Published : 02 Apr 2016 10:34 AM
Last Updated : 02 Apr 2016 10:34 AM
டென்மார்க் குழந்தை இலக்கிய எழுத்தாளர்
டென்மார்க்கை சேர்ந்த புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் படைப்பாளியான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் (1805) பிறந்தார். தொழிலாளியான தந்தை, தினமும் மகனுக்கு கதை கூறுவார். ஆண்டர்சன் இலவச பள்ளிக்கூடத்தில் பயின்றார். தந்தை இறந்த பிறகு, படிப்பும் நின்றது. 9 வயதிலேயே வேலைக்கு போகத் தொடங்கினார்.
# ஒரு நெசவாளரிடமும் பின்னர் ஒரு தையல்காரரிடமும் உதவியாளராக வேலை செய்தார். ‘பாடகராக வேண்டும்’ என்பது அவரது கனவுகளில் ஒன்று. 14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி கோபன்ஹேகன் சென்றார்.
# தெருக்களில் பாடினார். மக்களிடம் அது எடுபடாததால், பாட்டுடன் நடனமாடி, நடித்தார். அரசவை நாடக மன்றத்தில் நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையும் எழுதிவந்தார்.
# இவரது விடாமுயற்சியும், திறமையும் அந்த ஊர் முக்கியப் பிரமுகர் ஒருவரை வெகுவாக ஈர்த்தது. அவரது சிபாரிசால் மன்னர் இவருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஓரளவு கல்வி கற்றார். தொடர்ந்து எழுதுவதிலும் கவனம் செலுத்தினார்.
# முதல் கதையை 1822-ல் வெளியிட்டார். நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ‘எ ஜர்னி ஆன் ஃபூட்’ என்ற கதையை 1828-ல் எழுதினார். தொடர்ந்து இவர் எழுதிய ‘எ இன்ட்ரோவர்ட்’ கதை இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னர், ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கினார். புகழ்பெற்ற பலரை இப்பயணத்தில் சந்தித்தார்.
# ‘தி எம்பரர்ஸ் நியூ க்ளோத்ஸ்’, ‘தி ஸ்னோ குயீன்’, ‘தி லிட்டில் மெர்மெய்ட்’, ‘தம்பெலினா’, ‘தி அக்ளி டக்ளிங்’ உட்பட 350 கதைகளை எழுதினார். இவரது கதைகள் உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
# தன் உருவம், வறுமையால் இளம் வயதில் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தவர், அதுபோன்ற நிலை எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி, குழந்தைகளை மகிழ்விப்பதையே தனது நோக்கமாக கொண்டு கதைகளை எழுதினார். இவரது படைப்புகள் 125-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
# இவரது கதைகளைத் தழுவி பல திரைப்படங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவரது வாழ்க்கை வரலாறு ‘மை லைஃப் ஆஸ் எ ஃபேரிடேல்’ என்ற பெயரில் 2003-ல் திரைப்படமாக வந்தது.
# டென்மார்க் அரசு ஆண்டுதோறும் இவருக்கு ஊக்கத்தொகை அளித்தது. வாழ்நாளிலேயே தன் கனவை நனவாக்கி உலகப் புகழ்பெற்ற இவரை, ஒரு தேசிய பொக்கிஷமாக டென்மார்க் அரசு கொண்டாடுகிறது. இவரது 200-வது பிறந்தநாளை முன்னிட்டு 2005-ம் ஆண்டு ‘ஆண்டர்சன் ஆண்டு’ என்று கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாள் சர்வதேச குழந்தைகள் புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது.
# தனது படைப்புகள் மூலம் குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இவர், ‘குழந்தைகளின் அரசன்’ எனப் போற்றப்பட்டார். உலகக் குழந்தைகளை கவர்ந்த உன்னத படைப்பாளியான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் 70-வது வயதில் (1875) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT