Published : 26 Nov 2021 10:09 AM
Last Updated : 26 Nov 2021 10:09 AM
குறள் கதை 72- அன்பு
கோவையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜமீன் வீட்டுத் திருமணம். முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி பெரியவர் என்.மகாலிங்கம், ஊத்துக்குளி ஜமீன் என்று தடபுடலாகத் திருமணம் நடந்தேறியது.
கல்யாணப் பரிசுகள் ஒரு பக்கம் குவிந்துகொண்டே இருந்தன. அந்த வீட்டு வேலைக்காரர் சுமார் 50 வயதைக் கடந்தவர் ஒரு சுருக்குப் பையை மாப்பிள்ளையிடம் நீட்டினார். மாப்பிள்ளை அதை என்னிடம் கொடுத்தார். உள்ளே நோட்டுகளும், நாணயங்களும் நிரம்பியிருந்தன.
‘‘இது என்ன பணம்?’’ என்று கேட்டேன்.
‘‘சின்னராசா குழந்தையா இருந்தப்ப, இந்த அரண்மனைக்கு வேலைக்கு நான் வந்து சேர்ந்தேன். இந்த 25 வருஷமா எனக்கு மாசாமாசம் என்ன சம்பளம் குடுத்தாங்களோ அதை அப்படியே இந்தப் பையில சேர்த்து வச்சிருந்தேன்.
இன்னிக்கு நான் வளர்த்த ராசாவுக்குக் கல்யாணம். எனக்குன்னு குடும்பமா குழந்தையா, குட்டியா? எல்லாமே ராசாதானே? அதான் அந்தப் பணத்தை கல்யாணப் பரிசா ராசாவுக்குத் தர்றேன்!’’ என்றார்.
அத்தனை மக்களும் இன்ப அதிர்ச்சியில் சிலையாகி விட்டனர். அந்த மாப்பிள்ளை வேறு யாருமல்ல. நம்ம சத்யராஜ்தான். சத்யராஜ்- மகேஸ்வரி திருமணம் 1979- ஜூன் 7-ம் தேதி நடைபெற்றது.
அன்பில்லாதவங்க எல்லாம் தனக்கு வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அன்புடையவங்க தன்னுடைய உடம்பைக் கூட தானம் செய்வாங்க! - என்கிறார் வள்ளுவர்:
‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்- அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு!’
---
குறள் கதை 73- கல்வி
கோவை மாவட்டத்தில், காசிகவுண்டன்புதூர் என்ற சிறிய கிராமத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் ஊரில் நான் பிறந்த காலத்தில் 200க்கும் குறைவான மக்கள் வாழ்ந்தனர். குடி தண்ணீர், மின்சாரம், கழிப்பறை, சாலை வசதி, பள்ளிக்கூடம் போன்ற வசதிகள் கிடையாது.
பதினோரு பேர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து எல்லோரும் பாதியில் நின்றுவிட 11-வது வகுப்பில் தேறிய முதல் மாணவன் நான்தான்.
சென்னை வந்து 6 ஆண்டு ஓவியம் பயின்றிட, என் ஒன்று விட்ட மாமா கல்விக் கடன் தந்து பேருதவி செய்தார். 1965-ல் நடிக்கத் தொடங்கி 14 வருடங்களில் 100 படங்களில் நடித்து முடித்தேன்.
தமிழ் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 100-வது பட வெளியீட்டின்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஆசியுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கினேன். 100-வது படத்தின் முழுச் சம்பளம் ரூ.25 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதில் கிடைத்த வட்டியைப் பிரித்து முதல் பரிசு 1000 ரூபாய், இரண்டாம் பரிசு 750 ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் என்று 1980-ல் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கினேன்.
25-வது ஆண்டு என் சுய சம்பாத்தியத்தில் 5 மாணவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் என 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கினேன். அதன் பிறகு சூர்யா தொடங்கிய அகரம் பவுண்டேஷன் 42 வருஷங்களாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழாவைத் தொடர உதவி செய்கிறது. அவர்கள் ரூபாய் ஐந்தரை லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறார்கள்.
இன்று அகரம், நன்கொடையாளர்களின் உதவியுடன் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மேற்படிப்பு படிக்க வைத்து உலகம் பூராவும் வேலை செய்ய அனுப்பியுள்ளது.
கல்வி அறிவு கண் போன்றது. கல்வியும், ஒழுக்கமும் இருந்தால் எவரும் முன்னேறி உலகின் எந்த பாகத்திலும் வேலை செய்து வாழ முடியும். இதைத்தான் வள்ளுவர்:
‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப- இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார்.
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT