Published : 06 Apr 2016 10:15 AM
Last Updated : 06 Apr 2016 10:15 AM
தொழிலதிபர், கொடை வள்ளல்
வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான டாக்டர் அழகப்ப செட்டியார் (Alagappa Chettiar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# சிவகங்கை மாவட்டம் கோட்டை யூரில் (1909) பிறந்தார். காரைக் குடி எஸ்எம்எஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லுரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
# லண்டன் சார்ட்டட் வங்கியில் முதல் இந்தியப் பயிற்சியாளராக 21 வயதில் சேர்ந்தார். விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார். வாழ்க்கையில் சாதனை படைக்கும் நோக்குடன் துணி வியாபாரத்தில் இறங்கினார். முதலில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என தொடங்கப்பட்ட கடை, கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையாக உருவெடுத்தது.
# மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
# விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கினார். 20 ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த ரூ.1 லட்சம் வழங்கினார்.
# சென்னையில் 1947-ல் நடந்த ஒரு விழாவில், ‘அறியாமையில் இருந்து இந்தியா விடுதலை பெற, பின்தங்கிய பகுதிகளில் கல்லூரிகள் தொடங்க செல்வந்தர்கள் முன்வர வேண்டும்’ என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற இவர், தன் சொந்த ஊரில் கல்லூரி தொடங்க ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அந்த விழாவிலேயே வழங்கி துணைவேந்தரிடம் அனுமதி பெற்றார்.
# மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை தொடங்கினார். காரைக்குடியில் 300 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வழிவகுத்தார். இதனால் இவரை ‘சோஷலிச முதலாளி’ எனப் புகழ்ந்தார் நேரு.
# இவரது முனைப்புகளும் கல்விக்காக வாரி வழங்கிய தயாள குணமும் இன்று காரைக்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. வனாந்திரமாக இருந்த காரைக்குடியை தொலைநோக்குப் பார்வையுடன் ‘கல்விக்குடியாக’ மாற்றியவர் எனப் போற்றப்பட்டார்.
# தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க சென்னை தி.நகரில் தொடங்கப்பட்ட தக்கர்பாபா வித்யாலயாவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத் தில் பொறியியல் கல்லூரி தொடங்க நன்கொடை வழங்கினார்.
# நாட்டு மருந்து ஆராய்ச்சித் துறையை எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியிலும், தமிழுக்காக ஓர் ஆராய்ச்சித் துறையை திருவனந்த புரம் பல்கலைக்கழகத்திலும் தோற்றுவித்தார். கொச்சியில் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மையம் நிறுவ நன்கொடை வழங்கினார்.
# அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. 1956-ல் பத்மபூஷண் விருது பெற்றார். தான் குடியிருந்த மாளிகையையும் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கி யவர். கல்விக் கொடை வள்ளல் என போற்றப்பட்ட அழகப்பச் செட்டியார் 1957 ஏப்ரல் 5-ம் தேதி 48-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT