Last Updated : 02 Mar, 2016 09:42 AM

 

Published : 02 Mar 2016 09:42 AM
Last Updated : 02 Mar 2016 09:42 AM

மன்னா... என்னா?- விசாரணை.. சம்மன்.. கெரசின் வாளி

அரண்மனை களேபரமாக இருந்தது. கஞ்சியை காலில் கொட்டிக்கொண்டதுபோல தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தார் மன்னர்.

‘‘நாடா இது.. என்ன நடக்கிறது இங்கே.. கஜானா வராகனை ஆட்டயப் போட்டுவிட்டேனோம்.. விசாரணை கமிஷனில் ஆஜராக உத்தரவு வருகிறது. சம்மன் அனுப்புகிறார்கள். அய்யோ.. இம்சை பண்றாங்கப்பா.. இம்சை பண்றாங்கப்பா.. அப்படி என்ன தவறு செய்துவிட்டேன். இல்லாததும் பொல்லாததுமாக என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். என்னைக் காப்பாற்றுவார் இல்லையா, இந்த நாட்டு மக்களுக்கு கண் இல்லையா.. விசாரணை அது இது என்று போனால், என் ஒட்டுமொத்த சொத்தையும் கஜானாவில் சேர்க்கச் சொல்லிவிடுவார்கள். அப்படியெல்லாம் செய்தால் இந்த நாட்டு மக்கள்தான் நிதி திரட்டித் தந்து என்னை வாழவைக்க வேண்டும். இல்லாவிட்டால் கெரசின் ஊற்றிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..’’

திருவிளையாடல் தருமி போல புலம்பிக்கொண்டே அரண்மனைக்குள் மாடத்துக்கும் கூடத்துக்குமாக ஓடிக்கொண்டிருந்தார் மன்னர்.

ஓடோடி வந்தார் மகாமந்திரி. ‘‘மன்னா! நம் நாட்டு மக்களை சாதாரணமாக கருதிவிடாதீர்கள். உங்களுக்காக எதுவும் செய்வார்கள். வாருங்கள்.. அந்த கண்கொள்ளாக் காட்சியை நீங்களே பாருங்கள்’’ என்று கூறி அரண்மனையின் மேல் மாடத்துக்கு மன்னரை அழைத்துச் சென்றார் மகாமந்திரி.

உப்பரிகையில் இருந்து கீழே பார்த்தார் மன்னர். சாரை சாரையாக அரண்மனை நோக்கி வந்தபடி இருந்தது மக்கள் கூட்டம்.

‘‘அடடா.. என்ன மக்கள் இவர்கள். எனக்கு அபராதம் போட்டால், நிதி திரட்டித் தாருங்கள் என்றேன். அதற்குள், ஓடோடி வந்துவிட்டார்களே’’ என்று ஆனந்தக்கண்ணீரை அங்கவஸ்திரத்தால் துடைத்தபடியே, உப்பரிகையில் இருந்து குடுகுடுவென இறங்கி அரண்மனை வாசலுக்கு வந்தார்.

வாசல் பகுதி பரபரப்பாக இருந்தது. வரிசையில் நிற்கும் மக்கள் வாளி வாளியாகக் கொண்டுவந்து கொடுக்கும் கெரசினை பீப்பாய்களில் ஊற்றிக் கொண்டிருந்தனர் சிப்பந்திகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x