Published : 13 Jun 2014 07:18 PM
Last Updated : 13 Jun 2014 07:18 PM
சென்னை மியூசிக் அகாடமியில் மேஜிக் லான்டர்ன் குழு பெருமையுடன் நாடக வடிவில் வழங்கும் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - என்று ஏறத்தாழ ஒரு மாதம் முன்னரே பிரசித்தமாக வானொலி, தொலைகாட்சி, நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்து வகையான ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.
டிக்கெட் விற்பனை தொடங்கிய நாளன்றே என் அண்ணன் (கல்லூரி சீனியர்) பொன்னியின் செல்வனுக்கு ஜூன் எட்டு போகலாம் வரீயா? என்றார். நானும் உடனே சம்மதித்து விட்டேன். என்னைத் தவிர உடன் வந்த நால்வரும் கல்கியின் தீவிர வாசகர்கள். பொன்னியின் செல்வன் நாவலின் அனைத்துப் பாகத்தையும் முழுமையாக படித்தவர்கள்.
'பொன்னியின் செல்வன்' வரலாற்றுக் களஞ்சியம் ஆயிற்றே... இதை எப்படி மூன்றரை மணிக்குள் நாடகமாக்கப் போகிறார்கள் என்ற ஐயம் இவர்களிடம். நாடகத்தின் ஒரு காட்சியை கூட தவறவிடக் கூடாது என்ற முனைப்பில் முன்கூட்டியே ஆட்டோவில் ஏறிக்கிளம்பிவிட்டோம்.
தியாகராய நகரிலிருந்து ஆழ்வார்பேட்டை வந்தடையும் வரை நாவலைப் பற்றியும் கல்கியைப் பற்றியும் நண்பர்கள் விவாதித்துக் கொண்டே வந்தனர். அந்தக் கூட்டத்திலே நான்தான் விஷயம் தெரியாதவன். நாவலில் அமைத்திருந்த கதாப்பாத்திரங்கள் பற்றி இவர்கள் பேசியதை ஏதும் புரியாமல் அறியாமைப் பார்வையில் பார்த்து வந்தேன்.
மியூசிக் அகாடெமி வந்தடைந்தோம். ஒருவித ஆச்சரியம் மனதில் உட்புகுந்தது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப்போனதால் ஒரளவு நல்ல மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்த்தேன், சரித்திர நாடகத்திற்கென வருவோர் நாற்பதுக்கும் மேற்பட்ட வயதுடையோர்களாகத்தான் இருப்பார்கள் என எண்ணினேன். எதிர்பார்த்ததை விட மிக அதிகமான கூட்டம் இருந்தது. என் வியப்பு அதுவல்ல. நாற்பதுக்கும் மேற்பட்ட வயதினரை எதிர்ப்பார்த்தேன் எனக் கூறினேன் அல்லவா, அங்கே சிறிய குழந்தையில் தொடங்கி, இளையவர், நடுத்தர வயதினர், முதியவர் என வயது வரம்பின்றி பலரும் திரண்டிருந்தனர்.
அரங்கத்தின் வெளியே பல வரலாற்றுப் பெட்டகங்கள்: பொன்னியின் செல்வனுக்கென வரையப்பட்ட மணியனின் ஓவியங்கள், கல்கி மேற்கொண்ட ஆய்வுகளின் பதிவுகள், ஓலைகளில் கிடைத்த தகவல்கள், சோழர்கள் வம்சாவளி வரலாறு... இப்படிப் பல அம்சங்கள் வெளியிலேயே நம் மனதைக் கவர்ந்திழுத்தன.
அரங்கத்திற்குள் நுழைந்தால் கும்மிருட்டு. அருகே ஒரு முதியவர் அவர் மனைவியுடன் புத்தகத்தை பற்றி பேசிய வண்ணம் அமர்ந்திருந்தார். வயதான பாட்டி தனது மூட்டு வலியையும் பொருட்படுத்தாது நாடகம் பார்க்கும் ஆர்வத்துடன் படிக்கட்டு பலவற்றையும் ஏறி பால்கனியில் கடைசியில் அமைந்திருந்த தன் இருக்கையை வந்தடைந்தார். அரங்கத்தில் ஓர் அற்புத சூழல், முதற்காட்சிக்கு கூடியுள்ள பலரிடமும் ரசனை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதை உணர முடிந்தது. இவர்கள் பலருக்கும் புத்தகத்தை பற்றி நிறைய தெரிந்திருக்கிறதே ஒன்றும் தெரியாத எனக்கு இன்று நாடகம் புரிந்த மாதிரி தான் எனத் தோன்றியது.
ஐந்து ஐம்பத்தெட்டாகிவிட்டது. ஆறு மணிக்கு நாடகம் துவங்க வேண்டும், அரங்கத்தில் இன்னும் கும்மிருட்டு. வேண்டுமென்றே இவர்கள் இப்படி செய்வது போலத்தான் தோன்றியது. ஆறு மணிக்கு சரியாக மணி அடித்தது. அரங்கத்தில் நிறைந்திருந்த சலசலப்பை தூரத்திலிருந்து வந்த ஒரு குரல் நிறுத்தியது.
1950' ஆம் ஆண்டு முதல் 1954 ஆண்டு வரை கல்கியால் தொடர்கதையாக்கப்பட்டது பொன்னியின் செல்வன். ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது, பல திரையுலக பிதாமகர்களால் வெவ்வேறு காலங்களில் தொடங்கப்பட்டு பின் வெவ்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் இன்றுவரை திரைப்படமாக்கப்படவில்லை. இந்த வரலாற்றுப் பெட்டகத்தை மூன்றரை மணி நேரத்திற்கு ஒரு நாடகமாக்கி இந்த சவாலான முயற்சியை உங்கள் முன் பதிக்கவுள்ளோம். இதை காணொளியாகவோ, புகைப்படமாகவோ நீங்கள் உங்கள் செல்லிடப்பேசியில் பதிவிடக்கூடாது எனக்கேட்க விழைந்தோம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை, ஏன் என்றால் சோழர் காலத்தில்தான் செல்லிடப்பேசி கிடையாதே! நீங்கள் போகப்போவதும் சோழர் காலத்திற்கு தானே! அதனால் அதற்கான அவசியம் இல்லை. இந்த நொடி முதல் நீங்கள் சோழர்கள் வாழ்ந்த உலகிற்கு செல்லப் போகிறீர்கள் இதோ உங்கள் முன்னால் 'பொன்னியின் செல்வன்' என்று கூறி அம்மனிதர் வெளியேறினார்.
அவர் பேச்சில் ஆணவம் துளியளவிலும் தெரியவில்லை. மாறாக தன் குழுவின்பால் பதிந்து கிடக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அதில் பிரதிபலித்தது.
திரையில் வெளிச்சம் பிறந்தது, இப்போது புரிந்தது எதற்காக அந்த கும்மிருட்டென்று. மிரளவைக்கின்ற தோட்டா தரணியின் கலை அமைப்பு, ஒரு மாமன்னர் தேசத்தையே நம் கண்முன் மீட்டு நிறுத்தியது. மேளதாளங்கள் முழங்க மேடையில் கூடிய கலைஞர்கள் ஒய்யாரமாக நடனமாட சைவமா? வைஷ்ணவமா? சிவனா? விஷ்ணுவா? என்ற உரையாடல் தோன்றிட, இதை வேடிக்கை பார்க்கும் மனிதரோ இரண்டும் சமம்தானய்யா நீங்கள் தான் வேறுபடுத்தி பார்க்கின்றீர்கள் 'அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவர் வாயில மண்ணு' எனக்கூறி வியந்து நிற்கும் மக்களிடம் தன்னை வல்லரையன் வந்தியத்தேவன் என்று அறிமுகம் செய்கிறார். சபாஷ்! என்று அரங்கமே அதிர்ந்தது (வந்தியத்தேவரின் ரசிகப் பேரலை). அந்த நிமிடம் முதல் வந்தியத்தேவனுடன் இணைந்து சோழபுரிக்குள் எட்டுவைக்கத் தொடங்கினேன்.
நம்பி, வந்தியத்தேவன், நந்தினி, சுந்தர சோழர், ஊமைப் பெண், குந்தவை நாச்சியார், மதுராந்தகன், ரவிதாசன், வானதி, பூங்குழலி, பார்த்திபேந்திர பல்லவன், அனிருத்தர், ஆதித்ய கரிகாலன், அருள் மொழிவர்மன் இப்படி பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடித்த மையக் கதாபாத்திரங்கள் அக்கதாபாத்திரங்களாகவே மனதில் மையம் கொண்டனர்.
ஏன் இக்கதை வரலாற்று பெட்டகமாக திகழ்கிறது? சோழப்பெருந்தகைகளுக்கு எப்பேர்பட்ட மணிமகுடத்தை இப்புத்தகம் அளித்துள்ளது என்பதை நாடகம் பார்க்கையில் உணர முடிந்தது. புத்தகம் படிக்காதவருக்கும் கதையை புரியச் செய்ய வேண்டும் எனும் பொருட்டு நல்லான், நல்லாள் என்ற கதாபாத்திரங்கள் மூலம் ரத்தின சுருக்கமாக நிகழ்வுகளை உரைத்தவிதம் பாமரனையும் பயணிக்கச் செய்தது.
இதை மேடை நாடகமாக்க குழுவினர் மேற்கொண்ட சிரத்தைகள் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தன. ஒரு புறம் அரண்மனை, மறுபுறம் ஒரு வீதி, கடல், காடு, மலை, அந்தப்புரம், அரசரின் ஓய்விடம் என்ற பல்வேறு ஜாலங்களில் சுழலும் மேடை வியப்பூட்டும் அனுபவங்களைத் தந்தன. நடிகர்கள் நடிப்பில் தேர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல், வாள் வித்தைகளிலும், மல்யுத்தத்திலும், ஆடல் கலையிலும் தேர்ச்சிபெற்றவர்களாக அமைந்தது இந்த சரித்திரக் கதைக்கு உயிரூட்டியது.
மதத்தில் தொடங்கி, நகை, வீரம், பகை, அரசியல், துரோகம், ஆசை, வேட்கை, நட்பு, உறவு, இச்சை, அழிவு, செறிவு இப்படிப் பலத்தரப்பட்ட உணர்ச்சிகள் மேடையில் பதிவிடப்பட்டது.
ஆணும் பெண்ணும் கூடுகையில் நிழல்கள் கூடுவதை பிரதிபலித்த ஒளியமைப்பு, கதையின் போக்கிற்கு நம்மை இழுத்துச் சென்ற முன்னணி இசை, கதாபாத்திரங்களின் உடை, நகையலங்காரம் இவையனைத்தும் ராஜகுல கதையின் பிரம்மாண்டத்தை உணர வைத்தன.
நந்தினி: வந்தியத்தேவரே எனக்கு முகஸ்துதி பிடிக்காது!
வந்தியத்தேவன்: முகஸ்துதி என்றால் என்ன?
நந்தினி: முகத்திற்கு முன்னால் ஒருவரை புகழ்ந்து துதி பாடுவது.
வந்தியத்தேவன்: அப்போது நீங்கள் வேண்டுமானால் திரும்பி கொள்ளுங்கள்... நான் உங்களை பின்புறம் புகழ்கிறேன்.
நந்தினி: பேச்சில் நீ கெட்டிக்காரன் ஆயிற்றே!
வந்தியத்தேவன்: பார்த்தீர்களா நீங்கள்தான் இப்போது முகஸ்துதி செய்கிறீர்கள்.
நந்தினி: வேண்டுமானால் நீங்கள் திரும்பி கொள்ளுங்கள்.
வந்தியத்தேவர்: நான் போரிடத்தும், பெண்ணிடத்தும் புறமுதுகு காட்டுவது இல்லை என்ற உறுதி பூண்டிருக்கிறேன். ஆகவே.. நீங்கள் முகஸ்துதி செய்யலாம்.
இப்படி நறுக்நறுக் வசனங்கள் கல்கியின் எழுத்து இன்னும் அறுபது ஆண்டு கடந்தாலும் இக்கதை இளமையுடன் தான் இருக்கும் என்பதை மெய்ப்பித்தன.
என்னுடன் நாடகம் பார்க்க வந்தவர்கள், அருகே அமர்ந்திருந்த முதியவர் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் சாராம்சாக இந்த நாடகம் அமைந்ததென்றும், புத்தகத்தின் மைய இடங்களை இந்நாடகம் முடிந்த வரை கவர்ந்துள்ளதெனக் கூறி சிலாகித்தார்கள்.
தன் உயிர் நீத்து, தனக்கு இழிப்பேர் வந்தாலும் பரவாயில்லை சோழ குல பெருமையை காக்க வேண்டும் என்பதற்கென சோழப் பெருந்தகைகள் சுமந்த அவமானத்தையும் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தின் இறுதிப் படலம் அற்புதமாக பதிவு செய்திருந்தது.
நாடகம் முடிந்து வருகையில் ஒருவர் "எனக்கு தமிழ் படிக்க தெரியாது... ஆனால் என் அம்மா எப்போதும் கூறுவார்... 'பொன்னியின் செல்வன் படிப்பதற்காகவாவது நீ தமிழ் கற்க வேண்டுமடா' என்று. இப்போது இதை கண்டிப்பாக கற்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார்.
மற்றொருவர் "எனது தாய்மொழி தமிழ் கிடையாது. ஆனால் எனக்கும் உங்களால் தமிழன் என்ற உணர்ச்சி வருகிறது நான் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும்" என்று கூறினார். தாய் மொழியாம் தமிழ் மொழி என்று மார்தட்டி கூறியும், இத்தனை நாட்கள் பொன்னியின் செல்வன் படிக்காமல் இருந்துவிட்டோமே என்ற வருத்தம் மனதில் ஆட்கொண்டது.
நிச்சயமாக பொன்னியின் செல்வன் கதையைப் படித்து, கற்பனை உலகத்தில் சோழ தேசத்தை அடைய வேண்டும் என்ற லட்சியம் மனதில் பதிந்துள்ளது. இருப்பினும் அக்கற்பனை தேசத்தில் வந்தியத்தேவனாக (ஸ்ரீகிருஷ்ண தயாள்), குந்தவை நாச்சியாராக (ப்ரீத்தி ஆத்ரேயா), ரவிதாசர் (குமாரவேல்), நந்தினியாக (மீரா), ஆதித்ய கரிகாலனாக (பசுபதி), முக்கியமாக பெரிய பழுவேட்டராயராக (மு.ராமசாமி) இந்நாடகத்தில் இடம் பெற்ற நடிகர்களின்றி வேறுயாரால் இடம்பெற முடியும் என்ற ஐயப்பாடு பிறந்துள்ளது.
தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்ற விதையை விதைத்திடும் இந்நாடகம், சமகாலத்து பொக்கிஷம். மிகுந்த சிரத்தைகள் எடுத்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய கலைஞர்களுக்கு சோழர் வம்சத்து பாணியில் மரியாதை செலுத்தி இந்நாடகத்தை திக்கெங்கும் அரங்கேறச் செய்ய வேண்டும். பார்த்தவர்கள் தமது சிரம் தாழ்த்தி குழுவினருக்கு செலுத்திய கரகோஷங்களே இதற்கு சாட்சி. இதை இத்தனை சிறப்பாக அரங்கேறச் செய்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் பிரவீனுக்கும் சிறப்புப் பாராட்டுகள்.
ஹரி, ஐ.டி. இளைஞர், தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT