Last Updated : 20 Jun, 2014 10:00 AM

 

Published : 20 Jun 2014 10:00 AM
Last Updated : 20 Jun 2014 10:00 AM

வாகனப் பதிவின் வகைகள் அறிவோம்

# இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனம் பதிவு செய்யும் முறையில் வித்தியாசம் உள்ளதா?

இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் முழுவதுமாக பாடி கட்டப்பட்ட பிறகே விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் சாலையில் ஓட்டுகிறோம். அவற்றுக்கு எப்படி வாகனப்பதிவு செய்வது என்று நேற்று பார்த்தோம். லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் பாடி கட்டாத நிலையில் விற்கப்படுகின்றன.

வாங்குவோர்தான் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பாடி கட்டிக்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்துக்கு பாடி கட்டியிருப்பதாக பாடி கட்டுவோர் சான்று வழங்குவர். அந்த சான்றுடன் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து கனரக வாகனங்களை பதிவு செய்ய வேண்டும்.

# வாகனப் பதிவுக்கு கட்டணம் எவ்வளவு?

இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். அதற்கு பதிவுக் கட்டணம் ரூ.300 ரூபாய். 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400. 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.500. இருசக்கர வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.30.

# சொந்த ஊர் இல்லாத மாவட்டம், மாநிலத்தில் வாகனம் பதிவு செய்ய முடியுமா?

வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அவ்வாறு வாங்கும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரி இருக்கவேண்டும். அதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாகனம் வாங்கும் இடத்தில் அவற்றை பதிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், தற்காலிகமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பிறகு நிரந்தர, தற்காலிக முகவரி உள்ள பகுதிக்கு வந்து, அந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

# வங்கிக் கடன் மூலம் வாங்கும் வாகனங்களுக்கு பதிவுச் சான்று (ஆர்.சி.) யாரிடம் வழங்கப்படும்?

வாகன உரிமையாளரிடம் மட்டுமே வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கியிருந்தால் அடமானம் என பதிவுச் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கிக் கடன் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் நிலுவையில்லாச் சான்று வழங்கப்படும்.

அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து, ‘அடமானம்’ என்று குறிப்பிட்டிருப்பதை நீக்கம் செய்துகொள்ளலாம். வங்கிக் கடனை சரிவர செலுத்தாத பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பைனான்சியரிடம் பதிவுச் சான்று வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x