Published : 15 Mar 2016 11:18 AM
Last Updated : 15 Mar 2016 11:18 AM
M.G.R. மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்து பிறகு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் அவரது உயர்ந்த குணங்களையும் பண்புகளையும் அறிந்து, அவரது அன்பால் ஈர்க்கப்பட்டோர் ஏராளம். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் தொழிலதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி.
பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்புக் காக 1967-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற பழனி ஜி. பெரியசாமி அங்கேயே தங்கியிருந்தார். எம்.ஜி.ஆர். முதல்முறையாக 1974-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அப்போது, மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பல்கலைக்கழகத்தில் வணிகக் கல்லூரியில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியராக பழனி பெரியசாமி பணியாற்றி வந்தார் . எம்.ஜி.ஆர். மீது ஈர்ப்பு இல்லாததாலும் பொருளாதார ஆராய்ச்சி பணிகளில் தீவிரமாக இருந்ததாலும் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரை அவர் சந்திக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டார். பின்னர், ஒருமுறை எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். இந்தமுறை, தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அமெரிக்க அரசின் விருந்தினராக எம்.ஜி.ஆர். சென்றார்.
அந்த சமயத்தில் வாஷிங்டன், மேரிலேண்ட், வர்ஜீனியா ஆகிய 3 மாகாணங்கள் ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தார் பழனி பெரியசாமி. அவரை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை வர வேற்று அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு பழனி பெரியசாமி சம்மதித்தார் என்றாலும், அப்போதும் கூட எம்.ஜி.ஆர். மீது அவருக்கு பெரிய அளவில் அபிப்ராயம் இல்லை. ‘எம்.ஜி.ஆர். ஒரு நடிகர், மக்களின் அபிமானத்தை யும் செல்வாக்கையும் பெற்று முதல்வரானவர்’ என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது.
அமெரிக்கா வந்திறங்கிய எம்.ஜி.ஆரை தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் பழனி பெரியசாமி வரவேற் றார். அமெரிக்க அரசு சார்பில் எம்.ஜி.ஆரை அழைத்துச் செல்ல ஒரு அதிகாரி அனுப்பப் பட்டிருந்தார். அவர் ஒரு காரும் கொண்டு வந்திருந் தார். அது கொஞ்சம் சிறிய கார். ஆனால், அதற்கு முன்பே, எம்.ஜி.ஆர். தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அவருக்காக பெரிய, சொகுசு கார் ஒன்றை பழனி பெரியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.
அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘உங்களுக்காக பெரிய, சொகுசு கார் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும்’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வர். அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன். நான் அவர்களது விருந்தினர். என்னை வரவேற்று உபசரிக்க ஒரு அதிகாரியையும் காரையும் அனுப்பியுள்ளனர். அதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே மரியாதைதான் முக்கியமே தவிர கார் பெரியதா? சிறியதா? வசதி இருக்கிறதா? என்பது முக்கியம் அல்ல. நான் அமெரிக்க அரசு அனுப்பிய காரில் ஓட்டலுக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் காரில் வாருங்கள். ஓட்டலில் சந்திப்போம்’’ என்று கூறி அமெரிக்க அரசின் காரில் எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
இதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆர். மீதான மதிப்பை பழனி பெரியசாமியிடம் உருவாக்கியது. எம்.ஜி.ஆர். சாதாரண நடிகரோ, வழக்கமான அர சியல்வாதியோ அல்ல; பண்பும் குணநலன்களும் நிரம்பியவர்; பகட்டுக்கு மயங்காதவர் என்பதை புரிந்து கொண்டார் பழனி பெரியசாமி.
பின்னர், அமெரிக்காவில் எம்.ஜி.ஆரின் நிகழ்ச்சிகளை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் எம்.ஜி.ஆர்., ஓட்டல் அறைக்கு வந்தவுடன் தலை யில் உள்ள தொப்பியை கழற்றி ஸ்டைலாக கட்டில் மீது வீசுவது, சினிமாவைப் போலவே தனியாக இருக்கும்போதும் சுறுசுறுப்பாக கட்டில் மீது ‘ஜம்ப்' செய்து ஏறி அமருவது போன்றவற்றைப் பார்த்து அவரது நல்ல குணங்களுக்கு மட்டுமின்றி, ஸ்டைலான நடவடிக்கைகளுக்கும் பழனி பெரியசாமி ரசிகராகிவிட்டார்.
பால்டிமோரில் எம்.ஜி.ஆர். தங்கியிருந்த போது, பழனி பெரியசாமியிடம் ‘‘ரயில் பயணம் செய்ய விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங் கள்’’ என்று கூறியுள்ளார். அதன்படி, பால்டிமோரில் இருந்து நியூயார்க் நகருக்கு ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார் பழனி பெரியசாமி. காரில் புறப்பட்டு வந்து, ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் நேரத்தில், ஒரு பெண் எம்.ஜி.ஆரை நோக்கி குழந்தையுடன் வேகமாக வந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். நின்று விட்டார்.
அந்தப் பெண் எம்.ஜி.ஆரை வணங்கியபடி, ‘‘உங்களைப் பார்ப்பதற்காக ரிச்மண்ட் என்ற இடத்தில் இருந்து மூன்றரை மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் ரயிலில் செல் வதை அறிந்து வேகமாக வந்தேன். பார்த்து விட்டேன்’’ என்று கண்களில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவரை ஆசுவாசப்படுத்தி அன்பாக பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குழந்தையை கொஞ்சியதுடன் அந்தப் பெண்ணின் விருப்பப்படி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவரது முகவரியை வாங்கி புகைப்படத்தை அந்த பெண் ணுக்கு அனுப்பிவிடுமாறு புகைப்பட நிபுணரிடம் கூறி, பெண்ணையும் வாழ்த்தி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரை பார்த்து பேசி அவரது அன்பில் திளைத்த பிரமிப்பு நீங்காமல் விடைபெற்றுச் சென்றார் அந்தப் பெண். அதற்குள் நியூயார்க் நகருக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது.
‘‘நீங்கள் அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசியதால் ரயிலைத் தவறவிட்டு விட்டோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார் பழனி பெரியசாமி.
அவரைப் பார்த்து ‘‘அடுத்த ரயில் உண்டா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்க, ‘‘உண்டு. இன்னும் சிறிது நேரத்தில் வரும்’’ என்று பழனி பெரியசாமி கூறினார்.
எம்.ஜி.ஆர். சிரித்தபடியே, ‘‘ரயில் வரும்; போகும். அந்த அம்மா என்னைப் பார்க்க வெகு தூரத்திலேருந்து குழந்தையுடன் தனியாக மூன்றரை மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அவரை புறக்கணித்து விட்டு நான் ரயில் ஏறியிருந்தால் அந்த அம்மாவுக்கு ஏமாற்றமாகிவிடும். இப்ப பாருங்க, அவர் முகத்தில் எத்தனை சந்தோஷம். அமெரிக்கா வந்தும் என்னால் ஒருவரை சந்தோஷப்படுத்த முடிந்தது எவ்வளவு பெரிய விஷயம்..’’
அவர் பேசிக் கொண்டே செல்ல, பழனி பெரியசாமியின் மனதில் இமயமாய் உயர்ந்து நின்றார் எம்.ஜி.ஆர்.
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் தமிழகத்துக்கு பயன்படவும், இங்கே உள்ள திறமையான தமிழர்கள் அமெரிக்காவில் வாய்ப்புகளை பெறவும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஆஃப் யு.எஸ்.ஏ. என்ற அமைப்பை பழனி ஜி.பெரியசாமி தொடங்கினார். அதற்கான அறக்கட்டளைக்கு சென்னை டெய்லர்ஸ் ரோடில் 4 கிரவுண்டு நிலத்தை தனது சொந்த பணத்தில் எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு ரூ.30 கோடி.
- தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT