Published : 08 Apr 2016 09:36 AM
Last Updated : 08 Apr 2016 09:36 AM
“எல்லாக் கட்சியுமே சனியன்தான். இதில் எந்த சனியன் தேவலாம் என்றால் எப்படி பதில் சொல்வது? இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில், புத்தியுள்ள மக்கள் ஓட்டுச் சாவடிக்குப் போக மாட்டார்கள்” - தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன் டாக்டர் ராமதாஸின் நிலைப்பாடு இது. அதன்படி 1989 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது பாமக. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு வெற்றி கிடைக்காதபோதும் சுமார் 15 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
அந்த உற்சாகத்தில் முஸ்லிம் லீக் (அப்துஸ் சமது), குடியரசுக் கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்), தமிழர் தேசிய இயக்கம் (பழ.நெடுமாறன்), தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 1991 தேர்தலைச் சந்தித்தது பாமக. ராஜீவ் அனுதாப அலை வீசிய அந்தத் தேர்தலில் பண்ருட்டியில் போட்டியிட்ட ராமச்சந்திரனைத் தவிர, அனைவரும் தோல்வியடைந்தனர்.
அதன் பிறகு, திமுகவை நெருங்கத் தொடங்கியது பாமக. அநேகமாக 1996 தேர்தலில் திமுக அணியில் பாமக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. தொகுதிப் பங்கீட்டு விவகாரம் இழுபறியில் இருந்தது. அந்தச் சமயத்தில் திடீரென தமாகா உருவானதால், திமுக அணியில் பாமக முக்கியத்துவம் இழந்தது. “அவர்களாக வந்து பேசினால்தான் உறவு. இனி நாங்களாகப் போய்ப் பேச மாட்டோம்” என்றார் ராமதாஸ். “நண்பர்களாக இருந்த நாங்கள் நண்பர்களாகவே பிரிகிறோம்” என்று கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருணாநிதி. ஆகவே, மதிமுக தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன.
மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சி, ஜனதாதளம், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் ஆகியவற்றைக் கொண்ட அணியை உருவாக்கும் நோக்கத்துடன் வைகோவும் ராமதாஸும் பேசினர். அப்போது மதிமுக - பாமக கூட்டணி என்ற பெயரை விரும்பியது பாமக. ஆனால், மதிமுக கூட்டணி என்பதில் மதிமுக உறுதி காட்டியது. விளைவு, கூட்டணி முயற்சிகள் தோல்வியடைந்தன.அதிருப்தியடைந்த ராமதாஸ். “கருணாநிதி பெரிய அண்ணன் என்றால், கோபால்சாமி பெரிய அண்ணனுக்கே பெரிய அண்ணன்” என்று விமர்சித்தார்.
இறுதியாக, பாமக தலைமையில் 12 கட்சிகள் கொண்ட ஊழல் ஒழிப்பு - சமூகநீதி முன்னணி உருவானது. அதில் வாழப்பாடியாரின் திவாரி காங்கிரஸ், கோவை செழியனின் தமிழ்த் தேசியக் கட்சி, பூவை மூர்த்தியின் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 12 கட்சிகள் இடம்பெற்றன. பாமக 116 தொகுதிகளிலும் திவாரி காங்கிரஸ் 50 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது வீசிய அதிமுக எதிர்ப்பு அலையில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. அதேசமயம், பாமகவுக்குப் பேராசிரியர் தீரன், ஜி.கே.மணி உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் புதிய பாதைக்குத் திரும்பியது பாமக!
- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT