Published : 14 Apr 2016 05:21 PM
Last Updated : 14 Apr 2016 05:21 PM
M.G.R.புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்ஷாக்காரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம், அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை.
சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறி விடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களி லும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.
ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்.
கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண் டிருந்தது. ரிக் ஷாக்காரர் ஒருவர் மழை யில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.
தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக் ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக் ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக் ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.
மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக் ஷாக்காரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதித்த நேரம். உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக் ஷாக் காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின் கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.
தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுகள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000-க்கும் மேற்பட்ட ரிக் ஷாக் காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை ரிக் ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக் ஷாக் களில் எம்.ஜி.ஆரின் படங்களையும் போஸ்டர்களையும் ஒட்டினர்.
1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்துக்கு அடுத்த படியாக பெரிய வெற்றி பெற்ற படம் ‘நம்நாடு’. இப்படத்தில் தனது அண் ணனாக நடிக்கும் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்கா ராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண் டிப்பார். இதனால், கோபமடைந்து
எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளி யேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளி யேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.
நடிகைகள் குட்டி பத்மினி யும் தேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்து விடும். அவர்களிடம், ‘‘எப்படி இங்கே வந்தீர் கள்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.
‘‘ரிக் ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார்’’ என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன் னாலே ரிக் ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.
இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக் ஷாக்காரர்களுக்கு இருக் கும் அளவற்ற அன்பையும் மரியாதை யையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் தேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....
‘‘காசு கூட வாங்கலே சித்தப்பா’’
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப் படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். மழை யால் வெள்ளம் ஏற்பட்டபோது முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார். |
தொடரும்..
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT