Published : 09 Mar 2016 03:33 PM
Last Updated : 09 Mar 2016 03:33 PM
ராடன் குறும்பட விழாவுக்கு வந்த படங்களில் சிலவற்றைப் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவங்களுக்கு உத்தரவாதம் உண்டு என்றே தோன்றுகிறது. இந்த வரிசையில் வந்த 'பொண்டாட்டிஸ் ஆர் அஸ்' அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிய குறும்படம்.
வழக்கமாக குறும்படம் என்றாலே எதாவது கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என மெனக்கெடுவது பளிச்சென்று தெரியும். இது தவிர, சினிமாத்தனத்தையே குறும்படம் என்ற பெயரில் ஜூனியர் சினிமா எடுக்கும் அசட்டுத்தனங்கள் பல்லை இளித்துக்கொண்டு இருக்கும் சில படங்களையும் பார்க்கிறோம்.
அப்படியெல்லாமல் இல்லாமல் இதில், நகைச்சுவை கொப்பளிக்க ரசிக்கத்தக்க ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது.
குடும்ப வேலைகளை செய்ய முடியாமல் பெண்கள் தவிக்கும்போது அதற்கு குளோனிங் வந்தால் நன்றாக இருக்கும் ஒரு யோசனையைத்தான் இக்குறும்படம் முன்வைக்க முயல்கிறது என்றுதான் முதலில் தோன்றுகிறது.
குடும்பத்தில் உள்ள பல வேலைகளையும் ஒரே பெண் எப்படி செய்யமுடியும் ஒருவகையில் நியாயமான கேள்விதான்.அமெரிக்காவில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு தினம் தினம் வேலைக்கும் போய்க்கொண்டு இருக்கும் விருகம்பாக்கம் அஷ்டலட்சுமிதான் இப்படத்தின் மைய கதாப் பாத்திரம். இந்த இளம் குடும்பத் தலைவியே தினம்தினம் பல்வேறு குடும்ப வேலைகளில் திக்குமுக்காடி விழிபிதுங்கிக் கொண்டிருக்க தோழியொருத்தி தொலைபேசியின் வழியே வந்ததுகூட மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது அவளுக்கு.
உடனே அவளை நேரில் சந்திக்கிறாள். தோழி ஹேமா குளோனிங் குறித்த விஞ்ஞான முயற்சிகளில் இருப்பவள். அவள் குளோனிங் பற்றி 'ப்ரைன் சிக்னல்'லுக்கு ஏற்ப செயல்கள் குளோனிங்கில் பிரிக்கப்படுகிறது என்பதை சொல்லும்போது தன்னையே பரிசோதனை செய்து கொள்ள அஷ்டலட்சுமிக்கும் ஆசை துளிர்க்கிறது.
இதனால் பலவிதமான வேலைகளை செய்வதற்கு குளோனிங் செய்துகொண்டுவிட்டால் பரபர வேலைகளிலிருந்து விடுபடலாம் என தோன்ற குளோனிங் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.
ரத்த சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அஷ்டலட்சுமி, எட்டு லட்சுமிகளாக குளோனிங்கில் பிரிகிறார்கள். இப்போது அஷ்ட லட்சுமிகளும் பல்வேறு வேலைகள் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
அது எப்படி இக்குறும்பட தயாரிப்புக்குழு, மொத்தத்தில் பெண்ணை குடும்பப் பண்டமாகத்தானே பார்க்கிறார்கள் இது என்ன சயின்ஸ் பிக்ஷன் என்று அறிவுஜீவிகளுக்கு உடனே கண்கள் சிவக்கும். ஆனால் அதற்கு எதிரான மனநிலையிலிருந்தே இப்படம் பேசுகிறது என்பதையும் பின்னர் புரிந்துகொள்கிறோம்.
இந்த வித்தியாசமான திரைக்கதையை குளோனிங் யோசனை குழப்பதை விளைவிக்கும் ஏடாகூட நிலைக்குச் செல்வதையும் சத்யராஜ்குமார், சிவா சங்கமேஸ்வரன் இருவரும் இணைந்து லாவகமாகச் சொல்லி வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
பாலமுரளி பாலு இசையும் தினேஷ் ஜெயபாலன் கேமராவும் படத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. ஒருவிதத்தில் சிறந்த படத்தொகுப்பும் தந்திரக் காட்சிகளும் கொண்டு இதை குறும்படத்தை சயின்ஸ் பிக்ஷனாக சாத்தியப்படுத்தி இருப்பவர் அமி.
மேலும் சயினிஸ் பிக்ஷன் என்றால் ஒருவிதமான புரியாத தன்மையும் பார்வையாளரை இறுக்கமாக வைத்திருக்கவும் முயலும். ஆனால் 'பொண்டாட்டிஸ் ஆர் அஸ்' சரி கலகலப்பு, விறுவிறு. இப்படத்தில் பங்கேற்ற பாலாஜி மாலாப்பு, சிவ செல்வநாதன், சுபா பிரியா, ஸ்மிதா உன்னிவேலன், உன்னிவேலன் பி.ராமன் உள்ளிட்ட குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அந்த கலகலப்புக்குள் உங்களையும் இணைந்துக்கொள்ள.... >https://www.youtube.com/watch?v=DLQO1Jru0mU
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT