Published : 08 Apr 2016 11:40 AM
Last Updated : 08 Apr 2016 11:40 AM

எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!

M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.

மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.

படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’, ‘அன்பே வா’, ‘ஒளிவிளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ரிக் ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய படங்கள் மதுரையில் 20 வாரங்களுக்கு மேலும், ‘குடியிருந்த கோயில்‘, ‘நம்நாடு’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் 19 வாரங்களும் ஓடி சாதனை படைத்தன.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x