Published : 12 Mar 2016 12:17 PM
Last Updated : 12 Mar 2016 12:17 PM
நம் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீரியஸாகச் சொல்லி புரியவைக்கலாம். சிரிக்க வைத்தும் புரிய வைக்கலாம். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் அரவிந்த். சிவிகை என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். சிவிகை - இது அறியாப் பயல், தெரியாமல் கிறுக்கியது என்ற பெயரே, அங்கே என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
நவீன தமிழனின் மூட நம்பிக்கைகள் என்ற பெயரில் அவர் எழுதி இருக்கும் கட்டுரை, நம்மை சிரிக்க வைத்து, கூடவே சிந்திக்கவும் வைக்கிறது. இதை ஷேர் செய்தால் நல்லது நடக்கும் என்பதில் தொடங்கி, உணர்வுகளுக்கான பாடல்கள் இவைதான் என்று முத்திரை குத்துவது, டிபி மாற்றி போராட்டம் செய்வதாகக் கூறுவது உள்ளிட்டவைகளை நாகரிகமாகக் கேலி செய்கிறார் அரவிந்த்.
வாசிக்க: >நவீன தமிழனின் நம்பிக்கைகள்
அரவிந்தின் வார்த்தைகளில் இயல்பாகவே, சிரிப்பும் நளினமும் வழிந்தோடுகிறது. இவருடைய சென்னையின் வாகன ஓட்டிகள் பற்றிய கட்டுரை வாகனங்களின் வகைகளைப் பலவாறாகப் பிரிக்கிறது. இக்கட்டுரை சென்னைக்கு மட்டுமே பொருந்தும். நெடுஞ்சாலைகள், மற்ற ஊர்களுக்கு இது பொருந்தாது என்ற முன்குறிப்போடு கட்டுரையை ஆரம்பிக்கிறார் அரவிந்த்.
இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்களை பாவப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள், மிக ஆபத்தானவர்கள், மோசமானவர்கள் என்று நகைச்சுவையோடு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
வாசிக்க: > சென்னையின் வாகன ஓட்டிகள்
முக்கியமாக அரவிந்தின் கருத்துக்களுக்கு வரும் பின்னூட்டங்கள், ஆரோக்கியமான விவாதத்துக்கு இட்டுச் செல்கின்றன.
மற்றொரு கட்டுரையில், ''விஜயகாந்த் ஒரு அப்பாவி. விவரம் தெரிந்தவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்'' என்று கூறும் அரவிந்த், விஜயகாந்த் குறித்த சில தகவல்களையும் பகிர்கிறார். நடிகர் சங்க கடனை அடைத்தது, தன் படங்களில் காவல்துறைக்கு நன்மதிப்பை அளித்தது, தன்னுடைய அலுவலகத்தில் எப்போதும் அன்னதானம் அளிப்பது, மற்ற நடிகர்களுக்கு கவுரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தது, பழைய நண்பர்களை மறக்காமல் இருப்பது உள்ளிட்ட அவரின் குணங்களைப் பாராட்டவும் செய்கிறார்.
படிக்க: >இவரா இப்படி (அ) இவர் இப்படியா?
ஏன் நம் மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கிறது?
தேசிய விளையாட்டு, உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுக்கள், உடல்நலனைக் காக்கும் விளையாட்டுகள், தனிநபர் விளையாட்டுக்களை விடுத்து ஏன் மக்களுக்கு கிரிக்கெட்டை அதிகம் பிடிக்கிறது? ஏன் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் மேல் தீராத மோகம்? இப்படி யாராவது யோசித்ததுண்டா? இதோ அரவிந்தின் பார்வையில் அதற்கான காரணம்..
வாசிக்க: >கிரிக்கெட் மோகம்
இவை தவிர, உள்ளூர் மற்றும் உலக சினிமாக்கள் குறித்தும் தனது பார்வையை முன்னெடுத்து வைக்கிறார் அரவிந்த்.
வாசிக்க: >மாஸ் - தமாஸ், டிமாண்டி காலனி - பக்கா மாஸ்
கிறிஸ்டோபர் நோலனின் படங்கள் எல்லாமே சுஜாதா கதைகளை நினைவூட்டுகிறது என்று கூறும் அரவிந்த், நோலனின் குறும்படங்கள் குறித்தும் பேசுகிறார்.
வாசிக்க: >கிறிஸ்டோபர் நோலன்
1990களின் பிற்பகுதியில் வாசிக்க ஆரம்பித்தவர்கள், க்ரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ் குமாரைத் தொடாமல் வந்திருக்க முடியாது. கிராமப்புற இளைஞர்களுக்கு மத்தியில், கிரிப்டோகிராஃபியையும், தொழில்நுட்ப வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் திட்டுவார்கள் என்று அங்கங்கே ஒளித்து வைத்த க்ரைம் நாவல்கள், இன்னமும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று கூறும் ஒரு பதிவு இதோ உங்களுக்காக!
வாசிக்க: >க்ரைம் மன்னன்
எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் அல்லாமல், போகிற போக்கில், தோன்றும் விஷயங்களை இயல்பாகத் தொட்டுச் செல்கின்ற நடை அரவிந்துக்கு வாய்த்திருக்கிறது. தொடர்ச்சியான, நல்ல பதிவுகளோடு சிவிகை இன்னும் உயரம் தொட வாழ்த்துகள்!
சிவிகையின் வலைத்தள முகவரி: >http://www.sivigai.blogspot.com/
முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: இணையத்தில் அரசு பள்ளி மகத்துவம் அடுக்கும் ஆசிரியர்
| நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பதிவு, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே! |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT