Published : 19 Apr 2016 10:38 AM
Last Updated : 19 Apr 2016 10:38 AM
ஆரியசமாஜத்தின் தலைவர், கல்வியாளர்
ஆரியசமாஜம் அமைப்பின் முக்கியத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான மகாத்மா ஹன்ஸ்ராஜ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பஜ்வாரா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1864) பிறந்தவர். ஆரம்பக் கல்வியை அதே ஊரில் பெற்றார். 12 வயதில் தந்தையை இழந்தார். குடும்பம் லாகூருக்கு குடியேறிய பிறகு, அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தார்.
# லாகூரில் மிஷனரி பள்ளியில் பயின்றார். அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சுவாமி தயானந்தரின் உரையை ஒருமுறை கேட்டார். அதுமுதல், சமூக சேவையே வாழ்வின் லட்சியம் என தீர்மானித்தார். ஆரியசமாஜத்தில் இணைந்தார். படிக்காத மக்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொடுத்தும், கடிதங்களை படித்துக் கூறியும் வந்தார்.
# தயானந்தரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். ஆங்கிலக் கல்வியோடு, இந்திய பாரம்பரிய வேத கலாச்சார கல்வி வழங்கும் பள்ளியை நிறுவுவது குறித்து சமாஜ உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார்.
# லாகூரில் உள்ள ஆரியசமாஜ கட்டிடத்தில் தயானந்த் ஆங்கிலோ - வேதிக் (டிஏவி) பள்ளியை ஆரியசமாஜ சகாக்களுடன் இணைந்து 1886-ல் தொடங்கினார். அப்போது இவருக்கு வயது 22. இப்பள்ளியில் சம்பளம் வாங்காமல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 40 ரூபாய் சம்பளத்தில் இறுதிவரை பணியாற்றினார்.
# இதுதான் முதல் டிஏவி பள்ளி. இவரது தலைமையின் கீழ் இப்பள்ளி கல்லூரியாக வளர்ந்தது. லாகூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும் திகழ்ந்தது. தயானந்த் பிரம்ம வித்யாலயா, ஆயுர்வேத கல்லூரி, மகளிர் கல்லூரி, தொழில்நுட்ப பள்ளிகள், கல்லூரிகள் என இந்தியா முழுவதும் பரந்து விரிந்தது.
# தயானந்த் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவராக 1911-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூர் டிஏவி கல்லூரியின் முதல்வராக 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆரிய பிராதேஷிக் பிரதிநிதி சபாவின் தலைவரானார்.
# இந்தியாவில் 1895-ல் பஞ்சம் ஏற்பட்டபோது, ஆரியசமாஜ அமைப்பு சார்பில் இவரது தலைமையில் 2 ஆண்டுகளுக்கு மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டார்.
# இவர் சிறந்த சொற்பொழிவாளரும்கூட. பிரார்த்தனை, சுய பரிசோதனை, தேச பக்தி, மக்கள் சேவையை தன் சொற்பொழிவுகளில் வலியுறுத்தினார். 1927-ல் இந்தியா மற்றும் சர்வதேச ஆரியசமாஜ உறுப்பினர்களின் முதல் காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
# மிக எளிமையானவர். சம்பாதிக்கும் பணத்தை சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாதவர். தனக்காக சிறு நிலம்கூட வாங்காமல், இறுதிவரை முன்னோரின் பழைய வீட்டிலேயே குடியிருந்தார்.
# அளப்பரிய கல்விப் பணி ஆற்றியதால் ‘மகாத்மா’ என்று போற்றப்பட்ட ஹன்ஸ்ராஜ் 74-வது வயதில் (1938) மறைந்தார். நாட்டின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வரும் டிஏவி கல்வி நிறுவனங்கள், மகாத்மா ஹன்ஸ்ராஜின் கல்விச் சேவையை இன்றளவும் பறைசாற்றி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT