Published : 08 Apr 2016 10:40 AM
Last Updated : 08 Apr 2016 10:40 AM
அமெரிக்க வானியல் நிபுணர்
உலகப் புகழ்பெற்ற வானிலையாளரும், பல அறிவியல் கருவிகளை கண்டறிந்தவருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் பிலடெல்பியா அருகே ஏழை விவசாயக் குடும்பத்தில் (1732) பிறந்தார். குடும்ப வறுமையால் முறையாக பள்ளிக்கு செல்லவில்லை. கணிதம், இயந்திரங்கள் குறித்து ஒரு உறவுக்காரரிடம் கற்றார். அவர் தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார்.
# அறிவுக்கூர்மை மிக்க இவர் நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். நிறைய கணிதப் புத்தகங்கள் படித்தார். மரவேலைகளும் தெரியும். 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும் பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார்.
# நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.
# தந்தையின் வயலில் ஒரு கடையைத் தொடங்கினார். அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் செக்டார், டெலஸ்கோப் போன்ற வானியல் ஆராய்ச்சிகளுக்கான கருவிகளை உருவாக்கினார். பாராமீட்டர்கள், பாக்கெட் மெட்டாலிக் தெர்மாமீட்டர், ஹைக்ரோமீட்டர் உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின.
# பல்வேறு வகையான காம்பஸ்களை தயாரித்தார். வெர்னியர் கண்காணிப்பு காம்பஸை உருவாக்கியவர் இவர்தான் என கூறப்படு கிறது. தேசிய பொது நிலங்களை சர்வே எடுக்க, இவரது பெயரி லான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட காம்பஸ்களை’ அரசு பயன் படுத்தியது. பிலடெல்பியா நகர சர்வேயராக 1774-ல் நியமிக் கப்பட்டார்.
# வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது.
# மற்ற மையங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவி களைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770-ல் நிரந்தரமாகக் குடியேறினார். அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார்.
# புதன், வியாழன், யுரேனஸ் ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்தார். விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.
# ‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784-ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792-ல் வெளியிட்டார்.
# பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. படித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானிய லாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் 64-வது வயதில் (1796) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT