Published : 17 Apr 2016 11:47 AM
Last Updated : 17 Apr 2016 11:47 AM
பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநர் சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் (1899) பிறந்தார். தந்தை மருத்துவர். மருத்துவம் படிக்க கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், கல்வி உதவித்தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
* அவரது பேராசிரியர் கூறியபடி, கரப்பான் பூச்சி குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பிறகுதான், பூச்சிகள் உலகின் மீது இவருக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது. பூச்சிகளின் உடல் அமைப்பு, திசுக்கள், உறுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* பூச்சிகளின் உடற்கூறியல் தொடர்பான இவரது ஆய்வுகள் பூச்சியியல் துறையின் அடித்தளமாக கருதப்படுகின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையிலும் உயர் கல்வியை முடித்தார்.
* முதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் பணிபுரிந்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீனில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அடுத்து, லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சி உடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
* பூச்சிகளின் உருமாற்றம் குறித்த இவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தென் அமெரிக்காவில் காணப்படும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளில் ஒரு முக்கியமான வளர்ச்சி ஹார்மோன், அதன் மூளைச் செல்களில் உள்ள நரம்புச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது என்பது இவரது ஆய்வில் தெரியவந்தது.
* சில பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டும்வரை, முதிர்ச்சிக்கான அம்சங்கள் அதன் உடலில் ஏற்படாதவாறு வேறு சில ஹார்மோன்கள் தடுக்கின்றன என்பதையும் கண்டுபிடித்தார். அதற்கு ‘ஜுவனைல் ஹார்மோன்’ எனப் பெயரிட்டார்.
* பூச்சியின உருமாற்றம் தொடர்பாக தெளிவான கோட்பாட்டை உருவாக்கினார். பூச்சிகளின் அமைப்பியல் மற்றும் வளர்ச்சிப் பண்புகளை அவற்றின் மரபணு கூறுகளின் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.
* ‘இன்செக்ட் ஃபிசியாலஜி’ என்ற நூலை 1934-ல் எழுதினார். இது இன்றளவும் பூச்சியியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது. 1939-ல் இவர் எழுதிய ‘தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி’ என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது. தன் ஆராய்ச்சிகள் குறித்து 300 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இவரது அனைத்து நூல்களுமே உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
* உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் ஆற்றினார். பயன்பாட்டு உயிரியல் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ல் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. இது தவிர, ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார்.
* பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் பன்னெடுங்காலமாக நடக்கின்றன. ஆனால், பூச்சிகளின் உடற்கூறியல் குறித்து ஆராய்ந்து, அதற்கென்ற ஒரு புதிய அறிவியல் துறைக்கு அடித்தளமிட்ட வின்சென்ட் விகில்ஸ்வொர்த் 95-வது வயதில் (1994) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT