Published : 24 Dec 2021 12:04 PM
Last Updated : 24 Dec 2021 12:04 PM
திருக்குறள் கதை 89: நட்பு
திரையுலகில் ஆரம்பக் காலத்தில் கலைஞரும், எம்ஜிஆரும் உயிர் நண்பர்களாக விளங்கியவர்கள். தான் கதாநாயகனாக முதன்முதல் நடித்த 'ராஜகுமாரி' படத்தில் கலைஞர்தான் கதை, வசனம் எழுத வேண்டும் என்று ஜூபிடர் நிறுவனத்தில் வற்புறுத்தியவர் எம்ஜிஆர். அதேபோல ‘மலைக்கள்ளன்’ படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால் நான் ஹீரோவாக நடிக்க தேதி தருகிறேன் என்று தயாரிப்பாளர், இயக்குநர் பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவை வற்புறுத்தியவர் எம்ஜிஆர்.
அதேபோல் ‘நாம்’ என்ற படத்தை கலைஞர், எம்ஜிஆர், காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா நால்வரும் கூட்டாகச் சேர்ந்து தயாரித்தனர். படம் சரியாகப் போகவில்லை. 'காஞ்சித்தலைவன்', 'எங்கள் தங்கம்' என்று கலைஞர் தயாரிப்பிலும் எம்ஜிஆர் நடித்துள்ளார்.
அரசியல் ரீதியாக திமுக தொடங்கப்பட்டபோது ஒருவர் பலம் ஒருவருக்கு உறுதுணையாக இருந்தது. 1972-ல் திமுகவை விட்டு வெளியேறி அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகப் பெரும் செல்வாக்குடன் ஆட்சி செய்தார்.
ஒரு முறை கலைஞரிடம் பேசிக் கொண்டிருந்தபோது -இன்று எதிரும் புதிருமாக வலிமை மிக்க அரசியல் தலைவர்களாக நீங்களும் எம்ஜிஆரும் விளங்குகிறீர்கள்.
1940-களில் நட்புக்கு இலக்கணமாக இருவரும் இருந்த வரலாற்றை என்போன்றவர்கள் நன்கு அறிவோம்.
இதுவரை பத்திரிகையில் சொல்லாத எம்ஜிஆருக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் ஆழத்தை விளக்கும் சம்பவம் ஒன்றைச் சொல்ல முடியுமா என்று கலைஞரிடம் கேட்டேன்.
‘பராசக்தி’ படம் வெளிவந்து கலைஞர் கருணாநிதி வசனம் ரெக்கார்டுகளில் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்களில் ஒலித்துக் கொண்டிருந்த காலம்.
1953-ல் கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றிருந்தார்.
தம்பி! அரசியல் ரீதியாக அப்போ நான் பிரபலமா ஆகாத நேரம். சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்குப் பயணமானேன்.
வழக்கமா நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்தை நெருங்கிவிட்டது என்றுதான் எழும்பூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு செய்வாங்க. ஆனா, அன்னைக்கு கருணாநிதி ரயில் வந்து கொண்டிருக்குன்னு அறிவிப்பு செஞ்சாங்க. பிளாட்பாரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தலைகள். இந்தக் கூட்டத்தில் நான் எப்படி இறங்கி வெளியே போவேன்னு பதற்றமா இருந்தேன்.
மின்னல் வேகத்தில் ஒருத்தர் வந்தார். கூட்டத்தை விலக்கி ரயிலிலிருந்த என்னை அப்படியே தூக்கி தன்னோட தோள்ல உட்கார வச்சிகிட்டாரு. ஆவேசமா கூட்டத்தை விலக்கிட்டு, பரபரன்னு பிளாட்பாரத்தை தாண்டி ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒரு டாக்ஸி பிடித்து என்னை ஏத்திவிட்டாரு. இந்த பரபரப்புல அவர் கையிலிருந்த வாட்ச்சை எவனோ ‘கட்’ பண்ணி எடுத்திட்டான். ‘என்னய்யா, வாட்ச் போயிடுச்சே!’ன்னேன். அதை விட நீங்க காஸ்ட்லி ஆள் அப்படின்னுட்டு போயிட்டாரு. அவர்தான் எம்.ஜி.ஆர்.
இந்த ஆழமான உயிர்த்துடிப்பு மிக்க நட்பை விளக்கும் முகமாக, ‘இரண்டு நண்பர்கள் சேர்ந்தால் வானத்தையே வில்லாக வளைக்கலாம்!’ என்கிறார் வள்ளுவர். அக்குறள்:
‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு’
குறள் கதை 90: வீராங்கனை
சரியாக நூற்றாண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவம் இது.
அந்த அம்மா பெயர் பொங்கியாத்தாள். அவர் தன்னுடைய 15 வயதில் பருவமடைந்தார். 16 வயதில் திருமணம் செய்து வைத்தனர். ஒரு ஆண் குழந்தை பிறந்து ஓராண்டு நிறைவதற்குள் அந்த அம்மாவுக்குப் பெரியம்மை நோய் தொற்றிக் கொண்டது.
1940களில் பிளேக், காலரா கொள்ளை நோய். அது வந்தால் தப்பிப் பிழைப்பவர்கள் ஒரு சிலரே.
அதேபோல பெரியம்மை வந்தால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் பகுதி அதாவது பாதத்தின் அடிப்பக்கம் கூட அம்மைக் கொப்புளங்கள் வந்து விடும்.
‘மாரியாத்தா நம்ம பொண்ணு மேல வந்திட்டா!’ என்று படிக்காத கிராமத்து மக்கள் நோயாளியை மாரியம்மன் கோயிலுக்குத் தூக்கிட்டுப் போய் அம்மன் சந்நிதியில் படுக்க வைத்து வெள்ளைத் துணியை மேலே போர்த்து விட்டு கையிலே ஒரு வேப்பிலைக் கொத்தைக் கொடுத்து விடுவார்கள்.
4, 5 வயதுச் சிறுமிகள் சில சமயம் பக்கத்திலே உட்கார்ந்து அந்த வேப்பிலைக் கொத்தைக் கொண்டு, ஈ, கொசு வராமல் விசிறிக் கொண்டே இருப்பார்கள்.
15 நாள் ஆகும்போது கொப்புளங்கள் பெரிதாகி, சீழ் பிடித்து வெடித்து நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். செப்டிக் ஆகி ஓரிரு நாளில் இறந்து விடுவார்கள்.
ஆனால், பொங்கியாத்தாள் அப்படி சாகவில்லை. அம்மையின் உக்கிரம் தாங்காமல் இரண்டு கண்களும் ஒழுகி விட்டன. கண் உள்ள இடத்தில் குழியாகி விட்டது.
உயிர் பிழைத்த பெண்மணி தவழ்ந்துகொண்டே சென்று கணவன் காலை இறுகப் பற்றிக் கொண்டு, ‘நான் இனி தேற மாட்டேன். நீங்கள் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தையை மட்டும் ஆளாக்கி விட்டு விடுங்கள்!’ என்று கதறினார்.
அந்தப் படிக்காத மனிதன், ‘ஏம்மா! இந்த அம்மை எனக்கு வந்து நான் குருடனாகியிருந்தா எனக்கு நீ கஞ்சி ஊத்த மாட்டியா?’ என்று கேட்டார்.
இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். என்ன சோதனை வந்தாலும் வாழ்ந்து பார்த்து விடுவது என்று முடிவுக்கு வந்தார்கள்.
15 நாட்களுக்கு முன் பார்வையிருந்தது பொங்கியாத்தாளுக்கு. இப்போது உலகம் இருண்டுவிட்டது. ஆனாலும் அந்த வீட்டில் சமையலறை எங்கு உள்ளது. அதற்கு கதவு எங்கு இருக்கும். சமையல் கட்டின் உள்ளே 10 அடி தூரத்தில் தரையில் உள்ள அடுப்பு விறகு வைக்கும் இடம் எல்லாம் நினைவில் இருந்தது.
அதேபோல் குடியிருக்கும் சாலைக்கு எதிரில் அகன்ற வாசல் உண்டு. அதை ஒட்டி 10 அடி அகலத்தில் வண்டித்தடம் போகும். அதில் 1000 அடி போனால் கிணறு இருக்கும். அந்தக் கிணற்றில், தொலைக்கட்டு உருளை, பண்ணை உருளை. தண்ணீர்த் தொட்டி உள்ள இடம் எல்லாம் நினைவில் இருக்கும்.
நிதானமாக ஒவ்வொரு எட்டாக வைத்து அந்த இடங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டார். வண்டித் தடத்தில் நடுவே நடக்காமல் இடது புறம் போனால் சோளப்பயிர் உடம்பிலே படும். உடனே நகர்ந்து வந்து விடுவார். இடது பக்கம் அதிகம் போய் விட்டால் பருத்திக் காடு இருப்பது புரியும்.
அதேபோல தொலை உருளையில் குடத்தைக்கட்டி கிணற்றுக்குள் விட்டால், 40 அடி ஆழத்தில் தண்ணீர் மீது குடம் முட்டுவது தெரியும். 3 முறை குடத்தை இழுத்து விட்டால் தண்ணீர் மொண்டு குடம் நிரம்பி விடும். வலது கையில் இருபது முறை, இடது கையில் இருபது முறை இழுத்தால் குடம் மேலே வந்து விடும். கையை நீட்டி குடத்தைப் பிடித்து இறக்கி விடலாம். இப்படி அனைத்துக்கும் கணக்குப் போட்டு யார் உதவியும் இல்லாமலே வீட்டு வேலைகைளைச் செய்து கொள்வார். அதன் பின்னர் ஒரு மகள், இரண்டு மகன்களும் பிறந்தனர்.
பெரிய மகன் நடராஜன், மாயவரம் அருகே செம்பனார் கோயிலில் நெல் வியாபாரம் தொடங்கி கேரளாவிக்கு மூட்டைகளை ரயிலில் அனுப்பும் வேலையை 30 ஆண்டுகளுக்கு மேல் செய்தார்.
அவருக்குத் திருமணமாகி 3 மகள்கள் பிறந்தனர். இரண்டாவது மகள் சாந்தியின் கணவர் மோடி பிரதமர் பதவி ஏற்ற காலத்தில் மத்திய அரசின் -நிதி அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிய ராமலிங்கம். அதன் பின்னர் வருமான வரித்துறையில் முதன்மை ஆணையராகப் பொறுப்பேற்றார்.
பொங்கியாத்தாள் 16 வயதில் மரணித்திருக்க வேண்டியவர். பார்வையிழந்த நிலையிலும் தனித்துப் போராடி குடும்பத்தைக் கரை சேர்ந்து மகன் மகள், பேரன் பேத்திகள் என்று குடும்பம் பெருகி கணவன் இறந்த பிறகும் 10 வருடம் வாழ்ந்து 2007-ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இதுபோன்ற வீராங்கனைகளைக் கொண்டாட நான் தேர்வு செய்த குறள்:
‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி -தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT