Published : 15 Mar 2016 10:45 AM
Last Updated : 15 Mar 2016 10:45 AM

பால் ஹெயிஸ் 10

நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர்

உலகப் புகழ்பெற்ற ஜெர்மனி எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான பால் ஹெயிஸ் (Paul Heyse) பிறந்த தினம் இன்று (மார்ச் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு அருகே உள்ள ஹெலிகெய்ஸ்ட் என்ற இடத்தில் யூதக் குடும்பத்தில் (1830) பிறந்தார். தந்தை புகழ்பெற்ற மொழியியலாளர், பெர்லின் பல்கலைக்கழக பேராசிரியர். தாத்தாவும் மிகப் பெரிய அறிஞர்.

# பள்ளியில் முன்னுதாரண மாணவ ராகத் திகழ்ந்தார். சிறு வயதிலேயே எழுதுவதில் அதிக திறனும், நாட்டமும் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு பாரம்பரிய மொழியியல் பயிலத் தொடங்கினார். பிரபல இலக்கியவாதிகளை சந்தித்தார்.

# இவரது முதல் கவிதை 1848-ல் வெளியானது. பெர்லினில் பிரபலமாக விளங்கிய இலக்கிய சங்கத்தில் சேர்ந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் பயின்ற பிறகு வரலாறு, மொழிகள் கற்க பான் நகருக்கு சென்றார். எழுதுவதை முழுநேரப் பணியாக மேற்கொள்வது என முடிவெடுத்தார்.

# ஒருசில காரணங்களால் மீண்டும் பெர்லின் திரும்பினார். அப்போது சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய இவரது முதல் நூலை தந்தை வெளியிட்டார். 1851-ல் இலக்கிய சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்றார்.

# 1867-ம் ஆண்டு தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளில் ஏராளமாக எழுதிக் குவித்தார். இவரது புகழ் மெல்ல மெல்லப் பரவி உலகம் முழுவதும் பிரபலமானார். ஏராளமான கவிதைகள், 120 நாவல்கள், 177 சிறுகதைகள், 60 நாடகங்களை எழுதியுள்ளார். அன்றைய ஜெர்மன் எழுத்தாளர்களிலேயே இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எழுதியவர் இவர்தான். ‘தி ஃப்யூரி’ சிறுகதை இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

# சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். பல்வேறு மொழிகளில் வந்த புகழ்பெற்ற கவிதைகளை ஜெர்மனியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1880-ன் மத்தியில் முதலாவது சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். இவரது பெரும்பாலான படைப்புகள் ‘ஆர்கோ’ என்ற வருடாந்திர இதழில் வெளிவந்தன.

# பிரஷ்ய கலாச்சார அமைச்சகத்தின் உதவித்தொகை பெற்று ரோம் நகருக்கு சென்றார். இவரது நண்பரும் புகழ்பெற்ற படைப்பாளியுமான இமானுவேல் கைபல் சிபாரிசால் மூனிச் பல்கலைக்கழகத்தில் ரோமானிய மொழியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

# பல இலக்கியவாதிகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான இலக்கிய சேவைகளில் ஈடுபட்டார். இலக்கியவாதிகள், கலாச்சார வரலாற்று ஆசிரியர்கள், பயணக் கட்டுரை எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து அங்கு ‘டை குரோகடைல்’ என்ற இலக்கிய அமைப்பை தொடங்கி, இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

# இவரது இலக்கிய பங்களிப்புகளுக்காக பெர்லின் மற்றும் பான் பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கின. இலக்கியத்தின் பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த இவருக்கு 1910-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத் துறையில் இவரது பங்களிப்பை போற்றும் விதமாக மூனிச் நகரின் கவுரவ குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# சிறந்த இலக்கியவாதியும், ஜெர்மனியின் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பால் ஹெயிஸ் 84-வது வயதில் (1914) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x