Published : 14 Jan 2022 05:17 AM
Last Updated : 14 Jan 2022 05:17 AM

தினம் தினம் யோகா 44: மகராசனம்

எஸ்.ரவிகுமார்

தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும் பறந்துபோய், உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும். ‘மகர’ என்றால் முதலையை குறிக்கும் சொல். நம் உடல் இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், முதலையின் உருவம்போல இருப்பதால் இப்பெயர்.

உடல் சோர்வைப் போக்கும் மகராசனத்தை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்.

விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை ஒன்றன் மீது ஒன்றாக மடித்து வைத்துக் கொள்ளவும். கைகள் மீது தாடை பதிந்திருக்கட்டும். தாடைக்கு பதிலாக, கன்னத்தை கைகள் மீது பதிவதுபோல வைத்துக் கொண்டால், இன்னும் ரிலாக்ஸாக இருக்கும்.

கால்களை அகலமாக வைத்துக் கொள்ளுங்கள். குதிகால்கள் உள்பக்கமாகவும், கால் விரல்கள் வெளிப்பக்கம் நோக்கியும் இருக்கட்டும். முழு உடம்பும் நன்கு ரிலாக்ஸாக இருக்கட்டும்.

நன்கு நிதானமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். 2-5 நிமிடங்கள் வரை இதே நிலையில் இருக்கவும். தேவைப்பட்டால், கூடுதல் நேரமும் இருக்கலாம்.

மகராசனத்தின்போது இடும்பு, முதுகு, தோள் பகுதிக்கு முழு ஓய்வு கிடைப்பதால், அப்பகுதிகள் ரிலாக்ஸ் ஆகின்றன. ஆஸ்துமா உட்பட நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம் ஆகும்.

நாளை – ‘குறும்’படம் எடுக்கலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x