Published : 09 Mar 2016 10:30 AM
Last Updated : 09 Mar 2016 10:30 AM

உஸ்தாத் ஜாகிர் உசேன் 10

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை

புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞரும், இசை இயக்குநரும், திரைப்பட நடிகருமான உஸ்தாத் ஜாகிர் உசேன் (Ustad Zakir Hussain)பிறந்த தினம் இன்று (மார்ச் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:



# மும்பையில் (1951) பிறந்தவர். இவரது தந்தை பிரபல இசைக் கலைஞர் அல்லா ராக்கா. மகனுக்கு 3 வயது முதலே தபேலா கற்பித்தார். பிறவி மேதையான இவர் 5-வது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.

# இளமைப் பருவம் மும்பையிலேயே கழிந்தது. செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ‘என் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், உனக்கென்று தனியான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்’ என்றார் தந்தை. அவரது ஆசைப்படியே, தபேலா இசையில் தனி முத்திரை பதித்தார்.

# இசைப் பயணம் மேற்கொள்வதை 11 வயதில் தொடங்கினார். 1970-ல் இசை நிகழ்ச்சி நடத்த அமெரிக்கா சென்றார். அதுமுதல் இவரது சர்வதேச இசைப் பயணம் தொடங்கியது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இவரது இசை ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு 150-க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

# ‘லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு’ என்ற இவரது முதல் இசை ஆல்பம் 1973-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆல்பங்களை வெளியிட்டார். இவரது ‘மேக்கிங் மியூசிக்’, கிழக்கு - மேற்கு ஃப்யூஷன் வகையின் தலைசிறந்த ஆல்பமாக கருதப்படுகிறது.

# உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவியுள்ளார். ஹாங்காங் சிம்பொனி, நியூஆர்லியன்ஸ் சிம்பொனி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார். அமெரிக்க இசைக் கலைஞர் பில் லாஸ்வெல்லுடன் இணைந்து ‘தபேலா பீட் சயின்ஸ்’ என்ற பிரம்மாண்ட இசைக் குழுவை நிறுவினார்.

# ‘வானப்பிரஸ்தம்’ என்ற மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்து, அதில் நடித்தார். இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் இது விருதுகளைக் குவித்தது.

# ‘இன் கஸ்டடி’, ‘தி மிஸ்டிக் மஸார்’ உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல திரைப்படங்கள், ஆவணப் படங்களிலும் தனியாகவும் பல்வேறு இசைக் குழுவினருடன் சேர்ந்தும் இசையமைத்துள்ளார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

# பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஜாகிர் அண்ட் ஹிஸ் ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும், ‘தி ஸ்பீக்கிங் ஹேண்ட்: ஜாகிர் உசேன் அண்ட் தி ஆர்ட் ஆஃப் தி இந்தியன் டிரம்’ ஆவணத் திரைப்படமும் பிரபலமானவை.

# பத்மஸ்ரீ விருதை 37 வயதில் பெற்றார். 1992-ல் ‘கிராமி’ விருது பெற்றார். தாளவாத்தியப் பிரிவுக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட விருது இது. மீண்டும் 2009-ம் ஆண்டிலும் ‘கிராமி’ விருது பெற்றார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். பாராம்பரிய இசைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு ஃபெலோஷிப் பெற்றவர்.

# அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவில் தற்போது வசித்து வருகிறார். இன்று 66-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்திய இசை மேதை உஸ்தாத் ஜாகிர் உசேனின் தபேலா ஒலி உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x