Last Updated : 29 Jun, 2014 04:30 PM

 

Published : 29 Jun 2014 04:30 PM
Last Updated : 29 Jun 2014 04:30 PM

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

"திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…" இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

நோக்கம்:

சுயமாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள இஸ்ரோ, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கவுள்ளது.

தொடர் வெற்றியில் PSLV:

இந்தியாவைப் பொறுத்தளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இரண்டு வகையான ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறோம். அவை GSLV, PSLV இவற்றில் PSLV யைப் பொறுத்தளவில் இது 27 வது முயற்சி… இதில் ஏற்கெனவே 26 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, சமீபகாலமாக PSLV யின் நவீன ரகமான PSLV "XL" வகை ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக PSLV C-11 ஐ பயன்படுத்தி சந்திரனுக்கு சந்திராயனையும், PSLV C-25 ஐ பயன்படுத்தி செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானையும், செலுத்திய இஸ்ரோ, மற்ற தகவல் தொடர்பு பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது.

இந்த தொடர் வெற்றிகளின் அடுத்த கட்டமாக தற்போது விண்ணில் பாயவுள்ள PSLV C-23 ஏவூர்தி 230 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது. 4 அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவூர்தியில் திட மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ஏவூர்தியில் வைத்து அனுப்பப்படும் செயற்கைக்கோளின் எடை குறைவு என்பதால், ஏவூர்தியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் திட எரிபொருளில் இயங்கும் உந்துவிகள் இணைக்கப்படவில்லை. இவ்வாறு செலுத்தப்படும் 10 வது ஏவூர்தி இதுவாகும்.

செயற்கைக்கோள்களும் அதன் பயன்பாடுகளும்:

1. SPOT-7 - பிரான்ஸ்: பூமியைப் பற்றிய ஆய்விற்காக.

2. AISAT - ஜெர்மனி: கப்பல் போக்குவரத்து, வழித்தடம் குறித்த பயன்பாட்டிற்காக செலுத்தப்படுகிறது. நானோ செயற்கைக்கோள்களில் முதல் DLR செயற்கைக்கோள்.

3. NLS7.1 (Can-X4) - கனடா: துல்லியமான அளவீடுகளுக்காக பயன்படவுள்ளது.

4. NLS7.2 (Can-X5) - கனடா: துல்லியமான அளவீடுகளுக்காக பயன்படவுள்ளது.

5.VELOX-1 - சிங்கப்பூர்: கட்டிட வரை படம் தயாரிக்க பயன்படும்.

எவ்வாறு ஏவப்படுகிறது ?

5 வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தப் பயன்படும் ஏவூர்தியான PSLV C-23 ஏற்கனவே ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் கட்டமைக்கப்பட்டு, செயற்கைக் கோளும் பொருத்தப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த ஏவுதளத்தைப் பொறுத்தளவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய 5 மாடி கட்டிடம் உயரம் கொண்ட இந்த ஏவுதளம், நகரும் வகையிலும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படா வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் நேரத்தில் ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருட்களை நிரப்புதல், ராக்கெட் செல்லும் பாதையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளும், ராக்கெட்டை ஏவுவதற்கான ஆயத்தப்பணிகள் என அனைத்துப் பணிகளும் ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதன்மை கட்டுப்பாட்டு அறையில்தான் நடைபெறும்.

கவுண்டவுன் நிறைவடைந்ததும், விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டின் முதல் தளம் 110.6 வது நொடியிலும், இரண்டாவது தளம், 262.2 வது வது நொடியிலும், மூன்றாவது தளம், 521.2 வது நொடியிலும், பிரிந்துவிடும், இறுதியாக 4 வது தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட 1073.4 வது நொடியில் பிரான்ஸின் SPOT-7 செயற்கைக் கோள் தனியாக பிரிந்து பூமியை சுற்ற ஆரம்பித்துவிடும், அதேபோல், ஜெர்மனியின் AISAT செயற்கைக்கோள் 1113.7 நொடியிலும், கனடாவின் NLS7.1 செயற்கைக்கோள் 1143.7 நொடியிலும், NLS7.1 1173.7 நொடியிலும் , சிங்கப்பூரின் VELOX-1 செயற்கைக்கோள் 1198.7 வது நொடியிலும் பிரிந்து அதனதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இதற்கான கட்டளைகள் அனைத்தும், ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதன்மை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பிறப்பிக்கப்படும், இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

இதனால் என்ன பயன் ?

1. ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோளை ஏவுவதின் மூலம் ரூ.5 கோடி முதல் ரூ.100 கோடி வரை இஸ்ரோவிற்கு வருமானம் கிடைக்கும், இந்த வருமானத்தின் மூலம், இஸ்ரோ தனது மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசை நம்பியிருக்கத் தேவையில்லை.

2. மற்ற நாடுகளின் செயற்கைக்கோளை நாம் விண்ணில் நிலை நிறுத்தித்தருவதின் மூலம், உலக நாடுகளோடு நல்லுறவு மேம்பட அடித்தளமாக இருக்கும்.

3. ஏற்கெனவே 35 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ள இஸ்ரோ, மேலும் 5 செயற்கைக்கோள்களை PSLV C-23 மூலம் கொண்டு செல்வதின் மூலம் அதன் எண்ணிக்கை 40 ஆக உயர்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் இஸ்ரோவுடன் வர்த்தக ரீதியான உறவு வைத்துக்கொள்ள விரும்பும்.

இதுபோன்ற திட்டங்கள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு, அறிவியல் மீதான ஆர்வத்தை இன்றைய மாணவர்களுக்கு ஏற்படுத்த அடித்தளமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x