Last Updated : 19 Nov, 2021 10:25 AM

1  

Published : 19 Nov 2021 10:25 AM
Last Updated : 19 Nov 2021 10:25 AM

திருக்குறள் கதைகள் 68-69: உதவி

என் தந்தையார் 33 வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது நான் 10 மாதக்குழந்தை. தனக்கு அகால மரணம் நிகழும் என்று முன்கூட்டியே கணித்தவர், எச்சரிக்கையாக தன்னை புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் அவர் கருப்பா, சிகப்பா, என்ன உயரம் இருப்பார், முக அமைப்பு எப்படி இருக்கும் என்று எதையுமே ஊகிக்க முடியவில்லை.

ஊருக்குள் அவருக்கு இருந்த ஒரே நண்பர் -அவரை விட ஒரு வயது குறைந்த சின்னத்தம்பி மாமா மட்டுமே. அவர் 90 வயது வரை வாழ்ந்தார். அப்பாவின் நிழல்போல வாழ்ந்த அவர் சொல்லும் தகவல் மட்டுமே எனக்கு அப்பாவைப் பற்றி தெரிந்தவை.

1942-ல் அப்பா இறப்பதற்கு முன் ஜோதிடம் பார்த்து 4 அணா, 4 அணாவாகச் சேர்த்து கிராமத்தை ஒட்டி ஒரு எட்டு ஏக்கர் புஞ்சை நிலமும், விமானதளம் பகுதியில் ஐந்து ஏக்கர் கரிசல் மண் பூமியும் வாங்கி வைத்திருந்தார்.

விமான நிலையம் விஸ்தரிப்புக்கு அதில் 2 ஏக்கர் நிலத்தை -வெள்ளையர் காலத்தில் -அரசு வாங்கியிருந்தது. -அதற்கு குறைந்த தொகை ஒன்று நிர்ணயித்து, நான் மைனராக இருந்ததால் 18 வயது மேஜராகும்போது அரசிடம் அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர்.

சின்னத்தம்பி மாமா குடும்பத்துடன்

ஓவியக்கல்லூரியில் சேர்ந்த ஆண்டு எனக்கு 18 வயது நிறைவு அடைந்தது. சூலூர் சென்று ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று எழுதிக் கொடுத்தேன். எப்படியும் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று நம்பினேன்.

பிறந்த ஆண்டு பிறப்பு- இறப்புக்களை குறித்து வைக்கும் பெரிய புத்தகத்தை எடுத்து வந்து என் பெயரைத் தேடினார் குமாஸ்தா. 10 நிமிடம் தேடி விட்டு, ‘‘சார் நீங்க விண்ணப்பத்தில் எழுதிக் கொடுத்த மாதிரி அந்த வருஷம் அந்த ஊர்ல யாரும் பொறக்கலே!’’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

‘‘சார்‘ நான் உங்க முன்னாடி உயிரோட நிக்கறேன். அந்த வருஷத்தில்தான் சார் நான் பொறந்தேன்!’’ என்றேன். ‘நீங்களே பாருங்கள்!’ என்று புத்தகத்தைத் தூக்கிப் போட்டார்.

1941 அக்டோபர் 27-ந்தேதி -இதோ சார் இதுதான் என் பிறந்த குறிப்பு என்றேன். அவர் சிரித்தார்.

‘புத்தகத்தில் உள்ளதைப் படிங்க!’’ என்றார்.

(1941, அக்டோபர் 27-ந்தேதி) விசு வருஷம் ஐப்பசி மாதம் 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ராக்கியாக் கவுண்டர் -ஆவுடையம்மாளுக்கு பால தண்டபாணி ஜனனம்..- படித்தேன்.

‘‘விண்ணப்பத்தில் நீங்க எழுதியிருக்கறதைப் படிங்க!’’ என்றார்.

ராக்கியாக் கவுண்டர் -பழனியம்மாளுக்கு பிறந்த பழனிசாமி விண்ணப்பிக்கிறேன்!’’

‘‘ஒரு பேர் மாறியிருந்தா பரவாயில்லை. ரெண்டு பேரு மாறியிருக்கு- நான் எதுவும் செய்ய முடியாது!’’ என்றார்.

கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ?

கண்ணீருடன் ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசல் பக்கம் வந்தேன். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை - என்பது போல, சின்னத்தம்பி மாமா வந்து கொண்டிருந்தார்.

‘‘என்ன தண்டபாணி. சோர்ந்து போய் வர்றே?’’ என்றார்.

குழந்தையிலிருந்து என்னை தண்டபாணி என்று கூப்பிட்டு வருபவர் அவர்.

நடந்த விஷயத்தைச் சொன்னேன். விண்ணப்பத்தை குடுத்திட்டு, அவர் எழுதிக்குடுக்கறதை வாங்கி எங்கிட்ட குடுத்திட்டு நீ மெட்ராஸ் போ. நான் பார்த்துக்கறேன்!’’ என்றார்.

ராக்கியாக் கவுண்டர் -ஆவுடையம்மாள் -மகன் பாலதண்டபாணி ஜனனம் -ரிஜிஸ்ட்ரார் எழுதிக் கொடுத்தார்.

வழக்கு சிவில் கோர்ட் போயிற்று.

மாஜிஸ்ட்ரேட் கேட்டார். ‘‘சரிப்பா, நீங்க சொல்றீங்கன்னு ராக்கியாக்கவுண்டர் மகன் பழனிசாமிக்கு இந்த ரூ. 3000-ஐ குடுத்திட்டா நாளைக்கு அந்த ராக்கியாக் கவுண்டர் மகன் தண்டபாணி வந்து கேஸ் போட்டா என்ன பண்ணுவீங்க?’’

‘‘எங்கிட்ட 10 ஏக்கர் பூமி இருக்கு. அதை வித்து அந்தப் பணத்தை கட்டறேன்!’’ என்று எழுதிக் கொடுத்து என் வயிற்றில் பால் வார்த்தார் சின்னத்தம்பி மாமா.

ஓவியக்கல்லூரியில் 6 ஆண்டுகள் படிக்க அந்தத் தொகை மிகவும் உதவியாக இருந்தது.

சின்னத்தம்பி மாமா, சரியான நேரத்தில் வந்து செய்த உதவி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.

‘உடுக்கை இழந்தவன் கைபோல -ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு!’ என்கிறார் வள்ளுவர்.

---

குறள் கதை 69: கல்வி

1904-ல் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் கிருஷ்ணசாமி அய்யர்-வெங்கடலட்சுமி அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவர் தமிழ் சினிமா உலகின் முதல் பிதாமகர் டைரக்டர் கே.சுப்ரமணியம்.

அப்பா கிருஷ்ணசாமி ஜமீன்தார்.- வழக்கறிஞர். நாடக நடிகர். ‘மர்ச்சண்ட் ஆப் வெனீஸ்!’ - என்ற ஆங்கில நாடகத்தில் போர்ஷியா வேஷம் ஏற்று நடித்தவர் அப்பா.

கே.சுப்ரமணியம் முதல் மகன். இரண்டாவது மகன் விஸ்வநாதன். சென்னை சித்ரா தியேட்டரை நடத்தி வந்தவர்.

7 வயதுச் சிறுவனாக இருக்கும்போதே கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார் சுப்ரமணியம். நாட்டியத்தின் மீதும் ஆர்வம் இருந்திருக்கிறது.

உயர்நிலைப்பள்ளி படிப்பை சொந்த ஊர் பாபநாசத்தில் முடித்துக் கொண்டு பட்டப்படிப்புக்கு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்தார்.

கணிதமேதை ராமானுஜம், சில்வா் டங் சீனிவாச சாஸ்திரி படித்த கல்லூரி அது. உ.வே. சாமிநாதய்யர் அக்கல்லூரியில் தமிழாசிரியராக இருந்திருக்கிறார். 16 வயதில் ஒன்பது வயதான மீனாட்சியை மணந்து கொண்டார். பால்ய விவாகம் செய்ததால்தான் அதன் கொடுமையை பின்னாளில் படமாக அவர் எடுக்க முடிந்தது.

டைரக்டர் கே.சுப்ரமணியம்

கும்பகோணத்தில் பி.ஏ., முடித்து சென்னை வந்து சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.

சட்டம் பயின்று நாகப்பட்டினம் சென்று மனைவி மீனாட்சியின் தாத்தா ராவ்பகதூர் வெங்கடராம அய்யரிடம் ஜூனியராக சேர்ந்தார்.

புதுக்கோட்டையிலிருந்து பம்பாய் சென்று புகழ் பெற்ற நடிகராகவும் பின்னாளில் டைரக்டராகவும் விளங்கிய ராஜா சாண்டோவின் உதவியாளராக சுப்ரமணியம் பயிற்சி எடுத்தார்.

படத்தின் பெயரையும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் டைரக்டரின் பெயரை மட்டுமே டைட்டிலில் போட்ட காலத்தில் போராடி நடிக, நடிகையர், டெக்னீசியன் பெயரையும் போடக் காரணமானவர் ராஜா சாண்டோ.

‘நல்ல தங்காள்’ -நாட்டுப் புறக்கதையை அடிப்படையாக வைத்து, சமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் துயரை ‘ராஜேஸ்வரி’ என்ற தலைப்பில் முதன் முதல் சுப்ரமணியம் எழுதிக் கொடுத்த கதையை ராஜா சாண்டோ படமாக்கினார்.

1931-32-33 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டார்.

1934-ல் நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த எம்.கே.தியாகராஜபாகவதரையும், எஸ்.டி. சுப்புலட்சுமியையும் ஹீரோ-ஹீரோயினாக போட்டு மேடையில் அவர்கள் நடித்த ‘பவளக்கொடி’ -நாடகத்தை படமாக்க ஆரம்பித்தார் கே.சுப்ரமணியம் அவர்கள். அழகப்ப செட்டியார் தயாரிப்பாளர்.

பாகவதருக்கு 1000 ரூபாய் எஸ்.டி. சுப்புலட்சுமிக்கு 2000 ரூபாய் டைரக்டர் கே.சுப்ரமணியத்திற்கு 700 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

படத்தில் 55 பாடல்கள்- படம் ஹிட்.

தன் முதல் படம் ‘பவளக் கொடியை’ சென்னையில் உருவாக்கிய சுப்ரமணியம் அடுத்து தான் தயாரித்த 6 படங்களையும் கல்கத்தா சென்று ஈஸ்ட் இண்டியா கம்பெனி - என்ற ஸ்டுடியோவில்தான் எடுத்தார்.

1936-ல் ‘பக்த குசேலா’-வைத் தயாரித்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி இந்தப் படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் நடித்ததுடன் 27 குழந்தைகளுக்கு தாயான குசேலன் மனைவி சுசீலை வேடத்திலும் நடித்திருக்கிறார்.

1937-ல் பாலயோகினி படம். புராணப்படங்களிலிருந்து சமூக சீர்திருத்த கருத்துக்களை உள்ளடக்கிய படம் தயாரிக்க ஆரம்பித்தார்.

தமிழில் வெளி வந்த முதல் குழந்தைகள் படம் பாலயோகினி. சுப்ரமணியம் தம்பி விஸ்வநாதன் மகளை -பேபி சரோஜாவை அறிமுகப்படுத்தினார். படத்தின் தாக்கம் வீட்டுக்கு வீடு பிறந்த குழந்தைக்கு சரோஜா என்று பெயர் வைக்க ஆரம்பித்தனர்.

200 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் மையப்பகுதியில் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்த SPRING GARDEN என்ற வனத்துக்குள் இருந்த பங்களாவை விலைக்கு வாங்கி ஸ்டுடியோவாக மாற்றிக் கொண்டார், கே.சுப்ரமணியம்

டைரக்டர் கே.சுப்ரமணியம் குடும்பத்துடன்

1938-ல் சேவா சதனம் - என்ற படத்தில் வரதட்சணைக் கொடுமையால் கிழவனுக்கு 2-ம் தாரம் 3-ம் தாரமாகும் இளம் பெண்களின் வேதனையைச் சொன்னார். திருச்சி ரயில்வேயில் பணியாற்றிய எஃப்.ஜி. நடேசய்யர் கிழவராகவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி இளம் பெண்ணாகவும் நடித்தனர். எம்.எஸ். திரையில் அறிமுகமானது இந்தப் படத்தில்தான்.

1939-ல் கல்கியில் வெளியான தியாகபூமி -படத்தை உருவாக்கினார். 1940-ல் பக்த சேதா- செருப்புத் தைக்கும் தொழிலாளி மீது பரந்தாமன் பிரியம் வைத்ததாகச் சொல்லும் கதை.

1941- கச்ச தேவயானி -படம் டி.ஆர். ராஜகுமாரி இதில் அறிமுகம்.

1943- எல்லா சாதிக்குழந்தைகளும் பரதம் கற்றுக் கொள்ள, ‘நிருத்யோதயா’ -நாட்டியப்பள்ளி துவக்கினார். மகள் பத்மா சுப்ரமணியம் இன்றும் நடத்தி வருகிறார்.

1952-ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாகக் காரணமானவர்களில் ஒருவர்.

1951-ல் ரஷ்யாவுக்கு தமிழக கலைஞர்களை கலாச்சார பரிமாற்றமாக டைரக்டர் சுப்ரமணியம் தலைமை ஏற்று அழைத்துப் போனார்.

1952-ல் இந்தி நடிக நடிகையரை அமெரிக்காவுக்கு அழைத்துப் போனார்.

ஒரு பிறப்பில் நாம் கற்கும் கல்வி எழு பிறப்புக்கும் பயன்தரும் என்கிறார் வள்ளுவர். கல்வி என்ற ஒரு தகுதியினால்தான் மூன்று நான்கு தலைமுறையாக டைரக்டர் கே.சுப்ரமணியம் குடும்பம் பெருமை பெற்றுள்ளது. இதைத்தான் வள்ளுவர்,

‘ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி- ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு டைத்து’ - என்கிறார்.

----

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x