Last Updated : 13 Apr, 2016 02:35 PM

 

Published : 13 Apr 2016 02:35 PM
Last Updated : 13 Apr 2016 02:35 PM

அரசியல் அலப்பறையும் கருத்தாளர்களின் கவனிப்புகளும்!

நான் இதுவரை பார்த்துவந்த தேர்தல்களில் எல்லாமே ஆளும் கட்சியின் செயல்பாடுகள் மீதுதான் நடுநிலையாளர்கள், கருத்தாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் விமர்சனங்கள் அதிகம் இருக்கும். ஒருவேளை, அந்தச் செயல்பாடுகளில் ஓரளவு திருப்தி கொண்டால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மீது கவனம் அதிகரிக்கும்.

இந்த மாதிரியான அணுகுமுறை ஆட்சியாளர்களையும், ஆட்சியை இழந்தவர்களையும் தங்களைத் திருத்திக்கொள்ள வழிவகுக்கும் என்று நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற முற்பாடுவார்கள்.

இந்த இரு தரப்பினர்கள் மீது எழுப்பப்பட்ட விமர்சனங்கள் சரியா, தவறா என்பதும், அது எடுபட்டதா இல்லையா என்பதும் கூட தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பொறுத்தும், யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் சாமானியர்களுக்குத் தெரியவரும்.

ஆனால், மக்கள் மத்தியில் கருத்துகளை உருவாக்குவதில் சமூக வலைதளங்கள் மிகுதியான ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில், அரசியல் விவாதங்கள், நேர்காணல்கள், பத்திரிகை சந்திப்புகள், ஃபேஸ்புக் - ட்விட்டர் கருத்துப் பதிவுகள் என பல தரப்பிலும் திமுக மீது அதிகமாகவும், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மீது அதற்கு இணையாகவும் அதிகம் விமர்சிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

அதிமுக மீது ஒப்புக்கு சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிமுகவுக்கு எதிரணியில் உள்ளவர்கள் என்ற அடையாளம் தெளிவாகத் தெரிந்தவர்கள் மத்தியில்தான் அதிக விமர்சனங்களே தவிர, நடுநிலையாளர்கள் - அரசியல் நோக்கர்கள் - சமூக ஆர்வலர்கள் - இணையதள கருத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து அப்படி குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எதுவும் என் கண்களில் மட்டும்தான் படவில்லையா?

ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சிற்சில நல்ல விஷயங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது, அப்படியொரு உன்னதமான ஆட்சியை அவர்கள் தந்துவிடவும் இல்லை என்பதை நான் பழகும் என்னைப் போன்ற சாமானியர்களிடம் பேச்சு கொடுத்தாலே தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், திமுக அதிகம் குறிவைக்கப்படுவதற்கு சில காரணங்களை யூகிக்க முடிகிறது.

ஆளும் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் அதற்கு மாற்று என்று பார்த்தால் மக்களுக்கு உடனே உதிப்பது திமுகதான். ஒரு பரிசுச் சீட்டு குலுக்கல்தனமாக யோசித்தால்கூட கடந்த வரலாற்றின் தரவுகளோடு பார்த்தால் அவர்கள் ஜெயிப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன என்ற நிலையே நீடித்து வந்தது. இப்போது, இரு கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி களம் கண்டுள்ள சூழலில், ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டும் திமுகவையே முதல் எதிரியாகக் கருதி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.

திமுகவின் வரலாறு என்பது வெவ்வேறு ஐந்தாண்டுகளில் வெவ்வேறு புதிய நூதன வகை வேலைகளில் சம்பந்தப்பட்டுவிடுகிறது. இதை நல்ல தன்மையிலும் எடுத்துக்கொள்ளலாம். தீய தன்மையிலும் எடுத்துக்கொள்ளலாம். பல நல்ல திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்தியிருந்தாலும் நல்ல தன்மை என்பது காலம் போகிற வேகத்தில் கரைந்துவிடும். ஆனால் ஊழல், லஞ்சலாவண்யங்கள், பழிதீர்க்கும் படலங்கள் என்ற தீய தன்மை என்பது அழியாக் கறையாக மனதில் தங்கிவிடும். ஊழல்... ஊழல் அரசாங்கம் என்று நினைக்கும்போது அதிமுகவை விட திமுகவே கண்முன் தோன்றுகிறது என்று தற்போதைய தேர்தல் விவாதங்களில் வைக்கும் வாதங்களில் முன்னணியில் நிற்கிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் நீக்கப்படுவது, மாற்றப்படுவதன் பின்னணியில் பேசப்பட்ட விவகாரங்கள் மறக்கப்பட்டு, இப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் மாற்றப்படுவதையே முக்கியமாக பேசுகின்றனர். எதிர்க்கட்சிகள்தான் வழக்கம்போல் அந்தக் கட்சியையும் ஊழலையும் இணைத்துப் பேசுகின்றனவே தவிர மற்ற தரப்பினர் அப்படி எதுவும் பேசாதது அந்தக் கட்சியின் கரங்கள் தூய்மையாக இருப்பதைக் காட்டுகிறதா?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சிகளுக்கு எதிராக பட்டியல் போடுவதில் உள்ள அக்கறையை விட, தங்களுக்கு வேறு வழியில் இடையூறு வந்துவிடக் கூடாது என்று கருதி, உள்ளரசியல் வேலைகளில் தீவிரம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது.

இவ்விருவருக்கும் மாற்றாக களம் கண்டுள்ள அணியின் இடத்தில் பதற்றம் இருக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை என்பதை அவர்களின் 'மாற்று' என்ற கோஷத்தைத் தாண்டிய தெளிவும் கொள்கைகளும் பெரிதாக இல்லாததையே அந்த அணித் தலைவர்களின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.

இவை தமிழக தேர்தல் களம் காணும் அணிகளின் நிலை என்றால், கட்சி சாராத வாக்காளர்கள் - கருத்தாளர்கள் தரப்பிடம் இப்போது நடக்கப்போகும் தேர்தல் என்பது ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்கால வாழ்வைப் பற்றியது என்ற சிந்தனையே பலருக்கும் இல்லை. அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்படப்போகும் காய்கள் எவை? வெல்லப்போகும் காய்கள் எவை என்பதுபோன்ற வேடிக்கைப் பார்க்கும் மூன்றாவது ஆளுக்குண்டான மனப்போக்கே பலரிடமும் உள்ளது. அரசியல்வாதிகளின் வார்த்தை கண்ணியத்தை அலசிக் காயப்போடும் இந்த நேரத்தில் அவர்களின் செயல்கண்ணியத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஐந்து முறை ஆட்சிக்கு வந்தபிறகும் ஆறாவது முறை வந்துவிட பிரயத்தனம் அவர்கள் செய்யத்தான் செய்வார்கள். அது எப்படி செய்யாமல் இருப்பார்கள். அதேபோல் 234 தொகுதிகளிலும் இலை சின்னம்தான் என்ற உறுதிப்பாட்டோடு தோழமை கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து இப்போதே வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அதிமுகவினர் இருக்கிறார்கள். புதிதாக அணி திரண்டவர்களோ திமுகவையும் அதிமுகவையும் விமர்சிப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வதைவிட, இரு கட்சிகளின் தற்போதைய, கடந்த கால ஆட்சிகளை விமர்சிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதும் வழக்கமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பொதுவானவர்கள் - கருத்தாளர்களின் அரசியல் பார்வை என்பது வெறும் அரசியல் சார்ந்ததேயன்றி, மக்கள் நலனுக்கான அரசியல் சார்ந்ததாக காண்பது அரிதாகவே உள்ளது.

அதாவது, திமுகவின் அரசியல் நகர்வுகளை விமர்சிக்கவும் கலாய்ப்பதற்கும் நல்ல ஸ்கோப்பும், அதன் பலனாக சுவாரசியத்தைக் காட்டி அதிக லைக்குகளும் வாங்கவே பலரும் முனைகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதேபோல், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் அன்றாட நடவடிக்கைகளை எதுகை மோனையுடன் கலாய்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுகவை எடுத்துக்கொண்டால், இந்த ரீதியிலான கலாய்ப்பும் விமர்சனங்களும் கூட மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதை கவனிக்க முடிகிறது.

ஆனால், கட்சிகளின் கொள்கைகள் ரீதியிலும், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் அவர்களின் செயல்பாடுகள் ரீதியிலாகவும் ஆக்கபூர்வமான கருத்துகளை மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் பாரபட்சமில்லாத பார்வையைப் பதிவு செய்வது என்பது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்.

தற்போது நிகழும் அரசியல் அலப்பறைகள் மீது கவனத்தைக் குவிக்காமல், மக்களுக்குத் தேவையான ஆட்சியின் தன்மைகளின் அடிப்படையில் கருத்தாளர்கள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது இப்போதைய அவசர அவசிய தேவையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x