Published : 30 Dec 2021 06:04 AM
Last Updated : 30 Dec 2021 06:04 AM
விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் அமரவும். இப்போது, முட்டி போட்டு நிற்கவும். இதுதான், அர்த்த உஷ்ட்ராசனத்துக்கான தயார் நிலை.
நன்கு ஒரு முறை மூச்சை இழுத்து விடவும். அடுத்து, விரல்கள் நன்கு பதியுமாறு இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொள்ளவும். ஐந்து விரல்களும் சேர்ந்து இருக்கட்டும்.
மெல்ல, இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடியே நகர்த்தி, பின்னால் கொண்டு போகவும். கை மணிக்கட்டு பகுதிகள் நடு முதுகிலும், விரல் நுனி பகுதிகள் இடுப்பின் பக்கவாட்டிலும் பதிந்து இருக்கிறதா, நீங்கள் வைத்திருப்பது சரிதான். ஐந்து விரல்களும் சேர்ந்தே இருக்கட்டும். அதேபோல, கை முட்டிகளும் இயன்ற வரை பின்பக்கத்தில் நெருக்கமாக இருக்கட்டும்.
இப்போது, உள்ளங்கைகளால் முதுகின் பின்பகுதிக்கு மெல்ல அழுத்தம் கொடுங்கள். அப்படியே, முதுகை மெல்ல வளைத்து அண்ணாந்து மேல் வானத்தை பாருங்கள். கழுத்து பகுதி ரிலாக்ஸாக இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். 1-10 எண்ணுங்கள். மூச்சை இழுத்துக்கொண்டே சம நிலைக்கு வாருங்கள். சாதாரணமாக உட்கார்ந்து ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
‘உஷ்ட்ர’ என்றால் ஒட்டகம். முழு ஆசனத்தில் இருக்கும்போது, ஒட்டக வடிவில் இருப்பதால் இப்பெயர். ‘அர்த்த உஷ்ட்ராசனம்’ செய்வதால் மார்பு விரிவடைந்து, சுவாசம் நன்கு நடைபெறுகிறது. வயிறு பகுதி இழுக்கப்படுவதால், தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றன. முதுகுவலி குறைகிறது. மாதவிடாய் கோளாறுகள் சரியாகின்றன. அதிக ரத்த அழுத்தம், தைராய்டு வீக்கம், மைக்ரைன் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
நாளை – பின்னாடி பாருங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT