Last Updated : 24 Jan, 2022 08:28 PM

3  

Published : 24 Jan 2022 08:28 PM
Last Updated : 24 Jan 2022 08:28 PM

'வளரும் பெண் குழந்தைகளின் மனசு என்பது எரியக் காத்திருக்கும் காடு போல' - பாரதி பாஸ்கர் சிறப்புப் பேட்டி | National Girl Child Day

"யாரோ ஒருவர் உங்களிடம் தப்பாக நடந்துகொண்டார் என்றால், அது உங்களுக்கு அவமானம் இல்லை; களங்கமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்களை வெளியில் கொண்டுவந்து தண்டனை வாங்கிக் கொடுங்கள்" என்று பெண் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் விவரிக்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

நாடு முழுவதும் இன்று (ஜன.24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வரும் வேளையில், அவருடான ஒரு நேர்காணல்...

பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சுதந்திரமாக இருக்கிறார்களா?

"என்னைப் பொறுத்த அளவில் பெண் முன்னேற்றம் என்பது வெறும் பிம்பம்தான். அவர்களுக்கான முழுச் சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்பது அவர்களிடம் கேட்டால் மட்டும்தான் தெரியும். பெரிதாக சிரித்து விடுவார்கள்."

ஆண் குழந்தையைப் போல் பெண் குழந்தைகள் பிறப்பினை பெற்றோர் கொண்டாடுகிறார்களா?

"அன்றைக்கு தெருவுக்கு தெரு இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று விளம்பர போஸ்டர்கள் ஒட்டியிப்பார்கள். அதைப் பார்க்காமல் யாரும் இருந்திருக்க முடியாது. ஆனால்
இன்றைக்கு அதைவிட தெருவுக்கு தெரு கருத்தரித்தல் மையம்தான் இருக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்றால் மர்மம்தான். நான் எல்லா கிளினிக்குகளையும் சொல்லவில்லை. இந்த கருத்தரித்தல் மையங்களின் மூலம் 10 சதவிகிதம் பிரசவங்கள் நடக்கிறது என்று ஓர் அதிர்ச்சி தரும் தகவல்.

குழந்தைகள் பிறப்பு விஷயத்தில் இந்த 10 சதவிகிதம் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் 10 சதவிகிதத்தில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமான கருத்தரித்தல் மட்டுமே நிகழ்கிறது என்பது இன்னும் அதிர்ச்சி. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவிகிதம் குறைக்கப்படுகிறதா என்பதை மிகத் தீவிரமாக ஆலோசனைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதுபோன்ற பிரச்சினைகளால் பிரசவிப்பதற்குகூட இயற்கை அளித்த வாய்ப்பை பெண்கள் இன்னும் சரிசமமாக பெறாத நிலையில், அவர்கள் எல்லா விதத்திலேயும் முன்னேறிவிட்டார்கள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால், ஒரு பெண் தன் கருத்தைக் கூறினால் அந்தக் கருத்து சார்ந்த எதிர்க் கருத்துகளைத்தான் முன்வைக்கவேண்டுமோ தவிர, அவள் பெண் என்கிற ரீதியில் அவளின் மீதான வன்ம தாக்குதல் நடத்தக்கூடாது. இதுபோதாதென்று ஆணாக இருக்கின்ற ஒருவரைத் திட்டுவதற்குகூட அவரின் தாயைத்தான் அசிங்கமாகப் பேசுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த தாய்க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதிலிருந்தே பெண்களுக்கான சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று மிக அதிகம் படித்தவர்கள் இருக்ககூடிய கேரள மாநிலத்தில் கூட அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. பாலியல் சீண்டல்கள் முதல் வரதட்சணை கொடுமை வரை அரங்கேறுகிறது. இந்த மாநிலமே இப்படி என்றால் மற்ற மாநிலங்களை என்னச் சொல்லிவிட முடியும்.

பொதுவாக பெண்கள் சார்ந்த வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். உடலில் ஒரு இடத்தில் மட்டும் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றால் அது எப்படி சமச்சீராகும். சமச்சீரான வளர்ச்சியில் உடலும் மூளையும் இருந்தால் மட்டும்தான் ஒரு குழந்தையை நார்மல் என்போம். கை மட்டும் வளர்ந்து கொண்டே போனால் கொண்டாட முடியுமா? பெண்களின் வளர்ச்சி என்பது நாடு முழுவதும் சமச்சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் பெருமைப்பட முடியும். பெண்களின் வளர்ச்சி பெரும்பாலான இடங்களில் கவலைத் தருவதாகத்தான் இருக்கிறது."

சமூக வலைதளங்களில் நீங்கள் குறிப்பிடுவதுபோல் பெண்கள் சந்திக்கும் பின்னடைவுகளை எப்படி சரிசெய்வது?

"பெண்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்குகின்ற விஷயங்களைக் கண்டுபிடித்து, அதை இன்னும் பரவ விடாமல் தடுக்க நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று உலகம் முழுக்க சோஷியல் மீடியாக்களைப் பார்த்து மக்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை வளர்க்கிற விமர்சனங்கள் போன்றவற்றை எவ்வளவு தூாரம் சீரியஸாக எதிர்கொள்ளப்போகிறோம். தெருவில் போகிற ஒரு பெண்ணிடம் வம்பு செய்வதற்கு என்ன தண்டனை கொடுப்போமோ, அதே தண்டனையைத்தான் சோஷியல் மீடியாவில் பெண்களிடம் அத்துமீறுபவர்களுக்கு உடனடியான கடுமையான தண்டனையினை வழங்க வேண்டும்."

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து...

"ஒரு பெண் குழந்தையைப் பெற்ற பெற்றோராகவும், ஒரு சமூக பொறுப்புள்ள நபர் என்கிற இரண்டு விதமாக என்னைக் கவலைக்கொள்ள வைக்கிறது. குலை நடுங்குதுன்னு சொல்லுவாங்கள்ல அப்படித்தான் எனக்கும் இருக்கிறது. நான் வந்து சின்னபிள்ளையாக இருக்கும்போது, திருவெல்லிக்கேணியில் ஒரு தொகுப்பு வீடு போன்ற அமைப்புலதான் குடியிருந்தோம். வீடுகள் எல்லாம் நிறைய இருக்கும். அதில் ஒரே ஒரு பாத்ரூம் மட்டும்தான் இருக்கும், அத்தனை வீடுகளுக்கும். அப்படியான சூழலில் திடீரென பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மா ஒருவர் தன் 5 வயது பெண் குழந்தையை பார்த்துக்கோங்க என்றபடி ரேஷன் கடைகளுக்கு எல்லாம் விட்டுச் சென்று வரக்கூடிய நம்பிக்கை நிகழ்வுகள் ஏராளம். அந்தக் குழந்தைகள் அதுபாட்டுக்கு விளையாடி கொண்டு இருக்கும். அந்தக்காலத்தில் எல்லாம் பெற்றோர்கள் பயமே இல்லாமல் இருந்தார்கள். இப்போது அப்படி நாம் நம் குழந்தைகளை பக்கத்து வீட்டில்கூட ஒப்படைத்து விட்டு பயமின்றி செல்லமுடியுமா என்பது சந்தேகம்தான்."

உங்கள் பார்வையில் மோசமான சமூக அவலம்...

"நான் மிகவும் மோசமான ஒன்றாக பார்ப்பது பெண் குழந்தைகளுக்கு பள்ளிகூடங்களில் நடக்கும் பாலியல் அவலங்களைத்தான். பொதுவாக நாம் சிறுவயதில் கேட்டு வளர்ந்த கதைகள் மிகவும் வித்தியாசமானது. மகாபாரதத்தில் அர்ஜூனன் என்கிற கேரக்டர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொண்டவராக இருந்தார். இப்படியான ஒரு நேரத்தில், தனக்கு ஏற்பட்ட ஒரு சூழலின் காரணமாக, திருநங்கை போன்ற வேடத்தில் மறைந்து வாழும்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார். உத்தரை என்கிற பெண்ணுக்கு அர்ஜூனன் ஆசிரியராக இருக்க வேண்டிய நிலை.

ஒரு கட்டத்தில் இது அர்ஜூனன் தான் என்று தெரிந்துவிடும். அதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை அவரிடம் சென்று நீங்கள் என் மகளைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்பார். அந்த நேரங்களில் அர்ஜூனனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதென்றால் அவ்வளவு சுவாரஸ்யம் பெண்களைப் பெற்ற தந்தைகளுக்கு. அதற்கு அர்ஜூனன் மறுத்து விடுகிறார். இந்த விஷயத்தில் அர்ஜூனன் அப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் ஏகப்பட்ட பெண்களை திருமணம் செய்தவர். அப்படியிருக்கையில் இதில் ஏன் அர்ஜூனன் அப்படி முடிவு எடுத்தார் என்பதற்கு கொடுத்த விளக்கமாக அந்தக் கதைச் சொல்வது என்னவென்றால், நான் ஆசிரியர். எனக்கு மாணவியாக இருக்கும் அந்தப் பெண்ணை எப்படி நான் மணக்க முடியும். அவர் என் மகள் போன்றவர் அல்லவா என்று கூறி மறுத்துவிடுகிறார். பிறகு, தன் மகனுக்கு அவளையே மணமுடித்து மருமகளாக்கி கொண்டார் என்பது கதையின் அம்சம். இந்தக் கதையை நான் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், எவ்வளவுதான் பெண்கள் விஷயத்தில் மோசமாக, பலவீனமாக இருக்கும் நபர்கள்கூட, ஆசிரியர் என்கிற தகுதிக்கு வருகிறபோது, இதுபோன்ற எண்ணங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்ட குரு, சிஷ்யர்களைத்தான் இந்த மண் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறது.

இப்போது ஆசிரியர்களிடத்தில் என்ன நடக்கிறது. ஏன் இவர்கள் மாணவிகளிடத்தில் போய் தங்கள் சபலத்தைக் காட்டுகிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு நடக்கும் விஷயத்தில் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் அதிக பொறுப்பு இருக்கிறது."

குழந்தைகள் இதனை எதிர்கொள்ள நீங்கள் சொல்லும் வழிமுறைகள்?

"குழந்தைகளுக்கு எல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். ஆசிரியரோ இல்லை, யாரோ ஒருவர் உங்களிடம் தப்பாக நடந்துகொண்டார் என்று வையுங்கள். இது உங்களுக்கு அவமானம் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையையே மாய்த்துக்கொள்கிற அளவுக்கு இது களங்கம் இல்லை. அதற்கு பிறகும் வாழமுடியும். தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்களை வெளியில் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுங்கள்.உயிரை மாய்த்துக் கொள்வது எதற்கும் எப்போதும் தீர்வு ஆகாது.

பொதுவாக உங்கள் பிரச்சினைகள் எதுவாயினும் உங்கள் அம்மா, அப்பா, பெண் ஆசிரியர்கள், சக மாணவி என்று யாரோ ஒருவரிடம் கட்டாயம் கூறித் தீர்வுக் கேளுங்கள். ஒரே ஒருவர்கூட இல்லையா, உங்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்க. எனவே, எப்போதும் மன உறுதியுடன் நில்லுங்கள். இந்த விஷயங்களில் நீங்கள் அவமானப்படுவதற்கு என்று எதுவும் இல்லை.

இன்னும் ஒண்ணு சொல்கிறேன். நம்ப முடியாத விஷயம். 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை. அதை சமாளிக்க வழி தெரியாமல் கணவர் மேற்கொண்ட தற்கொலை என்ற அடுத்தடுத்த துயர நிகழ்வுகளால் துவண்டு போய் விடாமல் தனது தொழில் சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்துள்ளார் காஃபி டே மாளவிகா ஹெக்டே என்னும் பெண். இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள் எல்லாருக்கும், மிகுந்த மன வலிமை, தைரியம், துணிச்சல் அளிக்கும் விஷயம் என்பது நிச்சயம்.

நடக்கவே நடக்காது என்பதையெல்லாம் ஒரு பெண்ணாணவள் செய்து காட்டுகிறாள். அப்படி இருக்கும் போது ஒரு 17-18 வயது குழந்தைக்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சினையைா, தனக்கு எவ்வளவு பெரிய கனவு இருக்கிறது, வாழ்வு இருக்கிறது என்கிற நம்பிக்கையை நாம கொடுக்க தவறிவிட்டதால் நாம்தான் இதில் குற்றவாளி. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குற்றவாளிகள்தான். அவர்களைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் குழந்தைகளுக்கு இந்த நம்பிக்கையை ஏன் நாம கொடுக்கவில்லை என்பதே என் கேள்வி.

தற்கொலை செய்துகொள்வது என்பது, ஒருவகையிலான கவன ஈர்ப்பு என்று நினைத்து செய்கிற வயது. ஒரு குழந்தை இதுபோன்று செய்த உடனே, வேறு ஒரு பள்ளியில் வேறு ஒரு குழந்தையும் இதுபோல் செய்யும். அப்பொழுது அவர்களைப் பற்றி எவ்வளவு நியூஸ் வருகிறது. எவ்வளவோ பேர் இதனைப் பற்றி பேசுகிறார்கள். அந்த ஆசிரியருக்கு தண்டனை கிடைக்கும்னு சொல்றாங்களே... அப்போ நானும் இப்படி செய்துகொள்கிறேன் என்று அது பரவக்கூடிய பயங்கரமான விஷயம். இது இப்படி பரவக்கூடாது. தற்கொலை இதற்கு தீர்வு இல்லை.

உனக்கு ஒரு பிரச்சினை என்றால் எதிர்த்துப் போராடு. அந்த தைரியம் இல்லையா அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுங்கள். இன்று குழந்தைகளிடம் மலாலா வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்துங்கள். எப்படிபட்ட ஒரு சூழலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் என்று தெரியவையுங்கள். எல்லா ஆசிரியர்களையும் ஒண்ணுபோல நினைக்க வேண்டாம். இன்று நல்லாசிரியர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

30 வருடங்களுக்கு முன் இருந்த பெண்கள் இன்று இல்லை. இன்று அதைவிட தைரியமாகவும் வெளி உலகம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறோம். இப்படி இருக்கும் இந்த நேரத்தில் இப்படி நடப்பது என்பது மனதை ரணமாக்கி விடுகிறது."

பெற்றோர்களுக்கு...

"தமிழ்நாட்டில் குறிப்பா 16 முதல் 19 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மிகுந்த உள்ளக் கொதிப்பில் இருக்ககூடியவர்கள். பொதுவாக நம் வீட்டிலேயே நாம் பார்த்திருப்போம். சிரிக்கிறதுன்னா அப்படி சிரிப்பார்கள். அழுறதுன்னா அப்படி அழுவார்கள். ஒரு நிமிஷத்தில் மனம் உடைந்து போய்விடுவாங்க. இப்படியான வயதில் இருக்கக்கூடிய நம் பெண் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினைன்னா, இவங்ககிட்ட போய் சொல்லிவிட்டால் அவங்க பார்த்துப்பாங்க என்று நம்பிக்கையை மட்டும் கொடுங்கள்.

பொதுவாக எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் இன்று என்ன நடந்தது அன்றை நாள் பற்றி ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி பேசுங்கள். குழந்தைகள் தங்களிடம் ஒரு விஷயம் சொல்லும்போது காது கொடுத்து கேளுங்கள்.

ஒரு பையன் தன்னிடம் லவ் லெட்டர் கொடுத்திருக்கிறான் என்று உங்களிடம் சொல்லும்போது, ஏன் அவ்வளவு பெண்கள் இருக்கும்போது உன்னிடம்தான் வந்து கொடுக்கிறான். நீ போய் சிரிச்சிகிட்டு நின்றாயா என்பது போன்ற கேள்விகளை எப்போதும் கேட்காதீர்கள். இதுபோன்ற பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது பெரும் வேதனை. இன்னும் சில வீடுகளில் கிராமங்களில் ஏன் நகரங்களிலும் `இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். பேசாம படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வை` என்றபடி பக்கவாத்தியம் ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு பெரும்பாலும் குழந்தைகள் பயந்துவிடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் நீங்கள் நடக்கும் அணுகுமுறையை வைத்துதான் இதற்கு அடுத்தாற்போல் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் சொல்லும் தைரியம் நம் பெண்களுக்கு வரும். இல்லையென்றால் தன் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மறைத்துக்கொண்டும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். முடிந்தால் காது கொடுத்து கேளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். ஆனால் ஒருபோதும் காயப்படுத்தி விடாதீர்கள்.

பொதுவாக இன்று வீட்டில் இருக்கும் 18 வயதில் இருப்பவர்களிடம் இருக்கும் மொபைல்போனில் அவ்வளவு குப்பைகளும் வந்து விடுகிறது. இதில் சோஷியல் மீடியாக்களுக்கும் மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருக்கிறது."

`வளரும் பெண் குழந்தைகளின் மனசு என்பது எரியக் காத்திருக்கும் காடு போல` அது எந்த நிமிஷத்தில் பற்றி எரியும்... எந்த நிமிஷத்தில் சந்தோஷப்படுவா, எந்த நேரத்தில் அழுவாள் என்பது அவளுக்கே தெரியாது. அவளுக்கு வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆறுதலான சில வார்த்தைகள் போதும்.

உன்னால முடியும் டா, எந்திரிச்சி நில்லுடா, நாளைக்கு நீ படிக்கிற இந்த ஸ்கூலுக்கே நீதான்டா சீப் கெஸ்டா வரப் போறன்னு சொன்னா போதும். அவள் தன்னால போய் எந்திரித்து பாடத்தை படிக்க ஆரம்பித்து விடுவாள். இப்படி சொல்ல ஒருவர்கூட இல்லை என்பதுதான் மகள்களைப் பெற்ற தாயாக என்னை மிகவும் பாதிக்கிறது."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x