Published : 02 Apr 2016 03:44 PM
Last Updated : 02 Apr 2016 03:44 PM

எம்ஜிஆர் 100 | 30 - எதையும் கொடுத்தே பழக்கம்!

M.G.R. படங்களில் ரசிகர்கள் மிகவும் விரும்புவது சண்டைக் காட்சிகள். சிலம்பம், வாள்வீச்சு, சுருள் கத்தி சுழற்றுதல் போன்ற சண்டைக் கலைகளை எம்.ஜி.ஆர். முறைப்படி பயின்றவர். அவர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வன்முறை, ரத்தம் இருக்காது. சிரித்துக் கொண்டே எதிரிகளை பந்தாடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இன்றும் அவர் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது படத்தின் ‘ஸ்டன்ட்’ இயக்குநரைவிட எம்.ஜி.ஆர். அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆலோசனை கள் சொல்வார். கேமராவை வேகமாக ஓடவிட்டு, திரையில் பார்க்கும்போது சண்டை வேகமாக நடப்பது போன்ற ‘டெக்னிக்’ எல்லாம் கிடையாது. முழு வேகத்துடன் எம்.ஜி.ஆர். சண்டையிடு வார். அவரது வேகத்துக்கு உடன் நடிப் பவர்களால் ஈடுகொடுக்க முடியாது. ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் அவரது வாள் வீச்சின் வேகம் எப்படி இருந்ததோ, அதே வேகம் அவரது கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்திலும் இருந்தது.உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். எச்சரிக்கையாக இருப்பார்.

அதையும் மீறி சில நேரங்களில் அசம் பாவிதம் ஏற்பட்டு விடும். ‘அன்னமிட்ட கை’ படத்தில் ‘ஸ்டன்ட்’ கலைஞர்களோடு எம்.ஜி.ஆர். மோதும் சிலம்ப சண்டைக் காட்சி மைசூர் அருகே பாண்டவபுரம் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. முன்னதாக, தன்னுடன் சண்டையிடும் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகளை கூறினார்.

காட்சியை படமாக்க இயக்குநர் ‘ஸ்டார்ட்’ சொன்னதும், எம்.ஜி.ஆர். கையில் இருந்த கம்பு எட்டுதிசைகளிலும் மின்னலாய் சுழன்றது. குச்சியை சுழற் றிக் கொண்டே எம்.ஜி.ஆர். நகர்ந்து வரும் போது, அதைத் தடுத்து சண்டை போட்ட திருமலை என்ற ‘ஸ்டன்ட்’ கலைஞர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார். இதில் அவரது கட்டை விரலில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அங் கிருந்த தனது குடும்ப டாக்டர் பி.ஆர். சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். அழைத்து திருமலைக்கு சிகிச்சை அளிக்கச் செய்தார்.

சிலம்பத்தில் முக்கியமானது ‘மாடி’ என்று கூறப்படும் மான் கொம்பு சுழற் றும் கலை. அதிலும் எம்.ஜி.ஆர். தேர்ந்த வர். ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மான் கொம்பு சண்டை அதற்கு உதா ரணம். ஸ்டன்ட் நடிகர்கள் ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி.ஆருடன் மோதுவார்கள். அவர் களது சிலம்பாட்டத்தை மான் கொம்பால் எம்.ஜி.ஆர். அனாயசமாக தடுத்து விளை யாடுவார்.

இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு கோணமும் எம்.ஜி.ஆரால் தீர்மானிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது, ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து ஆரவாரம் செய்யும். படம் வெளியானபோது பல இடங்களில் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தியேட்டருக்குள்ளேயே வெடி வைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தப் படத்தைபோல மான் கொம்பு சண்டைக் காட்சி வேறு எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை.

சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன், கரிகாலன் என்று எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். இரண்டு எம்.ஜி.ஆரும் பிச்சுவா கத்தி மூலம் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ‘ஹைலைட்.’ இரண்டு பாத்திரங்களும் கத்தியை வீசும் ஸ்டைலே வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கம் செய்ததோடு, காட்சியின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும்படி ‘எடிட்’ செய்தார் எம்.ஜி.ஆர்.

இந்தக் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டுடியோ வந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, படப் பிடிப்பை காண ஆசைப்பட்டார். விஷயம் கேள்விப்பட்டு தர்மேந்திராவை வரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தர்மேந்திராவின் விருப்பத்தை அறிந்து படப்

பிடிப்பை பார்க்க மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். அனுமதி அளித்தார். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் தர்மேந்திரா. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிச்சுவா கத்தியை தொட்டுப் பார்த்து, ‘‘நிஜக் கத்தியிலேயே ஃபைட் பண்றீங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, காட்சியின்போது வரும் வசனங்களும் பெரிதும் பேசப்படும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு முன் கடற்கரை ஓரத்தில் மலைப்பாங்கான இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கத்திச் சண்டை நடக்கும்.

‘‘இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்’’ என்றுகூறி, எம்.ஜி.ஆரை நம்பியார் சண்டைக்கு அழைப்பார். மோத தயாராகும் எம்.ஜி.ஆரை, பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி ஜெயலலிதா பயந்து தடுப்பார். அவருக்கு தைரியம் சொல்லும் வகையில், ‘‘இரு பூங்கொடி, சற்று விளையாடிவிட்டு வருகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லும் பதிலால் தியேட்டரே உற்சாகத்தில் அலறும்.

இந்தியில் தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாராத்’ படம்தான் தமிழில் ‘நாளை நமதே’ ஆனது. படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். ஒரு காட்சியில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆரை, நம்பியாரின் மகனாக நடிக்கும் நடிகர் அறைந்து விடுவார். தியேட்டரில் ரசிகர்கள் ஆவேசப்படுவார்கள். அடுத்த சில விநாடிகளில் அந்த ஆவேசம் உற்சாக பெருவெள்ளமாய் மாறும்.

காரணம், பதிலுக்கு அந்த நடிகரை எம்.ஜி.ஆர். அடிப்பார் என்பது மட்டுமல்ல, அதற்கு முன் அவர் சொல்லும் வார்த்தைகள்…. ‘‘எனக்கு கொடுத்துதான் பழக்கம் வாங்கிப் பழக்கம் இல்ல’’ உண்மைதான். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தே பழக்கம்; எதையும்…. சண்டைக் காட்சிகளில் உதையும்.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x