Published : 12 Apr 2016 10:41 AM
Last Updated : 12 Apr 2016 10:41 AM

மெயர்ஹாஃப் 10

நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி மருத்துவர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் உயிரி வேதியலாளர் ஓட்டோ ஃபிரிட்ஸ் மெயர்ஹாஃப் (Otto Fritz Meyerhof) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியில் ஹானோவருக்கு அருகே உள்ள ஹில்டஸ்ஹைம் நகரில் வளமான யூதக் குடும்பத்தில் (1884) பிறந்தார். தந்தை வியாபாரி. சில ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பம் பெர்லினில் குடியேறியது. 14 வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

# சிறுநீரக பாதிப்பால் நீண்ட காலம் படுக்கையில் இருக்க நேர்ந்தது. அருகே இருந்து கவனித்த அம்மா, இவருக்கு ஏராளமான புத்தகங் களை வாங்கித் தந்தார். புத்தகம் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் நேரத்தை செலவிட்டார். உடல்நலம் தேறியதும் பெர்லின் சென்று மருத்துவம் பயின்றார். 1909-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.

# உளவியல் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். உளவியல், தத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர், அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். செல் உயிரியல் துறையிலும் ஆர்வம் பிறந்தது. 1912-ல் கீல் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை விரைவுரையாளராகப் பணியாற்றினார். உடலியல் குறித்து இவர் ஆற்றிய விரிவுரைகள் பின்னர் நூலாக வெளிவந்தது.

# அமெரிக்காவில் உயிரி வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஜெர்மனி இவரை இழக்க விரும்பவில்லை. 1936-ல் ஹைடல்பர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான கைசர் வில்ஹெம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு அழைக்கப்பட்டார்.

# ஜெர்மனி அரசியல் நிலைமை 1938-ல் மோசமானதால், நாட்டை விட்டு வெளியேறி பாரீஸ் சென்றார். அங்குள்ள பிரபல நிறுவனத்தில் ஆராய்ச்சித் துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1940-ல் நாஜிக்கள் படை பிரான்ஸில் ஊடுருவியபோது, பாரீஸில் இருந்து தப்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

# முதலில் ஸ்பெயினுக்கும், பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ராக்ஃபெல்லர் அறக்கட்டளை இணைந்து இவருக்காகவே உருவாக்கிய உடற்கூறு வேதியியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியர் பதவியில் அமர்ந்தார்.

# தசைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றங்கள், தசை சுருங்கும்போது கிளைகோஜன், லாக்டிக் அமிலமாக மாறும் முறை, செல்களில் ஆக்சிஜனேற்ற வழிமுறைகள், பாக்டீரியாக்களின் சுவாச செயல்முறைகள், ஆக்சிஜனேற்ற செயல்பாட்டில் நார்கோடிக்ஸ், மெத்தலின் ப்ளூவின் விளைவுகள் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் ஆராய்ச்சி மூலம் அனைத்து செல்கள், திசுக்களில் காணப்படும் சுவாசம், ஆல்கஹால் நொதித்தலின் கோ-என்சைமை கண்டறிந்தார்.

# தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக இங்கிலாந்து உடற்கூறியலாளர் ஏ.வி.ஹில்லுடன் இணைந்து 1922-ல் உடற்கூறியல்/ மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

# லண்டன் ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# அமெரிக்காவில் பணிபுரிந்த 10 ஆண்டுகளில் மட்டும் 50 கட்டுரைகளை வெளியிட்டார். ஒட்டுமொத்தமாக அறிவியல் இதழ்களில் 400 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இறுதிவரை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவரும் உடற்கூறியல் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான மெயர்ஹாஃப் 67-வது வயதில் (1951) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x