Published : 31 Dec 2021 10:02 AM
Last Updated : 31 Dec 2021 10:02 AM
ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மனாக பெரியார் இருந்த காலத்தில் சேலம் முனிசிபாலிட்டி சேர்மனாக ராஜாஜி இருந்தார்.
வெற்றிகரமான வழக்கறிஞராக வலம் வந்த ராஜாஜி ஒரு வழக்கு நடத்த காரில் கோவை பயணமானார். ஈரோடு நகரைத் தாண்டும்போது அத்தனை தெருக்களும் பளிச் என்று தூய்மையாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.
பெரியாருக்கு போன் செய்து, ‘நாயக்கரே! நான் சேர்மனாக இருக்கிற சேலம் நகரத்தில் துர்நாற்றம் வீசுகிறது. உங்க ஊர் மட்டும் இவ்வளவு சுத்தமாக இருக்கே. உங்க சானிடரி இன்ஸ்பெக்டரை எங்க ஊருக்கு கொஞ்சநாள் அனுப்ப முடியுமா?’ என்று கேட்டார்.
பெரியாரும் அனுப்பி வைக்க சேலம் நகரமும் தூய்மையின் அடையாளமாகத்துவங்கியது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்திஜி இந்தியா திரும்பிய காலகட்டம். தன் நண்பர் பெரியாரை காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஆசைப்பட்டார் ராஜாஜி. பெரியார் அதில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் ராஜாஜிதான் வற்புறுத்தி அவரை அழைத்துப் போய் காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். காந்திஜியின் எளிமையும், நேர்மையும் நாட்டுப்பற்றும் பெரியாரைப் பெரிதும் கவர தமிழ்நாட்டில் காந்தியின் முதல் பக்தராக மாறிய பெரியார், கதர் துணியை தோளில் சுமந்து தெருத்தெருவாக விற்க ஆரம்பித்தார்.
கள்ளுக்கடை மறியல் செய்யும் திட்டத்தை காந்திஜி ஈரோடு வந்து பெரியார் வீட்டில் விவாதித்தார். பெண்கள் முன்னின்று நடத்தினால் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்தபோது பெரியாரின் துணைவி நாகம்மையும் சகோதரி கண்ணம்மையும் பொறுப்பேற்று மறியலுக்கு தலைமை தாங்கி நடத்தி வெள்ளையரை நடுங்க வைத்தனர்.
கள் இறக்க தென்னை மரங்கள் பயன்படுகின்றதே என்று சேலம் எல்லையில் 500 தென்னை மரங்களை பெரியார் வெட்டி எறிந்து விட்டார்.
வர்ணாசிரம தர்மம் என்பது வேடிக்கையானது.
உயர்சாதியில் பிறந்த ஒருவன் அயோக்கியனாக இருந்தாலும் -பிறப்பால் அவன் உயர்ந்தவனாகவே கருதப்படுவான். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் புத்தர்போல இருந்தாலும் பிறப்பால் அவன் தாழ்ந்தவனே.
இந்த கொடூரமான பாகுபாட்டை துவக்கத்தில் காந்தி துரதிருஷ்டவசமாக ஆதரிப்பது தெரிந்ததும் கோபித்துக் கொண்டு காந்தியிடமிருந்து வெளியேறிய பெரியார் பகுத்தறிவு இயக்கம் துவங்கி, தீண்டாமை, சாதிவேறுபாடு, பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
தள்ளாத வயதில் தனக்கு உதவி செய்யவும், தன் சொத்துக்களுக்கு சட்டரீதியான வாரிசு வேண்டும் என்றும் மணியம்மையை மணக்க முடிவு செய்தார் பெரியார்.
தன் நண்பர் ராஜாஜியைத் தனியே சந்தித்து ஆலோசனை கேட்டார்.
ஒரு கட்டத்தில் ராஜாஜி மரணச்செய்தி வந்ததும், கலங்கி விட்டார். காந்தியின் மனசாட்சியாக வாழ்ந்தவர். எளிமையானவர். யாருக்காகவும் தன் முடிவில் சமரசம் செய்து கொள்ளாதவர், வெளியே போய் ஒரு டம்ளர் தண்ணீர் கூட அருந்த மாட்டார். உடம்பைப் பேணி காத்தவர். -போய் விட்டார்.
‘நான் இந்த 94 வயதிலும் ஆடு, மாடு கோழி என்று அசைவம் சாப்பிட்டு பக்கட்டில் சிறுநீர் கழித்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறேன்!’ என்று வருந்தினார்.
சுடுகாட்டில், ராஜாஜி சடலத்தின் மீது வறட்டியை அடுக்கி சிதைக்கு தீ மூட்டியபோது கேவிக் கேவி அழுதார். ‘ஆன்றோர் நட்பு வளர்பிறை போல் வளரும்; தீயோர் நட்பு தேய் பிறைபோல் தேயும்!’ என்பதை வள்ளுவர்
‘நிறைநீர நீரவர் கேண்மை -பிறைமதிப்பின்
நீர பேதையார் நட்பு!’ என்று அழகாகச் சொல்கிறார்.
--
குறள் கதை 94: தானம்
நம்நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு கலைவாணரின் தனிச்சிறப்பு, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைப்பது என்பது- நன்றாக நினைவில் இருக்கும்.
‘நாட்டுக்குச் சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தானைய்யா!’
‘மனுஷனை மனுஷன் ஏச்சுப் பொழைச்சது அந்தக்காலம்- மடமை நீங்கி நம்முடைமை கோருவது இந்தக் காலம்!’
‘ஒண்ணு முதல் 20 வரைக்கும் கொண்டாட்டம்- (தேதி) 21 முதல் 30 வரைக்கும் திண்டாட்டம்!’
‘சிரிப்பு. சிரிப்பு.. இதை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு. சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு’- இந்தப் பாடல் வரிகள் 80 வயது தாண்டியவர்களால் மறக்க முடியாது.
கலைவாணர் நாகர்கோயிலில் பிறந்தவர். 12 வயதுடன் பள்ளிப்படிப்பு முடிந்து விட்டது. பலசரக்கு கடையில் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் வேலை கொஞ்ச காலம். நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாக சில நாட்கள். பின்னர் டி.கே. சண்முகம் நாடகக்குழுவில் 14 ஆண்டுகள். திரையுலகில் 21 ஆண்டுகள். 49 வயதில் அவசரமாகப் புறப்பட்டு மேலே போய் விட்டார்.
ஏற்றம் இமயமலை. இறக்கம் பாதாளம். இரண்டையும் பார்த்தவர். எம்ஜிஆர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ -படத்தில் 1936-ல் கலைவாணரும் அறிமுகம். ஆனாலும் முதல் படத்திலேயே நகைச்சுவைக் காட்சிகளை அவரே அமைத்துக் கொள்ள டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் அனுமதியளித்தார். சென்னை -சேலம்- கோவை ஸ்டுடியோக்களுக்கு காரில் பறந்து கொண்டே இருப்பார்.
சென்னையில் ஜெமினி -நியூ டோன் நெப்டியூன் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ், கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டுடியோக்கள்.
8000 அடி படத்தைக் கலைவாணருக்கு போட்டுக் காட்டுவார்கள். அதைப் பார்த்து விட்டு இவரது குழுவில் காளி என் ரத்தினம் -புளிமூட்டை ராமசாமி-
சி.எஸ். பாண்டியன் -மனைவி டி.ஏ.மதுரம் இருப்பார்கள். இவர்களை மையமாக வைத்து 3000 அடி அல்லது 4000 அடி நீள நகைச்சுவைப் பகுதியை இவரே டைரக்ட் செய்து நடித்துக் கொடுத்து விடுவார்.
1938-ல் தட்சயக்ஞம் படத்தில் நடிக்க கல்கத்தாவுக்குச் சென்றபோது வளரும் நடிகரான எம்ஜிஆரின் அறுந்து போன செருப்பை கடையில் கொடுத்து, ரிப்பேர் செய்து திரும்பவும் பயன்படுத்தச் சொன்னவர் கலைவாணர்.
ஊரில் அப்பா பார்த்து திருமணம் செய்து வைத்த மனைவி இருந்த போதிலும் டி.ஏ.மதுரத்தை காதல் திருமணம் செய்து கொண்டார்.
1941-ல் மதுரம் பிறந்த ஊர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணபவனம் என்ற வீடு கட்டினார். தான் பிறந்த நாகர்கோயிலில் மதுரபவனம் என்ற மாளிகை கட்டி திறப்பு விழாவுக்கு தியாகராஜபாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரக் கச்சேரி என்று மிக உயர்ந்த கலைஞர்களை அழைத்து வந்து மக்களை மகிழ்வித்தார்.
1944-ல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் கோர்ட்டில் வாதாடி விடுதலை பெற இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று விட்டார்.
1947- ஏப்ரல் 25-ந்தேதி விடுதலையடைந்தார்.
வழக்குக்கு செலவு செய்ய ‘பைத்தியக்காரன்’- படத்தை தயாரித்தார்கள். அதில் டி.ஏ.மதுரம் ஜோடியாக எம்ஜிஆர்
நடித்தார். விடுதலையாகி வந்த பிறகு -மதுரத்திற்கு இரட்டை வேடமாக்கி, அந்த இன்னொரு வேடத்திற்கு ஜோடியாக கலைவாணர் நடித்தார்.
1947-ல் அன்றைய பிரபல நாடகாசிரியர் பம்மல் சம்பந்த முதலியார், இவருக்கு ‘கலைவாணர்’ என்ற பட்டத்தை சூட்டினார். 1949-ல் நாகர்கோயிலில் சுதந்திர நினைவுத்தூண் 60 அடி உயரத்தில் உருவாக்கினார். கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன், காந்தியின் பொன்மொழிகள் அதில் செதுக்கப்பட்டு அன்றைய தமிழக முதல்வர் குமாரசாமிராஜாவைக் கொண்டு திறப்பு விழா செய்தார்.
1951-ல் டைரக்டர் கே.சுப்ரமணியம் தலைமையில் கலைஞர்களுடன் ரஷ்யா கலாச்சார சுற்றுலா பயணம் சென்று வந்தார். கலைவாணர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி சேலம் -தாரமங்கலத்தில் அண்ணா படத்திறப்பு விழா.
அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி சென்னை வாணி மகால் எதிரில் கலைவாணர் சிலை திறப்பு விழா 1969-ஜனவரி 14-ந்தேதி.
கோவையில் அசோகா பிலிம்ஸ் விநியோகஸ்தர் அலுவலகம் வைத்திருந்தார் கலைவாணர். வருமானவரி அதிகாரி அனுமந்தராவ் அந்த அலுவலகத்தை ரெய்டு செய்தார். ‘என்னய்யா மொட்டையா தானம் தானம்-ன்னு எழுதி ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம்னு எழுதியிருக்கீங்க’ன்னு கேட்டார் ஆபீசர்.
‘எங்கய்யா தானம் குடுத்தவங்க பேரை எழுத மாட்டாருங்க. நீங்க வேணும்னா, சென்ட்ரல் ஸ்டுடியோவுல ஐயா ஷூட்டிங்கில் இருக்காரு. ‘டெஸ்ட்’ பண்ணிப் பாருங்க!’ என்றார் சிப்பந்தி.
அனுமந்தராவ் -கதர் சட்டை வேட்டி கட்டி, நெற்றியில் விபூதி பூசி மஞ்சப்பை கையில் எடுத்துக் கொண்டு கலைவாணரைப் பார்த்தார். ‘அடுத்த மாதம் மகள் கல்யாணம். எங்கும் காசு புரட்ட முடியலே. நீங்க வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டு வந்தேன்!’ என்றார் ஆபீசர்.
‘அட, பைத்தியக்காரா! கோயமுத்தூர்ல எங்க ஆபீசில ரெய்டு நடந்திட்டிருக்கு. இப்ப வந்திருக்கியே. அவங்க போகட்டும். அப்புறமா தர்றேன்!’ என்றாராம்.
ரெய்டு பண்ண வந்த ஆபீசருக்கே தானம் செய்ய நினைத்தவர். காலச்சுழற்சியில் இருந்த சொத்துபத்தெல்லாம் இழந்து, உடல்நலம் கெட்டு மருத்துவமனையில் படுத்திருந்தார். தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு பக்கத்து ஓட்டலில் சாப்பாட்டு டோக்கன் வாங்கி வைத்து சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாராம்.
கடைசி நாள். நாடக நடிகன் ஒருவன் வறுமையின் உச்சத்தில் வந்து கை நீட்டியிருக்கிறான். வெள்ளி கூஜா ஒன்று மருத்துவமனையில் கடைசியாக இருந்தது. அதைக் கொடுத்து சமாளிக்கச் சொல்லி அனுப்பினார்.
இருந்ததையெல்லாம் கொடுத்தாச்சு. நாளைக்கு யாராவது வந்தா குடுக்க ஒண்ணுமில்லையேன்னு நெனைச்சாரு. அந்த ராத்திரியிலயே உயிரை விட்டு விட்டார்.
சாவது போன்ற கொடுமை எதுவுமில்லை. அதை விட இல்லை என்று கேட்போருக்கு இல்லை என்று சொல்லும் நிலைமை வருவது அதை விடக் கொடுமை என்கிறார் வள்ளுவர்:
‘சாதலின் இன்னாதது இல்லை இனிது- அதூஉம்
ஈதல் இயையாக் கடை’
---
கதை பேசுவோம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT