Published : 29 Mar 2016 10:43 AM
Last Updated : 29 Mar 2016 10:43 AM

பவானி பிரசாத் மிஸ்ரா 10

இந்தி கவிஞர், எழுத்தாளர்

இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பவானி பிரசாத் மிஸ்ரா (Bhawani Prasad Mishra) பிறந்த தினம் இன்று (மார்ச் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங் காபாத் மாவட்டத்தில் டிகரியா என்ற கிராமத்தில் (1913) பிறந்தார். தந்தையின் பணி காரணமாக சோஹாக்பூர், ஹோஷங்காபாத், நரசிங்கபூர், ஜபல்பூர் என மாறி மாறி கல்வி கற்றார்.

# பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கினார். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் பயின்று பட்டம் பெற்றார். பண்டிட் ஈஸ்வரி பிரசாத் வர்மாவின் ‘ஹிந்துபஞ்ச்’, பிரபல கவிஞர் மாகன்லால் சதுர்வேதியின் ‘கர்மவீர்’ மற்றும் ‘ஹன்ஸ்’, கவிஞர் அக்ஞேயாவின் ‘தூஸ்ரே சப்தக்’ ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன.

# காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டார். காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார். ஒரு காந்தியவாதியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். 33 வயது முதல் கதராடை அணியத் தொடங்கினார்.

# வார்தாவில் மஹிளாஸ்ரம் என்ற கல்வி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். சென்னையில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் வசன இயக்குநராகப் பணியாற்றினார். சென்னை, மும்பை வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றினார். டெல்லி வானொலியிலும் பணியாற்றினார்.

# இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘கீத் ஃபரோஷ்’ அதன் புதிய பாணி, சரளமான நடையால் மிகவும் பிரபலமடைந்தது. ‘சகித் ஹை துக்’, ‘காந்தி பஞ்ச்ஷதி’, ‘வ்யக்திகத்’, ‘மானசரோவர்’, ‘ஷிலாலேக்’, ‘நீலி ரேகா தக்’ உட்பட மொத்தம் 22 நூல்கள் வெளிவந்துள்ளன. நினைவுச் சித்திரம், கட்டுரைகள், குழந்தை இலக்கியமும் படைத்துள்ளார். ‘சம்பூர்ண காந்தி’, ‘வாங்மய’, ‘கல்பனா’ உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

# இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார். இலக்கிய வட்டாரத்தில் ‘பவானி பாய்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரது காவிய நடை மிகவும் எளிமையாக, நேரில் நின்று பேசுவதுபோல இருந்தது.

# சாதாரண மக்களின் குரலை தனது கவிதைகளில் பிரதிபலித்தார். இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டினார். புதுக் கவிதை இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இவரது காவியங்களில் புதிய பாரதம் பற்றிய இவரது கனவு வெளிப்பட்டது.

# ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருப்பார். அதற்காக எதையாவது சிந்தித்துக்கொண்டும், செய்துகொண்டும் பரபரப்புடன் இருப்பார். மிக எதார்த்தமானவர். அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய மனோபாவம் கொண்டவர்.

# இவரது ‘புனீ ஹுயி ரஸ்ஸி’ படைப்புக்காக 1972-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்ம, உத்தரப் பிரதேச இந்தி அமைப்பின் இலக்கிய விருது, மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மான் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார்.

# பலவீனமான உடல்நிலை கொண்ட இவர் 7 முறை மரணத்துடன் போராடி பிழைத்துக் கொண்டார். இந்தி காவிய உலகின் இணையற்ற நட்சத்திரமாக ஜொலித்த பவானி பிரசாத் மிஸ்ரா 72-வது வயதில் (1985) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x