத்ம, 2 முறை, தமிழக அரசு விருது, ஆந்திர, கேரள மாநில விருதுகள், ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். ‘நிலா காய்கிறது’, ‘விடுகதையா இந்த வாழ்க்கை’, ‘உயிரே உயிரே’, ‘ஒரு மணி அடித்தால்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன.

* தற்போது பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடிவருவதோடு தொலைக்காட்சிகளில் இசைப் போட்டிகளின் நடுவராகவும் செயல்பட்டுவருகிறார். இந்திய ஃப்யூஷன் இசையின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஹரிஹரன் இன்று 61-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x