Published : 20 Apr 2016 10:33 AM
Last Updated : 20 Apr 2016 10:33 AM
M.G.R. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.
மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.
மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’
உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.
‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.
உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.
விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். ராணுவ அதிகாரி யாக ‘கேப்டன் சரவணன்’ என்ற பாத்திரத்தில் நடித்த படம் ‘கன்னித்தாய்’. சென்னையில் ஆங்கில படங்களே திரையிடப்பட்டு வந்த சபையர் திரையரங்கில் முதன்முதலில் ஆறு வாரங்கள் மட்டுமே என்ற விளம்பரத்துடன் வெளியான தமிழ் படம் ‘கன்னித்தாய்’. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT