Published : 07 Apr 2016 10:28 AM
Last Updated : 07 Apr 2016 10:28 AM
M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.
பாரதியார் பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல் ஏற்கெனவே ‘மணமகள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி…’ என்ற வரிகளை சென்சார் அனுமதித்தது. ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.
‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராள மான புகார்கள். அப்போதிருந்த தணிக் கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண் டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’
படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி யிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை. ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.
சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.
அந்தப் பாடலில்,
‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’
என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.
எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம்
தமிழில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’. படத்தில் பேய் போன்று வேடமிடுபவர் வரும் காட்சிகள் சிறுவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT